நாளிதழ்களில் இன்று: தலை கவசம் இல்லையெனில் கோவில்களில் பூஜை இல்லை

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில் இன்று நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு குறித்த செய்தி பிரதான இடத்தினை தினத்தந்தி நாளிதழில் பிடித்துள்ளது. "உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1050 காளைகள் வந்துள்ளன" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

தினமணி

அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து, 'அகலும் வெளிப்படைத்தன்மை` என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது தினமணி நாளிதழ். "நிதிச் சட்டம் 2017- இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் மூலம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி மட்டும்தான் அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் மூலம் பயன்பெறும் என்பதையும், எதிர்க் கட்சிகள் அரசியல் நன்கொடை பெறப் போராட வேண்டி இருக்கும் என்பதையும், நன்கொடை விவரங்களைப் பெறுவதில் தகவல் உரிமைச் சட்டத்தால் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்." என்கிறது தினமணி நாளிதழ் தலையங்கம்.

தி இந்து (தமிழ்)

சரவணன்

பட மூலாதாரம், The Hindu

`கல்விக்கு கை கொடுக்கும் விவசாயி` என்ற தலைப்பில் தேனி மாவட்ட விவசாயி குறித்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது தி இந்து தமிழ் நாளிதழ். படிக்காததால் தனக்கு நேர்ந்த அவமானங்கள் இனி யாருக்கும் நேரக் கூடாது என்பதற்காக சரவணன் என்ற விவசாயி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருவதாக விவரிக்கிறது அந்த செய்தி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் பலி ஆன செய்தி பிரதான இடத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் பிடித்துள்ளது. வெவ்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்களும் ஐந்து ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் பலியானதாக கூறுகிறது அந்த செய்தி.

தி இந்து (ஆங்கிலம்)

தலைகவசம்

பட மூலாதாரம், The Hindu

வாகன ஓட்டிகளை தலைகவசம் அணிய வைக்க புதிய உத்தி ஒன்றை கையாண்டுள்ளனர் ஒரிசா மாநில போலீஸார். அதாவது, ஜெகதீஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மா சரளா கோவிலை அணுகிய போலீஸார் இனி ஹெல்மட் அணியாமல் வருபவர்களின் வாகனத்துக்கு பூஜை செய்ய மறுக்குமாறு கோவில் பூசாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி பிரதான இடத்தை இந்து நாளிதழில் பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :