சென்னை புத்தகக் கண்காட்சி 2019: என்ன மாற்றங்கள் வேண்டும்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

2019ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் கடைகள், விற்பனை போன்றவை இருந்தாலும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஏற்பாடு இன்னும் மேம்பட வேண்டும் என்கிறார்கள்.

சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை புத்தகக் கண்காட்சி பார்க்கப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 810 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜனவரி 4 முதல் 20ஆம் தேதிவரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் கடைசி இரு நாட்களில் வாசகர்களின் வருகையும் புத்தக விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

"கொல்கத்தாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குத்தான் அதிக அளவில் வாசகர்கள் வருகிறார்கள். முன்பும் நல்ல கூட்டம் வரும் என்றாலும் 2006ஆம் ஆண்டிலிருந்துதான் பெரிய அளவில் இந்தக் கண்காட்சிக்கு ஊடக கவனம் கிடைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு சென்னை புத்தககக் கண்காட்சி பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக, வெற்றிகரமாக புத்தகக் கண்காட்சியை நடந்த முடிந்ததில்லை. சென்னையில் அது சாத்தியமாகியிருக்கிறது" என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணன் சுந்தரம்.

ஆனால், ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் விதம் குறித்த பல பதிப்பாளர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். "புத்தகக் கண்காட்சி பெரிதாக, கடைகளும் விற்பனையும் பெரிதாக அதிகரித்திருக்கிறது. ஆனால், வாசகர்களுக்கு கூடுதல் வசதிகள் தேவை. குறிப்பாக எந்தப் புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பது குறித்து ஒரு கேட்லாகை பபாசியே தயாரித்து அளிக்க வேண்டும். பதிப்பகங்களிடமிருந்து முன்கூட்டியே புத்தகம் குறித்த விவரங்களைப் பெற்று இந்தப் பட்டியலைத் தயாரிக்கலாம். தவிர, கழிப்பறை வசதி நிச்சயம் மேம்படுத்தப்பட வேண்டும்" என்கிறார் பாரதி புத்தகாலயத்தில் நாகராஜ்.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

இந்த முறை எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் தங்கள் பதிப்பகங்களின் சார்பில் தனித்தனி அரங்குகளை அமைத்திருந்தார்கள். இருவரும் தினமும் புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு வந்து வாசகர்களைச் சந்திப்பது, புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவதிலும் உற்சாகமாக ஈடுபட்டனர்.

"இடம், அரங்க அமைப்பு ஆகியவை நன்றாக இருந்தது என்றுதான் நான் சொல்லுவேன். ஆனால், வாசகர்களுக்கு கூடுதல் வசதிகளை பாபாசி செய்து தர வேண்டும். முதலில், எந்தக் கடையில் எந்த மாதிரி புத்தகம் கிடைக்கிறது என்ற தகவலை பபாசி வாசகர்கள் அறியும்படி செய்ய வேண்டும். மேலும் நிறைய புத்தகங்களை வாங்குபவர்கள் தூக்கிச் செல்ல சிரமப்படுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்களில் இருப்பதைப் போன்ற ட்ராலிகளை அளிப்பது பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் எழுத்தாளரும் தேசாந்திரி பதிப்பகத்தைச் சேர்ந்தவருமான எஸ். ராமகிருஷ்ணன்.

மேலும் ஒரு விஷயத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். "புத்தகக் கண்காட்சி என்பது வெறும் புத்தகங்களை விற்கும் இடமல்ல. எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திக்கும் இடமும்கூட. ஆனால், அப்படி சந்திப்புகள் நிகழ எந்த இடமும் ஒதுக்கப்படுவதில்லை. எழுத்தாளர்கள் அமர்வதற்கென 'ரைட்டர்ஸ் கார்னர்' என ஒரு இடத்தை ஏற்பாடு செய்யலாம். அதை புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் உள்ள மைதானத்தில்கூட அமைக்கலாம்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

இலங்கை
இலங்கை

புத்தகக் கண்காட்சியில் தொடர்ந்து வரும் பல முக்கியமான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகிறார் காலச்சுவடு கண்ணன். "புத்தகக் கண்காட்சி வளர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் அமைப்பும் சட்டதிட்டங்களும் மாறாமல் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக புத்தகங்களை பதிப்பிக்காதவர்கள் இந்த சங்கத்தில் இன்னும் உறுப்பினர்களாகத் தொடர்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு கண்காட்சியிலும் கடைகளை வாடகைக்கு எடுத்து, பிறரிடமிருந்து புத்தகங்களை வாங்கி விற்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். மீண்டும் அடுத்த வருட கண்காட்சியில்தான் அவர்களைப் பார்க்க முடிகிறது. இது போல ஒரு ஐம்பது கடைகளையாவது பார்க்க முடியும். மேலும் வாசிப்பிற்கும் பதிப்புத் துறைக்கும் சம்பந்தமில்லாத பல கடைகளுக்கு கண்காட்சிக்கு உள்ளே இடம் கொடுக்கப்படுகிறது" என்று சுட்டிக்காட்டுகிறார் கண்ணன்.

புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 820 கடைகள் இருப்பது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். "கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் பிரச்சனையில்லை. ஆனால், அவற்றை தமிழ், ஆங்கிலம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்றெல்லாம் வகைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால், ஒருவர் தனக்குத் தேவையான வரிசைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக்கொள்ள முடியும். மேலும் வியாபார ரீதியிலான சந்திப்புகளுக்கு இடம் ஏற்படுத்தித் தர வேண்டும். புத்தகங்களை ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ள முடியும். அல்லது போன் செய்து வாங்க முடியும். ஆனால், ஏன் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இணையத்தில் இல்லாத வசதிகள், வாய்ப்புகள் இங்கே கிடைக்க வேண்டும். ஆனால் புதுமையான கருத்துகளை பபாசி ஏற்பதில்லை" என்கிறார் கண்ணன்.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு புத்தக விற்பனை அதிகரித்திருப்பதாக பபாசி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 15 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்றிருப்பதாக அமைப்பு கூறுகிறது. "எனக்கு இதில் சந்தேகமிருக்கிறது. புத்தகக் கண்காட்சி முடிந்த இரவிலேயே இதை எப்படி தெரிவிக்கிறார்கள் எனப் புரியவில்லை. டிக்கெட் விற்பனை, வழங்கப்பட்ட பாஸ்களை வைத்து எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதை கணிக்க முடியும். விற்பனையை கணிக்க சில நாட்களாவது ஆகும்" என்கிறார் கண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களின் கூட்டம் புத்தக் கண்காட்சியில் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு குடும்பத் தலைவிகளின் வருகை அதிகமாக இருந்தது.

"புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் புத்தகங்களை வாங்க மட்டும் வருவதில்லை. அவர்கள் பல கருத்துகளையும் உள்வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக பூவுலகின் நண்பர்கள் அரங்கிற்கு வருபவர்கள் சூழல் குறித்து எங்களோடு பேச விரும்புகிறார்கள். ஆனால், அப்படி இடம் ஏதும் இல்லை. அம்மாதிரி இடவசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். தவிர, குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களை விற்கும் கடைகள் முக்கியத்துவம்பெற வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

இலங்கை
இலங்கை

இந்த விஷயங்களுக்கு மத்தியில், சமையல், ஆன்மீகம், ஜோதிடம், சுய முன்னேற்றம் போன்ற புத்தகங்களின் மீதான ஈர்ப்பு குறைந்து, நல்ல இலக்கியம், கதைகள் அல்லாத புத்தகங்கள், வரலாறு, சுற்றுச்சூழல் ஆகிய நூல்கள் அதிகம் விற்க ஆரம்பித்துள்ளன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் குறித்த புத்தகங்களின் வருகையும் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டு,பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தை ஒரு பதிப்பகம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்திருக்கிறது. இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்ற சஞ்சாரம் நாவல் 8 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது. " கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பு வழக்கமாக ஒன்று விற்றால் அதிகம். ஆனால், இந்த ஆண்டு சுமார் 20 தொகுப்புகள் விற்பனையாகியுள்ளது" என்கிறார் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன்.

2017ஆம் ஆண்டில் பெரியார் அன்றும் இன்றும் நூலையும் 2018ஆம் ஆண்டில் அம்பேத்கர் அன்றும் இன்றும் நூலையும் மிகக் குறைவான விலையில் பதிப்பித்த விடியல் பதிப்பகம் இந்த ஆண்டு மார்க்சியம் அன்றும் இன்றும் என்ற 3 தொகுதி அடங்கிய தொகுப்பை பெரும் எண்ணிக்கையில் விற்பனை செய்திருக்கிறது.

2019 சென்னை புத்தகக் கண்காட்சி: எப்படி இருந்தது?

புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் இளைப்பாறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் விற்கப்பட்ட உணவுகளின் விலை பலரையும் திகைக்க வைத்தது. "கடந்த ஆண்டுகளில் விற்பனையான உணவு தரமாக இல்லையென வாசகர்கள் கூறினார். அதனால், இந்த ஆண்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளிக்கலாம் என முடிவுசெய்தோம். பெரிய பெயர் பெற்ற நிறுவனமென்றால் கூடுதலாகத்தான் விலை இருக்கும்" என்கிறார் இந்தக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் மயிலை வேலன். உணவகத்திடம் வாடகை அதிகம் வாங்குவதால்தான் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, "வாடகை அதிகம்தான். ஆனால், இதே உணவகம் வெளியில் விற்பதைவிட உள்ளே அதிக விலைக்கு விற்கவில்லை" என்கிறார் அவர்.

மேலும் பதிப்பாளர்களின் வியாபார சந்திப்பிற்காக இடம் தேவை என்ற கோரிக்கை குறித்து கேட்டபோது, 4 ஸ்டால்களை எடுக்கும் பெரிய பதிப்பாளர்கள் தங்கள் ஸ்டால்களுக்குள்ளேயே அதற்கென ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ளலாமே என்கிறார் மயிலை வேலன்.

தமிழில் புத்தகங்களை வெளியிடுபவர்கள், இலக்கியம், சமூகம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், ஜோதிட நூல்கள் என கலந்தே வெளியிடுவதால் பதிப்பகங்களை வகைப்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது; அதனால்தான் வகைப்படுத்தி இடங்களைக் கொடுக்க முடிவதில்லை என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :