காளை வளர்ப்பில் லாபமீட்டும் கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை #BBCShe

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
காளை வளர்ப்பில் ஈடுபடும் பெண்

ஈரோடு மாவட்டம் காங்கேயம் கிராமத்தில் இனவிருத்தி காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 51 வயதான சௌந்தரம் ராமசாமியிடம் 21வயது வணிகவியல் பட்டப்படிப்பு மாணவி மதுமிதா கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.

சமீபத்தில் கோவையில் நடத்தப்பட்ட பிபிசி ஷி (BBC SHE) நிகழ்ச்சியில் பெண்கள் எந்த வகையான செய்திகளை படிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டபோது, கிராமங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதில்லை, அவர்களின் கதைகளை படிக்க ஆர்வம் இருப்பதாகவும், கிராமத்தில் உள்ள பெண்ணின் கதையை பிபிசி ஷீ வெளிக்கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மாணவிகளுடன் நடத்தப்பட்ட கருத்தாய்வின்போது அவினாசிலிங்கம் கல்லூரி மாணவி மதுமிதா கருத்துத் தெரிவித்தார்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் அதிகஅளவில் பெண் தொழில்முனைவோர் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் பத்துலட்சம் நிறுவனங்களை பெண்கள் நடத்துகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

அந்த பத்து லட்சத்தில் ஒருவராக இருக்கும் காங்கேயத்தில் உள்ள சௌந்தரம் ராமசாமியின் வெற்றிக்கதையைக் கேட்பதற்காக, பிபிசி ஷீ குழுவினர், மதுமிதாவுடன் அந்த கிராமத்திற்குச் சென்றார்கள். சௌந்தரத்தின் காளை வளர்ப்புக் கலை பற்றி விரிவாகக் கேட்டோம்.

Presentational grey line
Presentational grey line

தொடக்கத்தில் விவசாய வேலைகளை செய்துவந்த சௌந்தரம், மாடு ஈன்ற காளையை விற்றுவிடாமல், வளர்த்துள்ளார். அதன் உறுதியும், திடமும் இனவிருத்திக்கான காளை அது என்பதை தனது குடும்பத்தாரும், காளை வளர்ப்பில் அனுபவம் கொண்டவர்களும் கூறவே, மேலும் இரண்டு காளைகளை வாங்கி வளர்த்தார்.

''வியாபாரத்திற்கு விளம்பரம் வேண்டாம்''

''காங்கேயம் இனம் காளைகள் அழிந்துவரும் நிலையில் இருந்ததாலும், நாங்கள் வளர்க்கும் காளைகள் உறுதியோடு, நல்ல கன்றுகளை ஈனும் என்பது தெளிவானதால், காளை வளர்ப்பில் முழு உழைப்பையும் செலுத்த முடிவுசெய்தேன். எனக்கு நல்ல பலன் கிடைத்தது, பல ஊர்களில் இருந்தும் என் காளைகளின் தரத்தை அறிந்தவர்கள் மற்ற மாடு வளர்ப்பவர்களுக்கு அறிமுகம் செய்து அனுப்பிவைப்பார்கள். என் வியாபாரத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் ஒரு பதாகை கூட வைக்கவில்லை,'' என்று சௌந்தரம் கூறியதை மதுமிதாவால் நம்பமுடியவில்லை.

சௌந்தரம் ராமசாமி

வணிகவியல் பயிலும் மதுமிதா பல நிறுவனங்களின் தோற்றம், வரலாறு என்பதை படித்ததோடு ஒரு வியாபாரத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம் என்பதை பாடமாக கற்றவர். ''விளம்பரம் இல்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக சௌந்தரம் கடந்த இருபது ஆண்டுகளாக தனது தொழிலில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டை செய்யும்போதே விளம்பரத்திற்குத் தேவையான நிதியை முதலில் முடிவுசெய்துவிடுவார்கள் என்றுதான் படித்திருக்கிறேன்,'' என்றார் மதுமிதா.

''அடகு வைக்காதே, கடன் வாங்காதே''

அடுத்தடுத்து மதுமிதாவிற்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. குறிப்பாக எந்த பயமும் இல்லாமல் சௌந்தரத்தின் சேலை உடுத்திய ஒல்லியான உருவம், கம்பீரமான இரண்டு, மூன்று காளைகளை தனியாக வெகு எளிதாக கயிற்றில் கட்டி நடந்துவரும் லாவகம் அவரை ஈர்த்ததாகக் கூறுகிறார். சௌந்தரம் தொழிலுக்காக அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெறுவதில்லை என்பது மேலும் ஆச்சரியம்.

காணொளிக் குறிப்பு, காளை வளர்ப்பின் மூலம் நிறைவான வருமானம் #BBCShe (காணொளி)

''கடன் வாங்காமல் சிறு முதலீட்டில் லாபம் பெற்று, அதை மீண்டும் முதலீடாக மாற்றிக்கொள்வேன். உதாரணமாக, மாடு வளர்ப்பில் ஈடுபட, முதலில் சிறு தொகையைக் கொண்டு கோழிவளர்ப்பில் சிறிதுகாலம் ஈடுபட்டு, லாபத்தைக் கொண்டு மாடுகளில் முதலீடு செய்யலாம். அதிக வட்டிக்கு முதலீடு செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தொழிலில் சீரான வளர்ச்சி இருந்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்பது என் தொழில் யுக்தி,'' என்கிறார் சௌந்தரம்.

மற்ற வணிகர்களுக்கு சௌந்தரத்தின் தொழில் யுக்திகள் பின்பற்றக்கூடியவையாக இருக்குமா என மதுமிதா கேட்டபோது, ''பலரும் நகை அடகு, வீடு என சொத்தை அடகுவைத்து இழந்ததைப் பார்த்துள்ளேன். என்னுடைய தொழிலில் எனக்கு தேவையான அளவு லாபம் இருந்தால் போதும், என்னுடைய காளைகளை வளர்ப்பதற்கும், என்னுடைய வேலைக்கும் சரியான கூலி கிடைத்தால் போதும் என்பது என் லாபக் கணக்கு. வெறும் லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து என் வேலையை செய்யவில்லை.என் தொழில் என்னை முன்னேற்றுவதோடு, காங்கேயம் காளை இனத்தையும் காப்பாற்றி வருகிறது என்பதே எனக்குப் பெருமை,'' என்றார் சௌந்தரம்.

சீரான வளர்ச்சியில் சிகரம் தொடலாம்

1998ல் சௌந்தரம் அம்மா காளை வளர்ப்பை தொடங்கியபோது, இரண்டு காளைகள் மட்டுமே இருந்தன. இனவிருத்திக்காக மாடுகளை கொண்டுவரும் விவசாயிகளிடம் ஒரு மாட்டிற்கு ரூ.50 பெற்றுவந்த அவர், தற்போது ரூ.500 என ஈட்டுகிறார். 2018ல் அவரிடம் 11 காளைகள், ஆறு மாடுகள் உள்ளன. இதோடு முருங்கைக், கீரை, கிழங்கு, காய்கறிகள் என இயற்கை விவசாயத்திலும் ஈடுபடுவதாக சொல்கிறார்.

வளர்ப்புக் காளைகள்

மேலும் தொழில் நுணுக்கங்களை விவரித்த அவர், பருத்தி, புண்ணாக்கு, சுண்டல், விதவிதமான பயறுகள் போன்றவற்றை வாங்கி அரைத்து, பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வது முதல், மழை வந்ததும் மேய்ச்சல் நிலத்தை உழுது புற்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்ப்பது என திட்டமிட்டுவேலை செய்வது கால்நடைவளர்ப்பில் முக்கியம் என்கிறார்.

''விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பது சௌந்தரம் அம்மாவுக்கு சிறுவயதில் இருந்தே பரிச்சயமான ஒன்று என்பதால், அவருக்கு நிறைய புரிதல் உள்ளது. எங்களின் வணிகவியல் பாடங்களில், ஒரு நிறுவனத்தை நடத்த முக்கியமான தகுதி தலைமை பண்பு என்பதை படித்தேன்.

Presentational grey line
Presentational grey line

சௌந்தரம் அம்மாவிடம் நேரடியாக பாடத்தைக் கற்றுக்கொண்டதுபோல உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றபடி, விலை குறைவான சமயத்தில் காளை, மாடுகளுக்கு தேவையான உணவு தானியங்களை வாங்கிக்கொள்கிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு காளைக்கும் நேரம் ஒதுக்கி அவைகளின் உடல்நலத்தை சோதிக்கிறார், அவை உணவு எடுத்துக்கொண்டனவா, பலமாக உள்ளனவா என்று தெரிந்துகொள்கிறார்.

ஒவ்வொரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும் போதும் தனது சொந்த பிள்ளைகளிடம் பேசுவதுபோல காளைகளை அணுகுகிறார்,'' என வகுப்பறையில் வெறும் பாடமாக கற்றதற்கும் நிஜ உலகில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்துகொண்டதாக கூறினார்.

`இளம் தலைமுறையினருக்கு பயிற்சிதர தயார்'

தனது இரண்டு மகன்களையும் கால்நடைவளர்ப்பில் வரும் வருமானத்தை வைத்தே படிக்கவைத்ததாகவும், தனது குடும்ப தேவைக்கும் என்றும் குறைவில்லாத வருமானத்தை தனது காளைகள் தருவதாகவும் கூறினார் சௌந்தரம்.

சௌந்தரம் ராமசாமி

இளம் தலைமுறையினருக்கு கால்நடை வளர்ப்பில் பயிற்சி அளிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறும் சௌந்தரம், ''என்னுடைய தொழிலில் நான்தான் முதலாளி, தொழிலாளி. என்னுடைய காளைகளை கவனிக்க ஆட்களை சேர்க்கமுடியாது. சில சமயம் என் கணவர் கூட இந்த காளைகளை பிடிக்க பயப்படுவார். சிறுவயதில் இருந்து காளைகளிடம் பழகுவதால், அவைகளை என்னுடைய மகன்களை அழைப்பதுபோலவே பையா என்றுதான் கூப்பிடுவேன். காளை பிறந்தால், தாய் மாட்டின் பாலை எங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொள்ளமாட்டோம். தாய்மாட்டின் முழு பாலும் குடித்துவளரும் காளை அதிக பலத்துடன், உறுதியான இனவிருத்தி காளையாக வளரும்,'' என தன் தொழில்பற்றி விரிவாக பேசினார் சௌந்தரம்.

ஒரு நாள் முழுவதும் சௌந்தரம் அம்மாவிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் தனக்கு உதவியாக இருந்ததாக கூறிய மதுமிதா, சௌந்தரம் போன்ற பல கிராமங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் பலரின் கதைகளையும் பிபிசி தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் என்று புன்னகையுடன் வேண்டுகோள் வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: