ஒரு பெண் என்றும் இளமையுடன் இருக்க முடியுமா? நடிகை அமலா கேள்வி

  • பத்மா மீனாட்சி
  • பிபிசி தெலுங்கு

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார்.

அமலா

பட மூலாதாரம், AkkineniAmala

பிபிசியின் பத்மா மீனாட்சி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அமலாவிடம் விரிவாக உரையாடினார்.

அந்த உரையாடலின் சாரத்தை இங்கு வழங்குகிறோம்.

என்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது என்பது பிரபலங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல, சாமான்ய பெண்களும் அத்தகைய அழுத்தங்களைதான் சந்திக்கிறார்கள் என்று அமலா தெரிவித்தார்.

நான் பல தளங்களில், துறைகளில் பணிபுரியும் பலரை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடும் போது தெளிவாக தெரிகிறது. இப்போதெல்லாம் தோற்றம் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது என்கிறார் அமலா.

ஏன் இந்த அழுத்தம்?

அமலா

பட மூலாதாரம், AkkineniAmala

பிரபலங்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து பேசிய அவர், "என் அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். நான் எங்காவது வெளியே சென்றால், அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி, 'என்ன கறுத்துவீட்டீகள்? என்ன பூசிவிட்டீர்கள்? என்பதுதான். இதை அவர்கள் சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அது எத்தகைய அழுத்தங்களை ஏற்படுத்தும். காலம் நகர நகர ஒருவரின் உருவமும் அவரது வயதிற்கு ஏற்றார் போல மாறும். இது இயல்பான ஒன்று. எப்படி ஒருவர் காலத்திற்கும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியும்?" என்கிறார்.

ஆரோக்கியம்

"ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது அவசியம்தான். ஆனால், அது நீங்கள் இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று பொருளாகாது. எழும் போது உற்சாகத்துடன் இருப்பது, சோர்வாக இருக்கும் போது சரியான நேரத்தில் உறங்க செல்வது அவசியம். இதன் மூலமாகதான் நமது வயதை எதிர்கொள்ள முடியும்." என்கிறார்.

குடும்பத்துடன் அமலா

பட மூலாதாரம், facebook/AkkineniAmala

"தொலைக்காட்சி நேர்காணலுக்காக வரும் ஊடகவியலாளர்கள், என்னிடம் நீங்கள் நாகர்ஜூனாவுக்காக என்ன சமைத்து கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் எங்கள் வீட்டு சமையல் கலைஞர் அதனை பார்த்துக் கொள்வார் என்று சொன்னால் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். நான் வேறு என்ன சொல்வது? உரையாடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சமூக பிரச்சனைகள் குறித்து பேசலாம். ஏன் பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும்." என்கிறார்.

கலையும் கூட

ஒரு திரைப்பட கலைஞரிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து பேசிய போது, "சினிமா கவர்ச்சியான தொழில் என்ற பார்வை மட்டும் இங்கு உள்ளது. இது ஒரு கலை வடிவமும் கூட. நல்ல கதை, நடிப்புடன் கூடிய திரைப்படத்தைதான் இங்கு மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். கட்டுகோப்பாக உடலை வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு நடிகரின் கடமைதான். ஆனால், அதற்காக எப்போதும் தோற்றத்தை குறித்து கவலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில பிறக்கும் போதே பேரழகுடன் பிறப்பார்கள். சிலருக்கு தங்களை அழகாக காட்டிக் கொள்ள மெனக்கெட வேண்டி இருக்கும். நாம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறோமா என்பதுதான் முக்கியம்" என்கிறார்.

அமலா

பட மூலாதாரம், AkkineniAmala

மேலும் அவர், "நாம் நம் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய விருப்பத்தின்படி வாழ்ந்தால், வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்." என்கிறார்.

"திரைத்துறை நல்விளைவுகளுக்காக மெனக்கட வேண்டும். ஆனால், தன்னை தற்காத்துக் கொள்ள, அதற்கே பல சவால்கள் உள்ளன. சினிமா குறித்த பாடம், சினிமாவின் எதிர்காலத்தை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்." என்கிறார்.

உரையாடலின் முடிவில் அவர் இவ்வாறாக சொன்னார், "பெண்கள் அனைத்து கற்பிதங்களையும் உடைத்து முன் வர வேண்டும். சக பெண்களுக்காக பேச வேண்டும், போராட வேண்டும். தோற்ற பொலிவை கடந்து எவ்வளவோ விஷயங்கள் உள்ளன." என்றார்.

காணொளிக் குறிப்பு, தெரு கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? உங்களை இந்த காணொளி கவரலாம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: