மக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன?

  • திவ்யா ஆர்யா,
  • பிபிசி
மக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தங்களது கட்சியின் நான்கில் மூன்று பங்கு தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்திய கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன.

குறிப்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 41 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். அதாவது, அக்கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்ட 17 பெண்களில் ஒன்பது பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்ட ஏழு பெண்களில் ஐந்து பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது எழுபது சதவீத வெற்றி.

பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தை இந்த தேர்தல் மாற்றியுள்ளதாக கூறுகிறார் அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் அரசுசாரா அமைப்பை நடத்தி வரும் நிஷா அகர்வால்.

"இதுபோன்ற மாற்றத்தை உருவாக்குவதற்கு மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் தேவை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற பெண்கள் மருத்துவராகவும், ஆட்சிப்பணி அதிகாரியாகவும், அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வருபவர்கள். குறிப்பாக, பிரமிளா பீஸோயி என்பவர் பெண்கள் சுய உதவிகள் குழுக்களின் வளர்ச்சிக்காக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருபவராவார்.

மக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன?

இதேபோன்று, மம்தா பானர்ஜியின் கட்சியில் இளம் மற்றும் பழம்பெரும் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும், வங்கித்துறை பணியை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினரான மஹுவா மோத்ரா தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார்.

"பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க மம்தா விரும்புகிறார். அதை செயற்படுத்தும் வகையில், மாலா ராய் மற்றும் முன்னாள் வங்கியாளர் மஹூவா மோத்ரா போன்ற அடிமட்டத் தலைவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்" என்று கூறுகிறார் மம்தா பானர்ஜி குறித்த புத்தகம் ஒன்றின் எழுத்தாளர் ஸுதாபா பால்.

பிரதான தேசிய கட்சிகளின் நிலைப்பாடு

காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் நாடுமுழுவதும் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சொற்பமானது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக முறையே 13% மற்றும் 12% வேட்பாளர்களை முன்னிறுத்தின. அதில், பாஜக சார்பாக நிறுத்தப்பட்ட 55 பெண் வேட்பாளர்களில் 41 பேர் (74 சதவீதம்) வெற்றிபெற்றிருக்கும் நிலையில், காங்கிரஸால் நிறுத்தப்பட்ட 52 பெண் உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.

ஒரு வேட்பாளர் பெண் என்பதை தவிர்த்து, அவரது நற்பெயர், கட்சியின் பிரபலத்தன்மை, ஒதுக்கப்பட்ட தொகுதி மற்றும் பிரசாரத்துக்கு செலவிடப்பட்ட தொகை போன்ற பல்வேறு காரணிகள் ஒருவரது வெற்றியை தீர்மானிக்கிறது.

மக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன?

அதே சமயத்தில், சோனியா காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் அல்லது பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் மனைவி பிரினீத் கவுர் மற்றும் முன்னாள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் மது கோடாவின் மனைவி கீதா கோடா போன்ற அரசியல் குடும்பங்களிலிருந்து மட்டுமல்லாமல், சாதாரண பின்னணியை கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி ஆச்சரியத்தைத் தூண்டியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ரம்யா ஹரிதாஸின் தந்தை கூலி வேலையும், அவரது தாய் தையல் கலைஞராக இருக்கின்றனர். ஆனால், அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க இடதுசாரி தலைவரை வென்ற ரம்யா, கேரளாவிலிருந்து மக்களவைக்கு செல்லும் இரண்டாவது தலித் பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜோதிமணி, 22 வயதில் இந்திய இளையோர் காங்கிரஸில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, தற்போது கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தம்பிதுரையை வென்று முதல்முறையாக நாடாளுமன்றம் செல்கிறார்.

காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாக அடிக்கடி விமர்சிக்கும் பாஜக, இந்த முறை தனது கட்சியின் செயல்பாட்டை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

மகாராஷ்டிராவில் பாஜகவின் சார்பாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றுள்ள பெண்கள் அனைவரும், அம்மாநில அரசியல் தலைவர்களின் நேரடி உறவினர்கள் ஆவர்.

ஹேம மாலினி, கிரோன் கெர் மற்றும் லாட் சாட்டர்ஜி போன்ற திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், பிரக்யா சிங் தாகூர் மற்றும் நிரஞ்சன் ஜோதி போன்ற மதத் தலைவர்களுக்கும் பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக, அக்கட்சியை சேர்ந்த ஸ்மிரிதி ராணி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் அமேதியில் அதன் தலைவர் ராகுல் காந்தியையே வீழ்த்தியுள்ளார்.

மக்களவையில் அதிகரிக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உணர்த்துவது என்ன?

குடும்ப அரசியல்

இந்திய அரசியலை பொறுத்தவரை, தகுதி வாய்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினமாக காரியமாக உள்ளதாக கூறுகிறார் ஷூதாபா.

"தேசிய கட்சி, மாநில கட்சி, ஆளும் கட்சி என்று எவ்வித வித்தியாசமுமின்றி குடும்ப அரசியல் அனைத்து தளங்களிலும் ஊறியுள்ளது. ஆனால், ஆச்சர்யமளிக்கும் வகையில், இத்தேர்தலில் தகுதி அடிப்படையில் முன்னிறுத்தப்பட்ட சில பெண் வேட்பாளர்களும் வெற்றிபெறுள்ளனர்."

குறிப்பாக, தமிழகத்தை பொறுத்தவரை, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிறுத்தப்பட்ட, அக்கட்சியின் முன்னாள் தலைவர்களின் வாரிசுகளான கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டு பெண் வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

இதே மாதிரியான போக்கு நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது.

கனிமொழி

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக, பஞ்சாபில் ஷிராமணி அகாலித் தளம் கட்சியின் தலைவர் சுக்மிர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர்,மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் பி.ஏ. சங்கமாவின் சங்மாவின் மகள் அகதா சங்மா போன்றோர் தேர்தலில் போராடி வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தை பொறுத்தவரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட நான்கு பெண் வேட்பாளர்களும் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில் மாதவி என்பவர் மட்டுமே அரசியல் பின்புலத்தை கொண்டவர்.

பஞ்சாபில் பிறந்து, திருமணமானவுடன் மகாராஷ்டிராவிற்கு வந்த நவ்நீத் கவுர், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

உலகளவில் இந்தியாவின் நிலை

இதுவரை இல்லாத வகையில், இந்த தேர்தலின் மூலம் 17ஆவது மக்களவைக்கு 78 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிஆர்எஸ் இந்தியா எனும் அரசுசாரா அமைப்பு கூறுகிறது.

இந்தியாவின் முதலாவது மக்களவையில் 24 பெண்களும் (ஐந்து சதவீதம்), கடைசி மக்களவையில் 66 பெண்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர். இந்நிலையில், 17ஆவது மக்களவையில் அந்த எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், அது இன்னமும் பல நாடுகளை விடமும் பின்தங்கியே உள்ளது.

ருவாண்டா (61%), தென்னாப்பிரிக்கா (43%), பிரிட்டன் (32%), அமெரிக்கா (24%) மற்றும் வங்கதேசம் (21%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறுகிறார் நிஷா.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :