பிரிட்டனில் ரஷ்ய தொழிலதிபர் கொலை செய்யப்பட்டாரா?

ரஷ்ய உளவாளிக்கு பிரிட்டனில் நச்சு கொடுத்ததான விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர மோதல் அதிகரித்துவரும் நிலையில், ரஷ்ய தொழிலதிபர் நிகோலாய் குலுஸ்கோவின் மரணம் கொலையா என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகோலாய் குலுஸ்கோ

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, நிகோலாய் குலுஸ்கோ

68 வயதான குல்ஸ்கோவ் கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவர் கழுத்து நெறிக்கப்பட்டதால் மரணம் சம்பவித்திருக்கிறது.

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளைக் கொல்ல ரஷ்யா நோவிசோக் நச்சுப் பொருளை கொடுத்ததாக பிரிட்டன் குற்றம் சாட்டியிருப்பது ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த இரு விவகாரங்களும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரிட்டன் போலிஸ் கூறுகிறது.

புதினை இலக்கு வைக்கும் பிரிட்டன்

ரஷ்ய தொழிலதிபர் நிகோலாய் குல்ஸ்கோவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிபிசி நிருபர் டேனி ஷா கூறுகிறார். இந்த வழக்கு விசாரணை, தீவிரவாத தடுப்பு போலிஸ் பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டவர் என்று ரஷ்ய தொழிலதிபர் நிகோலாய் க்ளுஸ்கோவ் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதின்

பட மூலாதாரம், ALEXANDER NEMENOV

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின்

முன்னதாக, செர்கெய் ஸ்கிர்பாலுக்கு நச்சுக் கொடுத்ததன் பின்னணியில் ரஷ்ய அதிபர் புதின் இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கிரெம்ளின் காட்டமான பதிலடி கொடுத்திருப்பதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னப்போதையும்விட மிகவும் மோசமடைந்துள்ளன.

முன்னாள் ரஷ்ய உளவாளிக்கு நச்சு வேதிப்பொருளை கொடுப்பதற்கு அதிபருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுவது அதிர்ச்சியூட்டுவதாகவும், இது மன்னிக்க முடியாத அளவில் தூதரக விதிமுறைகளின் நாகரீகத்தை மீறுவதாக இருப்பதாகவும் கிரெம்ளின் கூறுகிறது.

முன்னதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகளை லண்டனில் இருந்து வெளியேற்ற பிரிட்டன் உத்தரவிட்டனர். இதற்கு பதிலடியாக பிரிட்டன் தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதை மாஸ்கோ உறுதிப்படுத்தியது.

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், WPA Pool

படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன்

1970 முதல் 1980 வரை இந்த நோவிச்சோக் நச்சு வேதிப்பொருளை சோவியத் ஒன்றியம் உருவாக்கியது.

ரசாயன ஆயுத மாநாட்டு உடன்படிக்கையை 1997இல் மாஸ்கோ ஏற்றுக்கொண்டது.

நரம்புகளை சேதப்படுத்தும் நோவிசோக் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தும் திட்டங்களில் எந்தவொரு நாடும் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கவில்லை என ரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் சர்வதேச உடன்படிக்கையை செயல்படுத்தும் அமைப்பு கூறுகிறது.

தன்னிடம் இருப்பதாக ரஷ்ய அறிவித்த கிட்டத்தட்ட நாற்பதாயிரம் டன்கள் ரசாயன ஆயுதங்களையும் அந்நாடு அழித்துவிட்டதாக கடந்த ஆண்டு ரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் அமைப்பு சான்றிதழ் வழங்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: