சௌதி இளவரசர்கள் சிறை வைக்கப்பட்ட ஆடம்பர ஹோட்டல் மீண்டும் திறப்பு?

ரிட்ஸ்-கார்ல்டன்

பட மூலாதாரம், AFP

கடந்த நவம்பர் மாதம் முதல் சௌதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தடுப்பு நடவடிக்கையின்போது டஜன்கணக்கான இளவரசர்கள் மற்றும் உயரதிகாரிகளை கைது செய்து அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசுஹோட்டல் மீண்டும் திறக்கப்படுகிறது.

ரியாத் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ரிட்ஸ்-கார்ல்டன் பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் முன்பதிவை துவக்கவுள்ளது.

இருநூறுக்கும் மேற்பட்ட இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் இந்த ஓட்டலிலும் மற்ற சில ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால், கேட்கப்பட்ட தொகையை அளித்த பல இளவரசர்களும், அதிகாரிகளும் அப்போதே விடுவிக்கப்பட்டனர்.

கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று அந்த ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள், அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரத்தில் இருப்பவர்களை அங்கு அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது எவ்வித எச்சரிக்கையுமின்றி வெளியேற்றப்பட்டனர்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அவர்கள் பல்லாயிரம் கோடிகளை திரும்ப செலுத்தும் பட்சத்தில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்டு ரிட்ஸில் அடைக்கப்பட்டவர்களில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழிலதிபரும் உலகின் செல்வந்தர்களுள் ஒருவருமான இளவரசர் அல்வலேட் பின் தலாரும் அடக்கம். அவர் இன்னும் அதிகாரிகளின் பிடியிலேயே உள்ளார்.

சௌதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சௌதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்

சிம்மாசனத்திற்கு போட்டியாளராக திகழ்ந்த இளவரசர் மிதேப் பின் அப்துல்லா உட்பட கைது செய்யப்பட்டவர்களில் பலரும் கேட்கப்பட்ட தொகையை அளித்தவுடன் விடுவிக்கப்பட்டனர்.

மூன்று வாரங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த இளவரசர் மிதேப் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலருக்கும் மேலான தொகையை அளிப்பதற்கு ஒப்புக்கொண்டவுடன் விடுவிக்கப்பட்டார்.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த ஹோட்டல் திறக்கப்படும் செய்தியை உறுதிசெய்ததுடன், பிப்ரவரி மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஹோட்டலில் தங்குவதற்கான முன்பதிவுகள் ஏற்கப்படுவதாகவும், ஆனால், அவை குறுகியகால அவகாசத்தில் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதை குறிப்பிட்டு முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சௌதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல், 100 பில்லியன் டாலர்கள் "பல தசாப்தங்களாக திட்டமிட்ட ஊழல் மற்றும் மோசடி மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

பல சாதாரண சௌதி மக்கள், தங்கள் நாட்டின் எண்ணெய் செல்வத்தில் குறிப்பிட்ட அளவாவது பொது மக்களுக்கு மறுவிநியோகம் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் ஊழலை சமாளிக்கும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :