ரஃபேல் ஒப்பந்தம் மீதான மனுக்கள் தள்ளுபடி - நரேந்திர மோதி அரசுக்கு சாதகமான தீர்ப்பு

ரஃபேல்

பட மூலாதாரம், DASSAULT RAFALE

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸ்ஸோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக சேர்க்கப்பட்டதில் முறைகேடு எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

"பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாங்கள் இதுகுறித்து பேசினோம். இந்த ஒப்பந்தம் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது திருப்திகரமாக உள்ளது," என்றும் "போர் விமானங்களை அரசு வாங்குவது குறித்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது," என்றும் இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்தத் தீர்ப்பு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இந்தியா, ரஷ்யா, செளதி அரேபியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் உலகிலேயே பாதுகாப்புக்காக அதிகமாக செலவு செய்கின்றன. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருக்கிறது.

2017ஆம் ஆண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில், இந்தியா 2.5%, இஸ்ரேல் 4.7 %, பாகிஸ்தான் 3.5%, ரஷ்யா 4.3% மற்றும் அமெரிக்கா 3.1% என்ற அளவுக்கு செலவு செய்திருந்தன.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

ஊழல்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது தெரியுமா? அதன்படி ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்ந்தது ரஃபேல் ஒப்பந்தம். 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போதுதான் ரஃபேல் விமானங்களை வாங்கும் நடைமுறை தொடங்கியது, ஆனால் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. பின்னர், ஆட்சிக்கு வந்த பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2015இல் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

உண்மையில், இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, இந்த போர் விமானத்தை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அதாவது 2015, மார்ச் 28ஆம் தேதியன்று, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது.

விமானங்களின் பாகங்களை இந்தியாவில் பொருத்தும் வேலையை, டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்தின் கூட்டாளியான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் பிறகு எழுந்த சர்ச்சைகளில் பலர் சிக்கினார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சி காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. குற்றச்சாட்டுகள் தவறானவை என மோடி அரசாங்கம் கூறுகிறது.

அனில் அம்பானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அனில் அம்பானி

விமானம் ஒன்றுக்கு 526 கோடி ரூபாய் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி விலை நிர்ணயித்திருந்தாலும், தற்போதைய அரசு விமானம் ஒன்றுக்கு ரூ. 1,670 கோடி விலை நிர்ணயித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

மிக் மற்றும் சுகோய் போன்ற ரஷ்ய விமானங்களை சார்ந்துள்ளது இந்திய விமானப்படை போர் விமானங்கள். அதனால் இறுதியாக 1996இல் ரஷ்யாவில் இருந்து 30 சுஹோய் விமானங்களை இந்தியா வாங்கியது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மேம்பட்ட விமானங்கள் இருக்கும் நிலையில், ராணுவ சமநிலையை பராமரிக்க, மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களை இந்தியா வைத்திருப்பது அவசியமானது.

இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரத் தகவல்களின்படி, இந்திய விமானப்படையில் 31 விமானப்படையணி மட்டுமே உள்ளன. இருமுனைகளில் போராட இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 42 போர் விமான படையணிகள் (ஸ்க்வாட்ரன்)கள் தேவை.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஒரு படையணியில் 12 முதல் 24 விமானங்கள் இருக்கும். மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான சாதனங்கள் பழையதாகிவிட்டதாக இந்த ஆண்டு மார்ச் மாதம்தான், நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய ராணுவம் கூறியிருந்தது.

ஒரு சர்வதேச அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் 750 மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு தாக்குதல் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்ளன.

இந்தியாவிடம் அத்தகைய திறன் வாய்ந்த 450 விமானங்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதனால் சில நன்மைகளும் உள்ளன. இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் 58 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 20% .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: