ரான்சம்வேர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த இணைய குற்றவாளிகள்-ஆய்வு தகவல்

ரான்சம்வேர்கள் எவ்வளவு இலாபகரமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரான்சம்வேர்கள் எவ்வளவு இலாபகரமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

'ரான்சம்வேர்` மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை இணைய குற்றவாளிகள் சம்பாதித்துள்ளதாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மால்வேர்களை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் அமைப்பை கண்டறிவதற்காக, மால்வேர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற செயற்கையான நபர்களை கூகுள் உருவாக்கியது.

ரான்சம்வேர்கள் மூலம் கிடைத்த பெரும்பாலான பணத்தை 2016-ஆம் ஆண்டுதான் ஹேக்கர் குழுக்கள் சம்பாதித்துள்ளன. உலகின் முன்னணி ஹேக்கர் குழுக்களில் ஒன்றான `பிளாக் ஹேட்` குழுவினரிடம் பேசிய போது, இது எவ்வளவு லாபகரமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு வகையான ரான்சம்வேர்கள் பெரும்பான்மையான பணத்தை பெற காரணமாக அமைந்துள்ளன எனவும் மற்ற வகை ரான்சம்வேர்கள் தற்போது வெளியில் வரத் துவங்கியுள்ளன எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

`இது மிக இலாபகரமான சந்தையாக உருவாகியுள்ளது. மேலும் இது தொடர்ந்து செயல்படும்.` என தனது சகாக்களுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்திய கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் எலி பர்ஸ்டெய்ன் தெரிவிக்கிறார்.

ரான்சம்வேர் என்பது இயந்திரத்தை பாதித்து, பின்னர்  அதிலுள்ள குறியாக்கங்களை  அல்லது கோப்புகளை செயல்பட விடாமல் தடுக்கும் ஒரு தீங்கிழைக்கக் கூடிய மென்பொருளாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் தொழில்நுட்ப குற்றவாளிகளுக்கு பிணைத் தொகை செலுத்தினால் மட்டுமே அந்த கோப்புகளை மீண்டும் திறக்க முடியும். இந்த பணயத் தொகையை `பிட் காயின்` எனப்படும் மெய்நிகர் பணமாக மட்டுமே செலுத்த முடியும்.

ரான்சம்வேர்களை உருவாக்குபவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை கணக்கிட கூகுள் நிறுவனம் பல வித்தியாசமான முறைகளை செயல்படுத்தியதாக பர்ஸ்டெய்ன் தெரிவிக்கிறார்.

சைபர் தாக்குதல் காலம்:

இந்த செயற்கையான பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அந்த பணயத் தொகை எங்கே செலுத்தப்படுகிறது என்பதை கூகுள் கண்காணித்துள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், மேலும் பல வகையான ரான்சம்வேர்களை கண்டறிய பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் 3 லட்சம் கோப்புகளில் 34 கோப்புகளில் ரான்சம்வேர் ஊடுருவல் இருந்தது தெரியவந்தது.

இதில் மிகவும் பிரபலமான ரான்சம்வேர்கள், லாக்கி மற்றும் செர்பெர் குழுக்களிடமிருந்து வந்தது என அவர் கூறியுள்ளார்.

இந்த இரண்டு ரான்சம்வேர்களும் கடந்த ஆண்டு அதிக அளவு பணம் சம்பாதித்துள்ளன. லாக்கி ரான்சம்வேரானது 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்களும், செர்பர் ரான்சம்வேரானது 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களும் சம்பாதித்துள்ளது.

பிட்காயின் வலையமைப்பில் இந்த பணம் அனைத்தும் எங்கே செல்கிறது மற்றும் சேமிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பிட்காயின்கள் எப்படி மீண்டும் பணமாக மாற்றப்படுகின்றன என்பது குறித்தும் இதில் கண்டறியப்பட்டுள்ளது. ரான்சம்வேர்கள் மூலம் பெறப்பட்ட 95 சதவீதத்திற்கு மேலான பிட்காயின்கள், ரஷ்யாவின் BTC நிறுவனத்தின் மிண்ணனு பரிமாற்றம் மூலம் பணமாக மாற்றப்படுவதாக கூகுள் கண்டறிந்துள்ளது.

புதிய ரான்சம்வேர்கள் தங்களை விரிவாக்கிக் கொள்ள, அதிக இயந்திரங்களில் மால்வேர்களை பரப்பும் துணை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக பணம் அளிக்கின்றன.

பட மூலாதாரம், JEAN-PHILIPPE KSIAZEK

படக்குறிப்பு, புதிய ரான்சம்வேர்கள் தங்களை விரிவாக்கிக் கொள்ள, அதிக இயந்திரங்களில் மால்வேர்களை பரப்பும் துணை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக பணம் அளிக்கின்றன.

கடந்த ஜுலை 26-ஆம் தேதி, BTC மிண்ணனு பரிமாற்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அலெக்சாண்டர் வின்னிக், பண மோசடி வழக்கில் கிரேக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பிடியாணையை கொண்டு, காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

`ரான்சம்வேர் மோசடிக்கு பின்னால் இருக்கும் குழுக்கள், இதனை உடனடியாக நிறுத்தப் போவதில்லை` என தெரிவிக்கும் பர்ஸ்டெய்ன், `ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரான்சம்வேர்களுக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரான்சம்வேர்கள் போட்டியாக இருக்கின்றன` என கூறியுள்ளார்.

`ரான்சம்வேர்கள் மிக வேகமான வளரும் சந்தை` என்ற அவர், தற்போது சாம்சாம் மற்றும் ஸ்போரா ஆகிய ரான்சம்வேர்களுக்கு இடையே கடுமையான போட்டி இருந்து வருவதாக தெரிவிக்கிறார்.

புதிய ரான்சம்வேர் வகைகள் வேகமான தங்களை விரிவாக்கம் செய்து வருகின்றன. மேலும் இவை தங்கள் விரிவாக்கத்தை பெருக்க, அதிக இயந்திரங்களில் மால்வேர்களை பரப்பும் துணை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக அதிக பணம் அளிக்கின்றன.` என அவர் எச்சரித்துள்ளார்.

`இது தொழில்நுட்ப குற்றவாளிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட விளையாட்டு கிடையாது. இது கிட்டத்தட்ட அனைவருக்குமானது.` என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :