சூட்டிங்கிற்கு நோ சொன்ன அஜித்! அரசியல் பாதையில் சூர்யா, கமல்?

அஜித்

தமிழ்த் திரையுலகில் கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா திரைப்படம்

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் விக்ரம் வேதா. ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லவர் வகையில் எடுக்கப்படிருந்த இந்த படத்தில், மாதவன் போலீஸ் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முரட்டுத்தனமான ரவுடி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்த விக்ரம் வேதா திரைப்படத்தை கணவன் மனைவியான புஷ்கர் காயத்ரி டைரக்ட் செய்தனர்.

விக்ரம் வேதா

தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

விக்ரம் வேதா படத்தை இந்தியில் எடுப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த தகவலை இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ரோலில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின் இணையும் சூர்யா - கே.வி ஆனந்த்

சூர்யா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் அயன் படமும் ஒன்று. இந்த படத்தை கே.வி ஆனந்த் இயக்கியிருந்தார். அயன் வெற்றியடைந்ததை தொடர்ந்து மாற்றான் படத்திற்காக இந்த இருவரும் இணைந்தனர்.

சூர்யா

இரட்டை சகோதரர்கள் வாழ்கையை பதிவு செய்த மாற்றான் படம் தொழில்நுடப்ப ரீதியில் வெற்றியடைந்தாலும், வசூலில் தோல்வியடைந்தது. இதன் பின்பு சூர்யா, கே.வி ஆனந்த்தோடு கூட்டணி அமைக்காமல் இருந்தார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கே.வி ஆனந்தோடு கூட்டணி அமைத்திருக்கிறார்.

சூர்யா கே.வி ஆனந்த் இணையும் புது படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் கதை எழுதுகிறார். அதேபோல் ரஜினி நடிப்பில் 2 பாயிண்ட் ஓ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் சூர்யாவின் 37வது படத்தை தயாரிக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தை முடித்ததும் கே.வி. ஆனந்த் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த படம் அரசியல் கலந்த ஆக்‌ஷன் ஃபார்முலாவில் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் திரைக்கு வருகிறது மாரி 2

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் மாரி பார்ட் 2. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புது கதைகளத்துடன் தயாராகிறது.

இந்த படத்தையும் முதல் பாகத்தின் இயக்குனர் பாலாஜி மோகனே இயக்குகிறார். கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். மாரி 2 படத்தின் முதல் கட்ட சூட்டிங் குற்றாலம், தென்காசி ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்தது.

மாரி 2
படக்குறிப்பு, மாரி 2

இதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டனர். இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக மாரி 2 சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

மாரி 2 படத்தின் சூட்டிங் இதுவரை 40 சதவீதம் முடிந்ததாகவும், வேலை நிறுத்தம் முடிந்ததும், அடுத்தக் கட்டம் தொடங்கும் என்றும் இயக்குனர் பாலாஜி மோகன் கூறியுள்ளார். அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் மாரி 2 படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனார்.

கமலின் அரசியல் வருகைக்கு உதவுமா இந்தியன் 2?

1996ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் இந்தியன். ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தியன் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

SVC_OFFICIAl

பட மூலாதாரம், SVC_OFFICIAL

இந்த படத்தில் கமல்ஹாசனோடு, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை எடுக்கிறார் ஷங்கர்.

இதற்கான முதல்கட்ட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. கமல்ஹாசன் அரசியல் வருகையை ஒட்டி இந்தியன் 2 படம் எடுக்கப்படுகிறது. இதிலும் ஊழலுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார்.

கமல்

பட மூலாதாரம், Getty Images

அதேபோல் வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் அதிக காட்சிகளை வைத்து கமல்ஹாசனின் அரசியலுக்கு உதவும் வகையில் திரைக்கதையை எழுதியுள்ளாராம் ஷங்கர்.

கடந்த ஆண்டு படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் வரும் மே மாதம் சூட்டிங்கை தொடங்குகின்றனர். இதற்காக ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட் அமைக்கும் பணி தொடங்கவிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகளுக்காக கமல்ஹாசன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சுந்தரபாண்டியன் 2 படத்தில் மீண்டும் சசிகுமார்?

சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படங்களில் சுந்தரபாண்டியன் முக்கியதுவம் வாய்ந்த படம். கிராமத்து பின்னணியில் காதலையும், நண்பர்களின் துரோகத்தையும் சேர்த்து திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர்.

இவர் இதற்கு பிறகு இயக்கிய இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இந்த நிலையில் தன்னுடைய முதல் படமான சுந்தரபாண்டியனின் இரண்டாவது பாகத்தை எடுக்க தயாராகி கொண்டிருக்கிறார் எஸ்.ஆர் பிரபாகர்.

இதை நடிகர் சசிகுமார் மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார். சுந்தரபாண்டியன் 2 படத்திற்கான கதை விவாத பணிகள் இப்போது நடைப்பெற்று வருகிறது. சசிகுமார் தற்போது சமுத்திரகனி இயக்கும் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை முடித்து கொடுத்த பின் சுந்தரபாண்டியன் 2 படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் சசிகுமார்.

மிஷ்கின் படத்தில் ஹீரோவாகும் சாந்தனு

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை கொண்டிருக்கும் இயக்குனர்களில் மிஷ்கின் முக்கியமானவர். இவர் இயக்கும் படங்கள் தமிழ் சினிமா பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

மிஷ்கின் படத்தில் ஹீரோவாகும் சாந்தனு
படக்குறிப்பு, மிஷ்கின் படத்தில் ஹீரோவாகும் சாந்தனு

அன்பானாலும், த்ரில்லரானாலும் திரைக்கதையில் அதிகம் கொட்டி தீர்க்கும் மிஷ்கின், இறுதியாக விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்த நிலையில துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் விஷாலுடைய கால்ஷீட் பிஸியாக இருப்பதால் வேறு படத்திற்கு தயாராகிவிட்டார் மிஷ்கின்.

மிஷ்கின் இயக்கும் புது படத்தில் இயக்குனர் பாக்யராஜ்யின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தவிர மிஷ்கினோடு ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் முதன் முறையாக கை கோற்கவிருக்கிறார். மிஷ்கின் - சாந்தனு - பி.சி ஸ்ரீராம் ஆகியோர் இணையவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட 'பூமராங்' படப்பிடிப்பு

"பூமராங்" படப்பிடிப்பு
படக்குறிப்பு, "பூமராங்" படப்பிடிப்பு

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி வெற்றியடைந்த படம் இவன் தந்திரன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அதர்வாவை வைத்து "பூமராங்" என்ற படத்தை இயக்கிவருகிறார். பூமராங்கின் முதல் கட்ட சூட்டிங் தென் மாவட்டங்களில் 25 நாட்கள் நடைபெற்றது.

இதை முடித்து சென்னை திரும்பிய இயக்குனர் கண்ணன் இரண்டாம்கட்ட சூட்டிங்கை தொடங்க தயாரானார். இதற்காக பல நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கியிருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சூட்டிங்கை ரத்து செய்ய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டனர். இதனால் பூமராங் படக்குழுவினர் பாதிப்படைந்துள்ளனர்.

"பூமராங்" படப்பிடிப்பு
படக்குறிப்பு, "பூமராங்" படப்பிடிப்பு

இன்னும் 25 நாட்கள் சூட்டிங் மட்டுமே உள்ள நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுவதால் படத்தை தயாரித்து இயக்கும் ஆர் கண்ணனுக்கு செலவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவன் தந்திரன் படத்த வெளியிட்ட மூன்று நாட்களில் திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் படம் வெற்றியடைந்தும் ஆர் கண்ணனுக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில அடுத்திலும் ஒரு வேலை நிறுத்தத்தால் கண்ணன் பாதிகப்பட்டுள்ளார். இன்னும் ஐம்பது சதவீத காட்சிகள் படமாகப்படவேண்டியுள்ளது. அதை 25 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'விசுவாசம்' சூட்டிங்கிற்கு 'நோ' சொன்ன அஜித்!

அஜித்

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் விசுவாசம் படத்தின் சூட்டிங்கை இந்த மாதம் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக சூட்டிங்கை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதமே தொடங்க வேண்டிய விசுவாசம் படம் நடிகர்கள் தேர்வு முடியாததாலும், கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ததாலும் இரண்டு மாதங்கள் தள்ளி போனது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் சூட்டிங்கை தொடங்க இயக்குனர் தயாரானார்.

ஆனால் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தால் சூட்டிங் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுவும் விசுவாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

அஜித்

இதனால் சங்கதின் விதியை பின்பற்றுவாரா அல்லது எதிர்த்துக்கொண்டு சூட்டிங்கை நடத்துவாரா என்ற கேள்வி திரைத் துறையில் இருந்தது. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்பது என விசுவாசம் படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

எப்படியாவது சூட்டிங்கை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொல்ல, அஜித் முடியாது, இது அனைவருக்குமான போராட்டம். அது முடிந்த பிறகு தொடங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளாராம்.

இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடித்த பிறகே விசுவாசம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும். மேலும் ஹைத்ராபாத்தில் நடந்து வந்த செட் அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'கண்ணே கலைமானே': சீனு ராமசாமியை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி தயாரித்து நடிக்கும் படம் 'கண்ணே கலைமானே'. இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி டைரக்ட் செய்கிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

சீனு ராமசாமி

கிராமத்து பின்னணியில் உருவாகும் கண்ணே கலைமானே படத்தின் சூட்டிங்கை கடந்த மாதம் வாடிப்பட்டியில் தொடங்கினார்கள். மதுரை மாவட்டத்தில் இடைவிடாமல் நடைப்பெற்று வந்த கண்ணே கலைமானே சூட்டிங், 46 நாட்களில் முடிவடைந்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை போலவே கண்ணே கலைமானே படத்தையும் எடுத்துள்ளார் சீனு ராமசாமி. மேலும் ஒரு எதார்த்தமான படத்தில் எப்படி நடிப்பது என்பதை தங்களிடம் கற்றுக்கொண்டேன் என உதயநிதி ஸ்டாலின் சீனு ராமசாமியை புகழ்ந்துள்ளார்.

சீனு ராமசாமி

சூட்டிங் வேலைகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ்

சினிமா பின்னணி இல்லாமல் திரைத் துறைக்கு வந்து வெற்றியடைந்த சில நடிகர்களில் விக்ரம் ஒருவர். பிரபு தேவா, அஜித் போன்றவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேரி இன்று பெரிய நடிகராக வளர்ந்துள்ளார்.

துருவ்

விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார். தெலுங்கில் வெற்றியடையந்த அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் துருவ் ஹீரோவாக நடித்து வருக்கிறார். அந்த படத்தை பாலா இயக்குக்கிறார்.

இதற்கான முதல்கட்ட சூட்டிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விக்ரம் குடும்பத்தில் இருந்து விரைவில் அடுத்த ஹீரோ அறிமுகமாகவுள்ளார். அதாவது விக்ரம் அவர்களின் சகோதரி மகன் அர்ஜூமன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் நடந்துவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: