ராகுல் காந்திக்கு தேவை ஓர் அமித் ஷா - காங்கிரஸ் தோல்வி குறித்த விரிவான அலசல்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி.

காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

ராகுல் காந்தி

நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அவரது தந்தை இந்தியாவின் முதல் இளம் பிரதமரான ராஜீவ் காந்தி.

இப்படி செழுமையான அரசியல் பின்புலம் கொண்டவர் ராகுல்.

2014ம் ஆண்டு தேர்தல்தான், காங்கிரஸ் அரசியல் பயணத்தில் மோசமான காலக்கட்டமாக பார்க்கப்பட்டது. 2019ம் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல தேர்தல் முடிவுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 350 இடங்களை பெற்றுள்ள போது காங்கிரஸ் கூட்டணி வெறும் 85 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ராகுலே தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்று இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி: காந்தி வம்சத்தின் வீழ்ச்சியா?

இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த அமேதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வுயுற்று இருக்கிறார் அவர்.

உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெல்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் 8 பேர் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சரி இந்த தேர்தல் விஷயத்திற்கு வருவோம்.

இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என யாரும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கடந்த தேர்தலைவிட கணிசமான தொகுதிகளில் வெல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்திருக்கிறது.

காங்கிரஸின் தேவை என்ன?

தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்த தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறினார்.

காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க தேவையில்லை என்று கூறிய ராகுல், "யாரும் அச்சப்பட தேவையில்லை. கடுமையாக வேலை செய்வோம். இறுதியில் வெல்வோம்" என்றார்.

நாளிதழ்களில் வரும் செய்திகள் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

இன்று நடக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸின் தோல்வி, எடுக்க வேண்டிய பிற நடவடிக்கைகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்படுமென தெரிகிறது.

உத்தர பிரதேச தலைநகரில் ஒரு காங்கிரஸ்காரர் பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். அவர், "எங்களுடைய நம்பகத்தன்மை மிக மோசமாக உள்ளது. நாங்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. எங்கள் வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை" என்றார்.

"மோதியும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் அவரை நம்புகிறார்கள்" என்று கூறியாவரிடம், அதற்கான காரணத்தை கேட்டோம்.

"எங்களுக்கும் அது புரியவில்லை" என்று தெரிவித்தார்.

கவலைக்கிடமான காங்கிரஸ் கட்சியின் நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து.

பல பகுத்தாய்நர்கள் ராகுல் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்றனர். இவ்வாறான கருத்துக வருவ்து முதல்முறை அல்ல. இதற்கு முன்பே இது போன்ற கருத்துகள் வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வந்தது கட்சிக்கு வெளியிலிருந்து வந்தவை. காங்கிரஸ் தலைவர்கள் இது போன்ற கருத்துகளை புறந்தள்ளியே வருகிறார்கள்.

ப்ரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

பிபிசியிடம் பேசிய மணிசங்கர் அய்யர், "காங்கிரஸ் அதன் தலைமையை கேள்வி கேட்காது. அவர் ராஜிநாமா செய்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்" என்கிறார்.

காங்கிரஸில் தோல்விக்கு அதன் தலைமை காரணமல்ல என்று தெரிவிக்கும் அவர், "பிற காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என்கிறார்.

இது போன்ற கருத்தைதான் முன் வைக்கிறார் காங்கிரஸ் கட்சியின் லக்னோ செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேந்திர குமார் சிங். அவர், "காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல. காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள், மோசமான பிரசார யுக்தியே தோல்விக்கு காரணம்." என்கிறார்.

பிராண்ட் மோதி

மோதி என்னும் பிராண்ட் தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பல காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும் பொது அவ்வாறான பிம்பம் ராகுலுக்கு இல்லை. அந்த விஷயத்தில் தாங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

ப்ரிஜேந்திர குமார் சிங், "மோதி தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும், தங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி மக்களை சமாதானம் செய்ய முடிகிறது." என்கிறார்.

இதற்கு காரணமாக அவர் குறிப்பிடுவதும் மோதி எனும் பிம்பத்தைதான்.

ராகுலுக்கு எது பின்னடைவாக இருக்கிறதோ, அதுவேதான் மோதிக்கு கைகொடுக்கிறது.

ஆம். அது குடும்ப பின்னணி.

பெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசு ராகுல். இது வாரிசு அரசியல் எனும் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது.

மோதி எளிமையான குடும்ப பின்னணியில் வந்தவர். இந்த பின்னணி அவருக்கு வலுவான பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனால், நிஜத்தில் ராகுல் மிக எளிமையானவர் என்கிறார்கள் காங்கிரஸார். அதே நேரம் எதிரிகளிடம் இருக்கும் கபடமும் தந்திரமும் ராகுலுக்கு இல்லை. அரசியலாக பார்த்தால் இது ஒரு குறைதான் என்கிறார்கள்.

ராகுலுக்கு தேவை ஓர் அமித்ஷா

இந்த தோல்விக்கு கட்சி ராகுலை குற்றஞ்சாட்டவில்லை.

இப்போது உண்மையில் ராகுலுக்கு தேவை ஓர் 'அமித் ஷா' என்கிறார் காங்கிரஸ்காரர் ஒருவர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

குஜராத் முதல் டெல்லி வரை மோதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு சூத்திரதாரி அமித் ஷா. அவரை போல ஒருவரை அடையாளம் காண்பதே வெற்றிக்கு உதவும் என்கிறார் அவர்.

அரசியலுக்கு வந்தது முதல் ராகுல் இறங்கு முகத்திலேயே இருக்கிறாரா என்றால்? - நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.

கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் ரீதியாக அவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார். அவரது சமூக ஊடக குழுவும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்று இருக்கிறது.

பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி வந்ததும் ராகுலுக்கு பலம்.

பின் என்னதான் பிரச்சனை?

விளக்குகிறார் காங்கிரஸ் தலைவர் விரேந்திர மதன்,

அவர், "எங்களது தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. எங்களது கொள்கைகளும் சிறப்பானது. ஆனால், நாங்கள் என்ன வாக்காளர்களிடமிருந்து எதிர்பார்த்தோமோ அது நடக்கவில்லை" என்கிறார்.

இப்போது எக்களுக்கு உடனடி தேவை ஆன்ம பரிசோதனைதான். எங்களது தவறுகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்ய வேண்டிய நேரம் இது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :