மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தலைவிதியை மாற்றியது 'நோட்டா' வாக்குகளா?

  • அறவாழி இளம்பரிதி
  • பிபிசி தமிழ்
Narendra Modi Nota

பட மூலாதாரம், STRDEL

மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த பா.ஜ.க நூலிழையில் வெற்றியை பறிகொடுத்ததற்கு முக்கிய காரணியாக இருந்தது 'நோட்டா' என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவில், பா.ஜ.க பெற்ற வாக்குகளின் சதவீதம் 41%. காங்கிரஸ் 40.9%. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் கூடுதல் சதவீத வாக்குகளை பா.ஜ.க பெற்றபோதிலும் அதனால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.

பையோரா தொகுதியில் 826 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பா.ஜ.கவை வீழ்த்தியுள்ளது. அந்த தொகுதியில், நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1481.

தாமோ தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயந்த மாலையா 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 78,199. நோட்டாவுக்கு 1,299 பேர் தாமோ தொகுதியில் வாக்களித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தலைவிதியை மாற்றிய 'நோட்டா'

பட மூலாதாரம், The India Today Group

கரோத் தொகுதியில் காங்கிரஸ் பாஜகாவை காட்டிலும் 2108 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் பதிவான நோட்டா வாக்குகள் 2,474.

குவாலியர் தெற்கு தொகுதியில் வெறும் 121 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார் பா.ஜ.க வேட்பாளர் நாராயண் சிங் குஷ்வா. அங்கு 1,550 வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜபல்பூர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 1,209.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தலைவிதியை மாற்றிய 'நோட்டா'

பட மூலாதாரம், Hindustan Times

நேபாநகர் தொகுதியில், 1,264 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார் பாஜக வேட்பாளர் மஞ்சு ரஜேந்திர டாடூ. 2,551 பேர் அங்கு நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ராஜ்நகர் தொகுதியில் பாஜகவின் அரவிந்த் பட்டேரியா பெற்ற வாக்குகள் 39,630. ஆனால், 732 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டும் 2,485.

ரிசர்வ் தொகுதியான ராஜ்பூரில், 932 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பா.ஜ.கவை வீழ்த்தியுள்ளது. அங்கு 3,358 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.

சுவஸ்ரா தொகுதியில், 350 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் பா.ஜ.கவை வீழ்த்தியுள்ளது. அந்த தொகுதியில் பதிவான மொத்த நோட்டா வாக்குகள் 2,976.

இதை எப்படிப் பார்ப்பது?

ஒரு வேளை நோட்டா இல்லாமல் இருந்திருந்தால், மேலே குறிப்பிட்ட தொகுதிகளில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் யாருக்குப் போட்டிருப்பார்கள்? ஒருவேளை அவர்களது தேர்வு பாஜக-வாக இருந்திருக்குமானால், நோட்டாவே இங்கு பாஜக-வின் வெற்றிக் கனவை கலைத்தது என்று சொல்ல முடியும்.

ஆனால், ஒருவேளை நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் மனநிலை, "பாஜக மீது அதிருப்தி ஆனால், காங்கிரஸ் மீது போதிய நம்பிக்கை இல்லை" என்பதாக இருந்திருக்குமானால், நோட்டா இல்லாத ஒரு கற்பனையான சூழ்நிலையில் அவர்கள் காங்கிரசுக்கும் கூட வாக்களித்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் இத்தொகுதிகளில் இன்னும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

இப்படி இருவித சாத்தியங்கள் இருந்தாலும், "நோட்டா வாக்குகள் நம் பக்கம் விழுந்திருந்தால்கூட நாம் வெற்றி பெற்றிருக்கலாமே" என்ற மனவருத்தம் நிச்சயம் தோற்ற வேட்பாளர்களை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு துரத்தும். நோட்டா வாக்காளர்களைப் புரிந்துகொள்ள காங்கிரசும்கூட முயற்சி செய்யக்கூடும்.

தெலங்கானாவில் எப்படி?

119 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் பதிவான மொத்த வாக்குகளில் 7% வாக்குகளை பா.ஜ.க பெற்று அங்கு மூன்றாவது அந்தஸ்தை பெற்றுள்ளது. சில தொகுதிகளில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. ஆலம்பூர் தொகுதியில் நோட்டாவுக்கு பதிவான மொத்த வாக்குகள் 3,492 என்றால் அங்கு பா.ஜ.க பெற்ற வாக்குகள் 1,965.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: