ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி தொடரில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி புதன்கிழமையன்று நேப்பியரில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

பட மூலாதாரம், Hagen Hopkins

விராட் கோலிக்கு நிகராக சர்வதேச அளவில் பேசப்படும் சில வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் அந்த அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார்.

அவருக்கு பக்கபலமாக மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர் போன்ற பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சில் நியூசிலாந்தின் ஆடுகளங்களில் நன்றாக செயல்படும் டிம் சவுத்தி , ட்ரெண்ட் போல்ட் போன்றோரும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியை பொறுத்தவரை வரலாற்றில் முதல்முறையாக மூன்று ஐசிசி விருதுகளை வென்ற விராட் கோலி மிக சிறந்த ஃபார்மில் உள்ளார். அதேபோல் முன்னாள் கேப்டனான தோனி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களை தவிர கேதர் ஜாதவ், ரோகித் சர்மா போன்ற பேஸ்ட்மேன்கள் நியூசிலாந்தில் உள்ள சிறிய மைதானங்களை தங்களின் பவர் பேட்டிங்கில் நன்றாக பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார். முகமது ஷமி, சாஹல், குல்தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொண்ட படை நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலை அளிப்பார்களா என்று விரைவில் தெரிய வரும்.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

இதுவரை இந்திய- நியூசிலாந்து இடையே நடைபெற்ற 101 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 51 முறையும், நியூசிலாந்து 44 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிவடைய, 5 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

அதே வேளையில் அண்மைய காலங்களில் நியூசிலாந்து அணி மிகவும் வலிமையாக காணப்படுகிறது.

சொந்த ஊரில் நடப்பதால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையாக உள்ள அந்த அணி இந்தியாவுக்கு கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மெர்ல்போர்ன் ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் விஜய் ஷங்கர் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சிறப்பாகவே பந்துவீசினார்.

உலகக்கோப்பை போட்டிகளில் மிடில் ஆர்டரில் தோனி இடம்பெறுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், ஹர்டிக் பாண்ட்யா போன்ற பல வீரர்களிடையே அணியின் நடுவரிசையில் (மிடில் ஆர்டர்) இடம்பெற போட்டி நிலவிவருகிறது.

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

பட மூலாதாரம், JEWEL SAMAD / AFP

ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெற்றி கொண்ட இந்திய அணி தற்போது மிகவும் நம்பிக்கையுடன் வலிமையாக காணப்படுகிறது.

ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, வரவிருக்கும் உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றும் என அதன் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ள இவ்வேளையில் நடைபெறும் இந்தியா-நியூசி தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதே வேளையில் போட்டி நடைபெறும் நேப்பியர் மைதானத்தில் இதற்கு முன்னர் சில போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :