யேமன் போர்: சௌதிக்கான ராணுவ ஆதரவை விலக்க அமெரிக்க செனட் சபை தீர்மானம்

யேமன் போர்: சௌதிக்கான ராணுவ ஆதரவை விலக்க செனட் சபையில் தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images

பத்திரிகையாளர் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சௌதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது.

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள '1973 போர் அதிகாரங்கள்' சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சௌதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தாலும், அவர்களது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 56-41 என்ற கணக்கில் அந்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிநாட்டு ராணுவ செயல்பாடு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.

ஆனால், இந்த தீர்மானம் ஒருவித கண்துடைப்பாக பார்க்கப்படுவதால் இது சட்டமாக மாற்றப்படாது என்றே கருதப்படுகிறது.

ஜமால் கஷோக்ஜி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜமால் கஷோக்ஜி

செனட்டில் என்ன நடந்தது?

இந்த 'போர் அதிகார தீர்மானம்' அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை யேமனில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருபவர்களை தவிர்த்து மற்ற அனைத்து அமெரிக்க ராணுவ வீரர்களும் விலக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதற்கு, சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை குற்றஞ்சாட்டும் தீர்மானம் ஒருமனதாக செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் சௌதி அரேபியாவின் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை அமெரிக்கா நிறுத்திக்கொண்ட நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம் சட்டமாக இயற்றப்படும்பட்சத்தில் மீண்டும் அமெரிக்காவால் சௌதியின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொள்ள முடியாது.

செனட் உறுப்பினர்களின் வாதம் என்ன?

அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தை சேர்ந்த செனட் உறுப்பினரான பெர்னி சாண்டர்ஸ், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் மைக் லீயால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை வெகுவாக பாராட்டினார்.

யேமன் போர்: சௌதிக்கான ராணுவ ஆதரவை விலக்க செனட் சபையில் தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images

"சௌதி அரேபியாவின் சர்வாதிகார அரசாங்கத்தின் ராணுவ சாகசங்களில் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என்று இன்று தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

"உலகின் மோசமான மனிதாபிமான பேரழிவின் பகுதியாக அமெரிக்கா தொடர்ந்து இருக்காது" என்பதை இந்த தீர்மானம் உலகிற்கு பறைசாற்றுவதாக அவர் மேலும் கூறினார்.

எம்.எஸ்.என்.பி.சி செய்தி நிறுவனத்திடம் பேசிய குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் பாப் கோர்க்கர், "எனது கருத்துப்படி, சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால், அவர் மீதான குற்றச்சாட்டு 30 நிமிடங்களில் நிரூபிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது யேமனில்?

அரபு நாடுகளிலேயே, யேமன் நாடுதான் மிகவும் வறிய நாடு. குறைந்து வரும் எண்ணெய் மற்றும் தண்ணீர் வளம் அதன் பிரச்சனைகள். மோதல் ஓராண்டுக்கு முன்னர் தொடங்கியதிலிருந்து, அதன் அடிப்படைக் கட்டமைப்பு நொறுங்கிவிட்டது. பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது. அதன் 26 மிலியன் மக்கள்தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினராவது, உணவு உதவியை எதிர்நோக்கும் நிலையில் இருக்கின்றனர்.

அரசுக்கு விசுவாசமான படையினருக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சுமார் 2.5 மில்லியன் பேருக்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கின்றனர்.

யேமன் போர்

யேமன் மோதலை சிலர் பிராந்திய போட்டி நாடுகளான சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையேயான மதக்குழுக்களின் நிழல் யுத்தம் என்று கருதுகிறார்கள். சௌதி அரேபியா ஒரு சுன்னி இனப் பெரும்பான்மை நாடு. சௌதியின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் ஷியா பிரிவினர் தங்களை அரசு ஒதுக்கிவருவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. இந்த இரு நாடுகளும் மாறிவரும் மத்தியக் கிழக்குப் பகுதியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், அதிகரிக்கவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், யேமனில் போர்நிறுத்ததை கொண்டுவரும் நோக்கத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு, அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.

அதில், நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமர்வின்போது இருதரப்பினரும் ஹுடெய்டா என்னும் துறைமுக நகரத்தில் தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :