'அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' - காங்கிரஸ் தலைவர் கோரிக்கை

அயோத்தி

பட மூலாதாரம், NurPhoto / getty

படக்குறிப்பு,

ராமர் - சீதை வேடமணிந்த கலைஞர்கள்

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான செய்திகளில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

தினத்தந்தி: "அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்"

அயோத்தியில் 'ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரன் சிங் கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கௌரவத்தை அளிக்கும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தமிழ் இந்து: "தியானம் செய்து கொண்டிருந்த பவுத்தத் துறவி சிறுத்தைக்கு இரையான பரிதாபம்"

மஹாராஷ்டிராவில் மும்பைக்கு 825 கிமீ மேற்கே உள்ள காட்டுப்பகுதி சிறுத்தைப் புலிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி. இதில் தியானம் செய்து கொண்டிருந்த பவுத்தத் துறவி ஒருவர் சிறுத்தையினால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

"ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 வயது பவுத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து யோக நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரத்தில் அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து குதறியது. இவருடன் தியானம் செய்த சிஷ்யர்கள் இருவர் தப்பியோடி தகவலை போலீஸுக்குத் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் அந்த இடத்தில் இல்லை, சிறுத்தை அவரை கடித்துக் குதறி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. "மிகவும் மோசமான நிலையில் அவரது உடல் இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி காட்டுக்குள் கிடந்தது" என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு போலீஸ் அதிகாரி கிருஷ்ணா திவாரி தெரிவித்தார்.

ஏற்கெனவே இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது என்றும் ஆபத்தான பகுதி என்றும் அதிகாரிகள் எச்சரிக்கையையும் மீறி பவுத்தத் துறவிகள் இங்கு காலையில் தியானம் செய்ய வருவதாக புகார்கள் உள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: "முதலமைச்சர் பதவிக்கு போட்டி"

ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிந்திருந்தாலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்குள் யார் முதலமைச்சராவது என்று போட்டி இன்னும் முடியவில்லை.

கமல்நாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கமல்நாத்

கமல்நாத் மத்தியப் பிரதேச முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் இளம் தலைவர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலாத் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

"இளைஞர் ஒருவர் முதல்வர் ஆகவில்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால் இளைஞர் ஒருவர் பிரதமர் ஆகக் கூடாது," என மாநிலத் தலைவர் பைலட்டின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் யார் என்று தேர்வு செய்ய அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று டெல்லி செல்கின்றனர்.

Presentational grey line

தினமலர் - திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு,

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர், செந்தில்பாலாஜி, தன் ஆதரவாளர்களுடன், இன்று, தி.மு.க.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர், செந்தில்பாலாஜி, தற்போது டிடிவி தினகரனின், அ.ம.மு.க.வில் அமைப்பு செயலர் மற்றும் கரூர் மாவட்ட செயலாளராக உள்ளார்.

"சபாநாயகர் தனபால் நடவடிக்கையால், பதவி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்களில், இவரும் ஒருவர். கட்சியின் துணை பொதுச் செயலர், தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால், இன்று காலை ஸ்டாலின் முன்னிலையில், செந்தில்பாலாஜி, தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன," என்கிறது அந்த செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: