திமுகவின் புதிய நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு

ஆ ராசா மற்றும் டி ஆர் பாலு கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆ. ராசா மற்றும் டி.ஆர். பாலு (கோப்புப்படம்)

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுக்களின் நிர்வாகிகளையும் , கொறடாக்களையும் திராவிட முன்னேற்ற கழகம் இன்று, சனிக்கிழமை, அறிவித்துள்ளது.

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது..

கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

கனிமொழி
படக்குறிப்பு, கனிமொழி (கோப்புப்படம்)

இன்று பிற்பகல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களோடு நடத்திய கூட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதியிலும்,  ஒரு சட்டமன்றத் தொகுதியிலும், வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும் இந்த வெற்றியை பெற பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல்

பட மூலாதாரம், PIB INDIA

இதனிடையே, இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இன்று மதியம் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிந்ததையொட்டி ஆசி பெற்றனர் என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :