மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தை துரத்தும் சீக்கிய கலவர சர்ச்சைகள்

  • ஃபைஸல் முகமது
  • பிபிசி செய்தியாளர்
கமல்நாத்தை தொடரும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images

ஐம்பதாண்டு அரசியல் அனுபவம் கொண்ட கமல்நாத் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராகியுள்ளார்.

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் மற்றும் எமர்ஜென்சி காலகட்டத்தில் அவரது பங்களிப்பு என சர்ச்சைகளின் நிழல் கமல்நாத்தை விட்டு விலகவில்லை.

அகாலிகளுக்கு எதிராக ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேவை உருவாக்கியதில் கமல்நாத்தின் பங்கு தொடர்பாகவும் பல சர்ச்சைகள் நிலவுகின்றன.

இதைப்பற்றி பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் 'Beyond the Lines' என்ற தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளத்திற்கு எதிராக ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவை களம் இறக்கிய கதையை கமல்நாத் தன்னிடம் சொன்னதாக குல்தீப் நய்யார் கூறுகிறார். அகாலி தளத்தை பலவீனப்படுத்துவது தொடர்பாக கமல்நாத் இருவரை சந்தித்து பேசினார். இறுதியில் அந்த பணிக்காக பிந்தரன்வாலே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு காரணம், "தோற்றத்திலும், பேச்சுவார்த்தையிலும் துணிவுமிக்கவராக தெரிந்தார் பிந்தரன்வாலே. அதுமட்டுமல்ல, இந்த வேலையில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்". ஆனால் பிந்தரன்வாலேவை வளர்த்துவிடுவது, தீவிரவாதத்தையும் வளர்த்துவிடும் என்பது தனக்கு அப்போது தெரியாது என்று கமல்நாத் கூறியதாகவும் குல்தீப் நய்யார் குறிப்பிடுகிறார்.

கமல்நாத்தை தொடரும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், PHOTO DIVISION

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் கமல்நாத்தின் பங்களிப்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் கமல்நாத்தின் பங்களிப்பு தொடர்பான கேள்விகள் பெரிய அளவில் எழுந்தன.

டெல்லி மற்றும் பஞ்சாபை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்வி இது. 'மத சார்பற்ற கட்சி என தன்னை கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் நேரடியான தொடர்புடையவர் என்று கருதப்படும் ஒருவரை மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பது ஏன்? '

"1984-ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் போன்றவர்களுக்கு இருந்த பங்கை விட மிகவும் முக்கியமான பங்கு கமல்நாத்துக்கு உள்ளது. ஏனெனில் அவர் தலைமையில் நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இருக்கும் பகுதிகளில் வன்முறைகள் நடத்தப்பட்டன" என்று பிபிசியிடம் பேசிய எழுத்தாளர் மற்றும் பிரபல பத்திரிகையாளர் மனோஜ் மித்தா தெரிவித்தார்.

'When a Tree Shook Delhi: The 1984 Carnage and its Aftermath' என்ற தனது புத்தகத்தில் மனோஜ் மித்தா கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

"நாடாளுமன்றத்தின் பின்புறம் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவை சுற்றி வளைத்த கும்பல், அதன் சுவர்களை உடைத்து சேதப்படுத்தியது. இரண்டு சீக்கியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். ரகாப் கஞ்ச் குருத்வாராவில் நடைபெற்ற இதுபோன்ற கும்பல் வன்முறை அதுவரை டெல்லி காணாதது. அசாதரணமான இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் தாங்களும் இருந்ததை அரசியல் தலைவர்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்."

மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள கமல்நாத்தை தொடரும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், AFP

சம்பவத்திற்கு சாட்சியான பத்திரிகையாளர்

வழக்கறிஞர் எச்.எஸ் ஃபுல்காவுடன் இணைந்து மனோஜ் மித்தா எழுதியிருக்கும் இந்த புத்தகத்தில் ரகாப் கஞ்ச் குருத்வாரா கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் முற்றுகையிடப்பட்டது என்றும், கமல்நாத் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அந்த இடத்தில் இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று கமல்நாத் மறுத்ததில்லை என்றாலும், ரகாப் கஞ்ச் குருத்வாராவுக்கு சென்று, அங்கு நடைபெற்ற வன்முறையை தடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால் அங்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த விவகாரத்தில், சிறப்பு விசாரணைக் குழு, ரங்கநாதன் விசாரணைக்குழு மற்றும் நானாவதி விசாரணைக் குழு என பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சிபிஐ அல்லது வேறுவிதமான விசாரணைக் குழுவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கமல்நாத் கூறினார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தபிறகு டி.வி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்".

2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டபோது பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

2010ஆம் ஆண்டு அமெரிக்கா நீதிமன்றம் ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக கமல்நாத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்தது.

1984ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்த சஞ்சய் சூரி, 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக எழுதிய '1984 The Anti Sikh Violence and After' புத்தகம் பற்றியும் மனோஜ் மித்தாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது லண்டனில் வசிக்கும் சஞ்சய் சூரியிடம் பிபிசி தொடர்பு கொண்டது. 1984, நவம்பர் முதல் தேதியன்று நடைபெற்ற சம்பவங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

''குருத்வாராவை சுற்றி வளைத்திருந்த கும்பலின் முன்னணியில் கமல்நாத் இருந்தார். இரண்டு சீக்கியர்களை உயிருடன் எரித்துக் கொன்றபோதும் அவர் அங்கு இருந்தார். மனதை நடுங்க வைக்கும் அந்த சம்பவம் பற்றி காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. போலீசார் அங்கிருந்த போதிலும், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று சொல்கிறார் சஞ்சய் சூரி.

மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள கமல்நாத்தை தொடரும் சர்ச்சைகள்

பட மூலாதாரம், AFP

ரங்கநாத் மிஸ்ரா மற்றும் ஜி.டி நானாவதி ஆணையம் முன்பு தான் சாட்சியம் அளித்ததை நினைவுகூரும் சூரி, அந்த சமயத்தில் தான் ரகாப் கஞ்ச் குருத்வாராவில் இருந்ததை நிரூபிக்க சாட்சியம் கொண்டு வருமாறு தன்னிடம் கூறப்பட்டதை அவர் வருத்த்த்துடன் தெரிவிக்கிறார். மேலும், தன்னை எந்த இடத்தில் பணிக்கு செல்ல அலுவலகம் கூறியது என்பது தொடர்பான அலுவலக ஆவணமான 'லாக்-புக்' வேண்டும் என்று கோரப்பட்டதையும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் அவர் அங்கு இருந்ததை ஏற்றுக் கொள்ளமுடியும் என்று விசாரணை ஆணையம் கூறிவிட்டது.

விசாரணைக் குழுக்கள் சொல்வது என்ன?

விசாரணை ஆணையத்தின் கோரிக்கைகளைப் பற்றி குறிப்பிடும் சூரி, "அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களை தேடி கண்டுபிடித்து நான் சாட்சியம் அளிக்க அழைத்து வருவது சாத்தியமா? ஒரு பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பதற்காக எங்கு அனுப்பப்படுகிறார் என்பதற்கான ஆவணப் பதிவு வைத்திருப்பது சாத்தியமா?" என்று நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்.

விசாரணை ஆணையத்தில் இருந்த ரங்கநாத் மிஸ்ரா பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் சூரி சுட்டிக்காட்டுகிறார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட நானாவதி விசாரணைக் குழுவில் சாட்சியம் அளித்தது பற்றி பேசும் சூரி, 'சம்பவ இடத்தில் இருந்த கமல்நாத், கும்பலுக்கு என்ன உத்தரவிட்டார்? அதை நீங்களே உங்கள் செவிகளில் கேட்டீர்களா?` என்று தன்னிடம் கேட்கப்பட்டதாக கூறுகிறார்.

இது ஒரு திரைப்பட படப்பிடிப்பு இல்லை. நீ இப்படி செய் என்று இயக்குநர் உத்தரவிடுவதுபோல் ஒவ்வொரு செயலையும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. கும்பல் வன்முறைக்கு தூண்டுதல் அளிக்க, ஒற்றை வார்த்தைக் கூட போதும் என்று சொல்கிறார் சூரி.

கேரவன் பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் ஹர்தோஷ் சிங் பல் இவ்வாறு கூறுகிறார்: '1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய எதிர்ப்பு கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் இரண்டையும் நானாவதி ஆணையம் விசாரித்தது. கமல்நாத் விவகாரத்தை பூசி மொழுகிய அந்த விசாரணை ஆணையம், குஜராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி காரணம் இல்லை. அது தானாகப் பரவிய கலவரம்' என்று கூறியது.

1984இல் ரகாப் கஞ்ச் குருத்வாரா வன்முறை தாக்குதல் சம்பவத்தில் கமல்நாத்தின் பங்கு பற்றி நானாவதி விசாரணை ஆணையம் இவ்வாறு கூறியது: "சாட்சியங்கள் இல்லாததால், கும்பலை கலவரம் செய்ய தூண்டி விட்டதாகவோ அல்லது குருத்வாரா தாக்குதலில் கமல்நாத் ஈடுபட்டதாகவோ சொல்ல இயலவில்லை."

1984 மற்றும் 2002 கலவரங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டாலும், அவை அரசியல் ரீதியிலானவை. இதில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதைவிட, அரசியல் லாப-நட்ட கணக்கு போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளாகவே கும்பல் வன்முறைகள் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் 1984 சீக்கிய கலவரம் குறித்த வழக்கொன்றில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: