குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: திருமாவளவன், தயாநிதி மாறன், வெங்கடேசன் பேசியது என்ன?

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: தமிழக மக்களவை உறுப்பினர்கள் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அதிமுக நீங்கலாகத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.

இந்த மசோதா குறித்து அந்த கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் பேசியவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

"தெற்கும்... வடக்கும் வேறு வேறு"

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுகவை சேர்ந்த சென்னை மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "இந்தியாவின் தெற்கும், வடக்கும் ஒரே மாதிரி சிந்திக்காது," என்றார்.

"இந்த சட்டத் திருத்த மசோதாவானது அரசமைப்பு சட்ட முகப்புரைக்கே எதிரானது," என்று அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: தமிழக மக்களவை உறுப்பினர்கள் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

"உள்துறை அமைச்சர் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக, மக்கள் அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், என் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை, வெல்ல வைக்கவில்லை" என்ற அவர், "நீங்கள் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற நீங்கள் தவறவிட்டுவீட்டீர்கள்," என்றார்.

நீங்கள் வட மாநிலங்களுக்கு மட்டுமான உள்துறை அமைச்சர் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான உள்துறை அமைச்சர். உங்கள் எண்ணங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமே வியாபித்திருக்கிறது. இலங்கை, மாலத்தீவும் நம் அண்டை நாடுகள்தான். பாகிஸ்தானிலிருந்து வருபவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறீர்கள். இலங்கையிலிருந்து வருபவர்களுக்குத் தர மறுக்கிறீர்கள். முப்பது ஆண்டுகளாக இலங்கை மக்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

"மாலத்தீவிலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அங்குள்ள இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? இந்தியாவை மதரீதியாக நீங்கள் துண்டாடுகிறீர்கள். சிறுபான்மையினர் இடையே கூட நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீர் இஸ்லாமியர்கள் இந்தியா வர விரும்பினால், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் வர விரும்பினால்...அதற்கு உங்கள் பதில் என்ன?," என்ற கேள்வியை முன் வைத்தார்.

"யாதும் ஊரே... யாவரும் கேளீர்"

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

"பிரதமர் மோதி "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று ஐ.நாவில் பேசுகிறார். ஆனால், உள்துறை அமைச்சரே மோதியின் சொற்படி நடக்கவில்லை. இருபது கோடி இஸ்லாமியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒரு அச்சத்திலேயே இருக்கிறார்கள். வலதுசாரி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பசுவின் பேரால் அவர்கள் கும்பல் கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் அவர்களை அச்சப்படுத்துகிறீர்கள். இந்த அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என நம்பப்படுகிறது. இப்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருக்கிறது இந்த மசோதா," என்றார்.

"அம்பேத்கர் இதையா சொன்னார்?"

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: திருமாவளவன், தயாநிதி மாறன், வெங்கடேசன் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், "சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் பெரும்பான்மை சமூகத்தின் பெருந்தன்மை அடங்கி இருக்கிறது; ஜனநாயகம் இருக்கிறது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறி இருக்கிறார்"

"பெரும்பான்மை எனும் பேரில் விருப்பம் போல் ஆளுவது சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிராக இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல. இதுவொரு பாசிச போக்காகும். நமது தேசம் பாசிசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக இந்த சட்டத் திருத்த மசோதா விளங்குகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் விலக்கி வைத்து அவர்களுக்கு இங்கே இடமில்லை என்று கூறுவது வெளிப்படையான பாசிசத்தின் உச்சமாக விளங்குகிறது," என்றார்.

திருமாவளவன்

பட மூலாதாரம், thirumaofficial

அடைக்கலம் தேடி வந்தவர்களை அரவணைப்பதுதான் மனித நாகரிகத்தின் உச்சமாகும் என்ற அவர், "நாடற்றவர்களாக அடைக்கலம் தேடி நம் தேசத்தை நோக்கி வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுதான் ஆள்வோருக்கான நாகரீகமாக இருக்க முடியும். ஆனால், ஆள்கின்ற அரசு வெளிப்படையாக இஸ்லாமியர்களை ஒதுக்கி வைப்பது, விலக்கி வைப்பது மிகவும் அநாகரீகமான போக்கு," என்றார்

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய சிபிஎம் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், "இந்தியாவை அடுத்த பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்போகிற மிகக் கொடிய ஒரு சட்டம் இது. ஒரு மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் குடியுரிமை வழங்கிட முடியாது. அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தம் இது,"

"இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த மரபுகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் முகப்புரையில் வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு இந்தச் சட்டம் நிறைவேறினால் இந்தியா தனது மனிதாபிமானமிக்க கோட்பாட்டினை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுகிற ஒரு கொடிய நாளாக இருக்கும் என்று நான் இங்குக் குறிப்பிடுகிறேன்." என்றார்.

இலங்கை குறித்து ஏன் பேசவில்லை?

மேலும் அவர், "பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் மத ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் தானா ஒடுக்கப்படுவதற்கான கருவி என்பதை இங்கே நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அகமதியாக்கள் உள்ளிட்ட பல குழுக்கள் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள், மலாலா ஏன் துரத்தப்பட்டார் என்பது உலகம் அறியும்"

"வன்முறைக்கு மதம் மட்டுமே அளவுகோல் இல்லை. மதத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க இயலாது. எந்த மதத்தையும் பின்பற்றாத கடவுள் நம்பிக்கை அல்லாத நாத்திகர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். மியான்மரைப்பற்றி, இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேச மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

சு. வெங்கடேசன்

பட மூலாதாரம், subburam.venkatesan

"இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கான அடிப்படை "சிங்கள பௌத்த பேரினவாதம்" என்பதையும் நாம் அறிவோம் எனவே இன்றைக்குத் தமிழ்நாட்டில் 24 மாவட்டத்தில் 107 முகாமில் 59716 பேர் இருக்கிறார்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்.

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது, அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும் அவமானத்தையும் கொடுக்கிறது என்பதை நாங்கள் இந்த அவையில் பதிவு செய்கிறோம். நாட்டில் எழும் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்குப் பதிலாக எண்ணற்ற புதிய பிரச்சனைகளை உருவாக்குவதற்கு சட்டமாக இந்த சட்டம் இருக்கிறது.

இந்த நாடாளுமன்றத்தின் முகப்பில் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துனைபேரும் தினசரி அந்த வாக்கியத்தைக் கடந்துதான் நாம் உள்ளே நுழைகிறோம். அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்தியா என்பது மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யூதர்களாக இருந்தாலும், ஏமனைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்சிகளாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், திபெத்தியர்களாக இருந்தாலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதனை தங்கள் இல்லமாகக் கருதலாம் என்று அந்த வாக்கியம் சொல்லுகிறது. இந்த சட்டத்திருத்தம் நிறைவேறினால் அவர்கள் இந்தியாவை இல்லமாக ஒருபோதும் கருதமாட்டார்கள்.

இங்கே உள்துறை அமைச்சர் சொன்னார் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஆளுகிற அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார். ஆளுகிற அதிகாரத்தைத் தான் மக்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்களே தவிர இந்தியாவைப் பிளக்கிற அதிகாரத்தை, வெறுப்பின்பால் இந்தியாவை மோசமான நிலைக்குச் செலுத்துகிற அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் சு.வெங்கடேசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: