‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தவறிய’ இந்திய கார்தினல்

  • பிரியங்கா பாடக்
  • பிபிசி
கத்தோலிக்க தேவாலயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கார்தினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ்

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த கார்தினல்களில் ஒருவரும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் இளம் சிறார்களுக்கான சீர்திருத்தம் தொடர்பாக இந்த வாரம் நடக்கும் ஒரு முக்கிய வத்திக்கான் மாநாட்டை ஒருங்கிணைத்த நால்வரில் ஒருவருமான பேராயர், தவறாக நடத்தப்பட்டதாக தன்னிடம் வந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் இன்னமும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தன்னிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தான் விரைந்து செயல்படவில்லை என்றும், இந்த புகார் தொடர்பாக போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்ததை அடுத்து, மும்பை பேராயரான கார்தினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் பிபிசியிடம் பேசினார்.

இந்தியாவின் மூத்த குருமார்களில் ஒருவரும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வத்திக்கான் மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஆஸ்வால்ட் கிரேசியஸ் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தன்னிடம் தெரிவிக்கப்பட்ட புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து ஒருவித அச்சமும், மெளனமும் நிலவுவதாக இந்திய கத்தோலிக்க பிரிவினர் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக விரைந்து செயலாற்றுதல் அல்லது ஆதரவு வழங்குவதில் இருந்து இந்த கார்தினல் தவறிவிட்டதாக இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் நாம் கண்டறிந்துள்ளோம்.

இது தொடர்பான முதல் புகார் 2015-ஆம் ஆண்டு காலகட்டமாகும்.

அவரது வாழ்க்கையை மாற்றிய அந்த மாலைப் பொழுதில் எந்த விசேடமும் இல்லை. தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை முடிந்து வீட்டுக்கு வந்த மகன் அந்தத் தாயிடம் தேவாலயத்தின் பங்கு பாதிரியார், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

''எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை'' என்று கூறினார் அப்பெண். ஆனால், இந்த நிகழ்வு இந்திய கத்தோலிக்க திருச்சபைக்கும் அவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என்றும் அவருக்குத் தெரியவில்லை.

இது தொடர்பாக அவரது உதவி கோரி சென்றவர் இந்திய கத்தோலிக்க திருச்சபை அமைப்பின் ஒரு மிக மூத்த பிரதிநிதி ஆவார்.

கத்தோலிக்க தேவாலயம்

பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக கூறப்படும் சம்பவம் நடந்த 72 மணி நேரத்துக்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மும்பை பேராயராகவும், அக்காலகட்டத்தில் ஆசிய பேராயர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய கத்தோலிக்க பேராயர் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராகவும் இருந்த ஆஸ்வால்ட் கிரேசியஸை சந்தித்துள்ளனர்.

அடுத்த போப்பாண்டவராக ஆஸ்வால்ட் கிரேசியஸ் நியமிக்கப்படலாம் என்று சிலர் கருதுகின்றனர். மேலும் இந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் குறித்து வத்திக்கானில் நடக்கும் உலக அளவிலான உச்சி மாநாட்டின் நான்கு முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் கிரேசியஸ் உள்ளார்.

தேவாலயங்களில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய பிரச்சனை நவீன காலங்களில் வத்திக்கானின் மிகப் பெரிய நெருக்கடியாக கருதப்படுவது குறித்தும், கத்தோலிக்க திருச்சபையின் நேர்மை குறித்தும் சில முடிவுகள் இந்த மாநாட்டின் முடிவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடங்கி, உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க திருச்சபைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களால் தடுமாறி வருகின்றன.

வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் தலைப்புச் செய்திகளாகிவிடுகின்றன. ஆனால், ஆசிய நாடுகளில் இந்த பிரச்சனை குறித்து சிறிதளவே வெளியே தெரிய வருகிறது.

கத்தோலிக்க தேவாலயம்

பாலியல் துஷ்பிரயோகம் குறித்து புகார் செய்வது சமூக ரீதியான களங்கம் என்று இந்தியா போன்ற நாடுகளில் ஒருவிதமான தயக்கம் நிலவுகிறது.

இப்பகுதியில் சிறுபான்மையினராக உள்ள ஏறக்குறைய 28 மில்லியன் கிறித்தவர்கள் மத்தியில் இது தொடர்பாக ஒருவித அச்சமும், மெளனமும் இருப்பதால், இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மையின் ஆழத்தைக் கண்டறிவது இயலாத ஒன்றாக உள்ளது.

வத்திக்கான் மாநாட்டின் நான்கு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் சிகாகோவை சேர்ந்த கார்தினல் பிளேஸ் குபிச், இளமை பருவத்தினருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஒரு தீர்மானமான முடிவு ரோம் நகரத்தில் எடுக்கப்படும் என்று கூறினார்.

குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திடவும் இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவை உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்கள் பின்பற்றும் என்று மேலும் அவர் கூறினார்.

இந்த பிரச்சனையில், திருச்சபையின் பொறுப்பு மற்றும் பங்கு குறித்து மாநாட்டில் இரண்டாவது நாளில் விவாதம் நடக்கவுள்ள நிலையில், இரண்டாவது நாள் நிகழ்வுகளை ஆஸ்வால்ட் கிரேசியஸ் பேராயர் துவக்கி வைக்கவுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் மிக முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது இந்தியாவில் சிலரை வருத்தமடைய செய்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதில் அவரது கடந்தகால செயல்பாடு கேள்விகுறியாக உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிபிசியிடம் இது தொடர்பாக பேசியவர்கள், இது போன்ற பிரச்சனையை அவரிடம் தாங்கள் எடுத்துச் சென்றபோது மிக குறைந்த உதவி மட்டுமே அவர் தந்தார் என்கின்றனர்.

''எனது குழந்தையிடம் பாதிரியார் நடந்து கொண்டது குறித்தும், இதனால் எனது மகனுக்கு அதிக வலி இருப்பதாகவும் கார்தினலிடம் கூறினேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அவர், தான் ரோம் நகரம் செல்ல ஆயுத்தமாக இருப்பதாக கூறினார். எனது மனம் மிகுந்த வேதனைப்பட்டது,'' என்று அப்பெண் கூறினார்.

''ஒரு தாயாக என் மகனுக்கு நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நான் கார்தினாலை சந்தித்து முறையிட்டேன். ஆனால், அவருக்கு எங்களின் புகாரை கேட்கக்கூட நேரமில்லை. ரோம் செல்வதில்தான் ஆர்வமாக இருந்தார்,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க தேவாலயம்
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்

இது தொடர்பாக தாங்கள் மருத்துவ உதவி கோரியதாகவும், ஆனால் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் அந்த குடும்பம் கூறுகிறது.

எங்களிடம் இது குறித்து பேசிய கார்தினால், இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தபோது தனக்கு வலித்தாகவும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தனக்கு தெரியாது எனவும், அவ்வாறு தெரிந்திருந்தால் அதனை வழங்க உதவியிருப்பேன் என்றும் கூறினார்.

இந்த புகார் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் தான் உடனடியாக ரோம் சென்றுவிட்டதாக கார்தினால் ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் இந்த புகாரை தெரிவிக்காததன் மூலம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) 2012 இந்திய சட்டத்தை கர்தினால் கிரேசியஸ் மீறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு நபர் மீதான பாலியல் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை போலீசாரிடம் தெரிவிக்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும் என இந்த சட்டத்தின் விதிகள் கூறுகின்றன.

அடுத்த நாளில் இதுகுறித்து ஆயரிடம் கார்தினால் தொலைபேசியில் பேசியபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்களாகவே போலீசாரிடம் புகார் அளித்துவிட்டதாக ஆயர் அவரிடம் கூறியுள்ளார்.

போலீசாரிடம் உடனடியாக இந்த குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்காதது குறித்து வருந்துகிறீர்களா என்று கேட்டதற்கு, ''நான் நேர்மையான நபர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு 100% தெளிவு இல்லை. போலீசாரை உடனே அணுகி இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்,'' என்று கார்தினால் பதிலளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் பேசி அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து மதிப்பீடு செய்யும் கடமையில் தான் இருந்ததாக கார்தினல் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க தேவாலயம்

கார்தினலுடன் நடந்த அந்த கூட்டத்துக்கு பிறகு மருத்துவரிடம் செல்வது என்ற முடிவுக்கு அந்த குடும்பம் வந்தது. 'எனது மகனை பார்த்த அந்த மருத்துவர், இவனுக்கு ஏதோ நடந்துள்ளது. மேலும் இது போலீஸ் விசாரிக்க வேண்டிய வழக்கு என்பதால் ஒன்று நீங்கள் புகார் செய்யுங்கள். அல்லது நானே செய்ய நேரிடும் என்றார்,'' என சிறுவனின் தாயார் விவரித்தார்.

''அதனால் அன்று இரவே நாங்கள் போலீசாரிடம் புகார் அளித்தோம்,'' என்று அவர் கூறினார். போலீசார் ஏற்பாடு செய்த மருத்துவ சோதனை ஒன்றில் சிறுவன் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு ஆளானது தெரியவந்தது.

பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிபிசியிடம் பேசிய இந்த திருச்சபையின் தற்போதைய பங்கு பாதிரியார் ஒருவர், அந்த குறிப்பிட்ட பங்கு பாதிரியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இந்த கார்தினலின் கவனத்துக்கு செல்வது இது முதல் முறையல்ல என்று தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய இவர், ''குற்றம் நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை நான் சந்தித்தேன். இந்த பங்கு இருக்கும் மறைமாவட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட பங்கு பாதிரியார் மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து பல கடுமையான வதந்திகள் உலவின. ஆனாலும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கும், ஒரு பங்கிலிருந்து இருந்து மற்றொரு பங்கிற்கும் அவர் மாறிக்கொண்டே இருந்தார். தனக்கு இது போன்ற விஷயங்கள் எதுவும் தெரியாது என்று கார்தினல் என்னிடம் நேரடியாக கூறினார்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து நடந்த உரையாடல்களை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று கார்தினல் கூறினார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது சந்தேகங்கள் இருந்ததாக தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

இது போன்ற மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கர்தினால் தாமதமாகத்தான் செயல்பட்டுள்ளாரா என்று பிபிசியின் விசாரணையில் அறிய விரும்பினோம்.

இவர் மும்பை கத்தோலிக்க திருச்சபை பேராயராக ஆன இரண்டே ஆண்டுகளில், அதாவது ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை கண்டறிந்தோம்.

கடந்த 2009 மார்ச் மாதத்தில், தியானங்கள் நடத்தும் ஒரு பங்கு பாதிரியார் மீது பாலியல் குற்றம் சுமத்திய ஒரு பெண், கார்தினல் கிரேசியஸை அணுகியுள்ளார். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட பங்கு பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் கார்தினல் எடுக்காததால், பெண் கத்தோலிக்க ஆர்வலர்கள் குழுவொன்றை தான் அணுகியதாக கூறினார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கார்தினலுக்கு அவர்கள் அழுத்தம் தந்துள்ளனர்.

கடும் அழுத்தத்திற்கு பிறகு, கடந்த 2011 டிசம்பரில் இது தொடர்பாக விசாரணை கமிட்டி ஒன்றை இவர் அமைத்துள்ளார். ஆறு மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்ட பங்கு பாதிரியார் அதே பங்கில் தனது பணியில் தொடர்ந்துள்ளார்.

''நடவடிக்கை எடுக்க கோரி கார்தினலுக்கு நாங்கள் மூன்று லீகல் நோட்டீஸ்களை அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க தவறினால், இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு செல்லும் என்று அவரை பயமுறுத்தினோம்,'' என்று இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வெவ்வேறு தேவாலயங்களில் பெண்கள் அமைப்பில் பணியாற்றியுள்ள கத்தோலிக்கரான விர்ஜீனியா சல்தானா தெரிவித்தார்.

''குற்றம் சாட்டப்பட்ட பங்கு பாதிரியார் தான் சொல்வதை செவிமடுக்கவில்லை'' என்று கார்தினால் பதில் அளித்தார்.

கத்தோலிக்க தேவாலயம்
படக்குறிப்பு, விர்ஜீனியா சல்தானா

இந்த காலகட்டத்தில் அந்த தேவாலய பங்கை விட்டு தான் வெளியேறியதாக தெரிவித்த சல்தானா. ஏனெனில், குற்றம் சாட்டப்பட்ட அந்த பங்கு பாதிரியார் திருப்பலி பூசை செய்வதை என்னால் பொறுத்து கொள்ளமுடியவில்லை. அந்த தேவாலயத்துக்கு செல்ல நான் விரும்பவில்லை,'' என்று குறிப்பிட்டார்.

இறுதியாக அந்த பங்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட பங்கு பாதிரியார் நீக்கப்பட்டார். ஆனால், அவரது நீக்கத்துக்கான காரணம் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

அக்டோபர் 2011இல் அந்த கார்தினலால், தனிப்பட்ட வகையில் முடிவு செய்யப்பட்ட தண்டனை, 'வழிகாட்டப்பட்ட பின்வாங்கலாகவும் சிகிச்சை நோக்குடைய உளவியல் ஆலோசனையாகவும்' இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் அதற்கான கால அளவு குறித்து நாங்கள் அழுத்தம் தந்து கேட்டபோது, 'அது ஒரு சிக்கலான வழக்கு' என்று கார்தினல் கூறினார். குருமடத்தில் (seminary) தங்கவைக்கப்பட்ட அந்த பாதிரியார், தற்காலிகமாக வேறொரு பங்கில் பணியில் அமர்த்தப்பட்டார். புனித பூசைகளையும் அவர் நடத்துகிறார்.

இதனிடையே, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட இந்த சிறாரின் குடும்பம், எதைச் சுற்றி தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொண்டோமோ அந்த அமைப்பே தங்களை கைவிட்டுவிட்டதாக கருதுகின்றனர்.

''தனியாக நாங்கள் போராடினோம்'' என்று சிறுவனின் தாயார் கூறுகிறார்.

தேவாலய பங்கினால் தாங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தங்களின் சமூகத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

'போலீசாரிடம் புகார் செய்தபிறகு, நாங்கள் தேவாலயத்துக்கு செல்லும்போது, எங்களிடம் யாரும் பேச மாட்டார்கள். பிரார்த்தனையின்போது அருகில் அமரமாட்டார்கள். நான் யார் அருகிலாவது சென்று அமர்ந்தால், அவர்கள் விலகி அமர்வர்' என்று அப்பெண் மேலும் கூறினார்.

''இந்த விரோத மனப்பான்மையால் நாங்கள் அந்த தேவாலயத்தை விட்டே வெளியேறினோம். இது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் எங்கள் வீட்டையும் மாற்ற நேர்ந்தது. எல்லாவற்றையும் விட்டு நாங்கள் சென்றோம்'' என்றார் அவர்.

இதுபோன்ற விரோத மனப்பான்மை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இது குறித்து புகார் அளிப்பதை மேலும் கடினமாக்கும் என்று தேவாலய பங்கு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்காத குருமார்கள் மற்றும் விரோத மனப்பான்மை கொண்ட சமூக கட்டமைப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பலரும் தங்கள் குரல்கள் வலுவிழந்து வருவதாக உணர்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :