இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

  • ஐஸ்வர்யா ரவிசங்கர்
  • பிபிசி தமிழ்
இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

பட மூலாதாரம், Getty Images

இரவு நேரத்தில் வெளியே செல்வதை பெண்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்புபவர்கள், என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறார்கள்? இது பற்றிய அவர்களது குடும்பத்தினரின் கருத்து என்ன? இந்த சமூகம் அதை எப்படி பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடையறிய இரவு நேரத்தில் வெளியே செல்ல விரும்பும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சில்லென்ற காற்று, சிலிர்ப்பூட்டும் பறவைகளின் ஒலி, எங்கும் நிசப்தம், ஆள்நடமாட்டமே இல்லாத சாலைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் வீதியோர கடைகள், நிலவின் ஒளி, கண்களுக்கு இதமூட்டும் நட்சத்திரங்களின் நடமாட்டம்; சுட்டெரிக்கும் வெயில் இல்லை, எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்குதான் பிடிக்காது இப்படிப்பட்ட இரவு நேரத்தின் அழகை ரசிப்பதற்கு?

இரவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பவர்களை 'நைட் பேர்ட்ஸ்' என்று சொல்லுவார்கள். நானும் அப்படிப்பட்டவள்தான்.

சிறு வயதிலிருந்தே நான் இரவு நேரத்தில்தான் அதிக நேரம் விழித்திருந்து படிப்பேன். பள்ளி பருவத்தில், 'இரவு நேரத்தில் அதிகமா கண்முழிச்சு படிக்காத, காலங்காத்தால படிச்சாதான் மனசுல நிக்கும்' என்று சொன்ன என் பெற்றோர், கல்லூரியில் சேர்ந்த பிறகு, 'இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடனும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

பட மூலாதாரம், Getty Images

நான் ஒரு கல்லூரி மாணவி என்பதால், ஏராளமான சுமைகள், எந்த நேரமும் மன அழுத்தம். எப்போது பார்த்தாலும் ப்ராஜெக்ட், செமினார், பேப்பர் பிரசன்டேசன், இண்டஸ்ட்ரியல் விசிட், குரூப் டிஸ்கஷன், இன்டெர்ன்ஷிப், தேர்வுகள் என்று ஒரு சிறிய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தேன். இதற்கிடையில் குடும்ப பிரச்சனைகள் வேறு.

என்னால் மன அழுத்தத்திலிருந்து மீள முடியவில்லை. என்னுடன் கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான நண்பர்கள், கார் வைத்திருந்தார்கள். ஆனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னிடம் ஒரு ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது.

ஒரு நாள், கார் வைத்திருந்த என் தோழி ஒருத்தி, 'நீ ஏன் இரவில் என்னுடன் லாங் டிரைவ் வரக்கூடாது? அது எவ்வளவு புத்துணர்ச்சி கொடுக்கும் தெரியுமா?' என்று என்னிடம் கூறியது எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

மனம் பாரமாக இருக்கும்போதெல்லாம் அவளுடன் சேர்ந்து இரவில் சுற்ற ஆரம்பித்தேன். க்ரூப் ஸ்டடீஸ் என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு, அவளது காரில் நீண்ட தூரம் பயணித்தேன். சிறிது நேரம் அவள் காரை ஓட்ட, நான் மெல்லிசை பாடல்கள் கேட்டபடி, இரவு நேர அழகை ரசித்துக்கொண்டே வருவேன்.

அவள் சோர்வடைந்தவுடன் நான் காரை ஓட்டுவேன். இரண்டு பேரும் சோர்வடைந்துவிட்டால், அண்ணன் கடை சாயா தான்! காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் கதை பேசிக்கொண்டே டீ குடிப்போம்.

இலங்கை
இலங்கை

இதைவிட புத்துணர்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் உங்களுக்கு நிகராக நாங்களும் ராத்திரியில் வெளியில் சுற்றுவோம் என்று எங்களின் தோள்களை நாங்களே தட்டிக்கொள்வதுபோல் இருக்கும்.

எல்லா நேரத்திலும் அவளையே எதிர்பார்க்க முடியாது என்பதால் சில நேரங்களில் நான் தனியாகவும் சில நேரங்களில் வேறு நண்பர்களுடனும் இரவில் ஸ்கூட்டரில் வெளியே சுற்றினேன்.

இதை செய்யாதே, அதை செய்யாதே என்று நம்மை கட்டுப்படுத்தும்போதுதான், அதை செய்துபார்த்தால் என்ன, அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற எண்ணம் வரும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

பட மூலாதாரம், Getty Images

என் மன அழுத்தத்தை போக்கும் என்று நான் நினைத்த இந்த விடயத்திலும்கூட பல பிரச்சனைகள் நிறைந்திருந்தன. 'ராத்திரி நேரத்துல ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்ன்னா நடக்கலாம்; ஊர் சுற்ற உனக்கு வேறு நேரமே கிடைக்கலையா?' என்பது என் பெற்றோரின் கருத்து.

'பைக்கை ஒப்பிடும்போது காரில் செல்வது கொஞ்சம் பாதுகாப்பானதுதான்; ஆனா எங்க போனாலும் ராத்திரி எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடு' என்பது என் உறவினர்களின் கருத்து.

இவர்கள் கூட பரவாயில்லை. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று சொல்வதைப்போல நான் இரவில் வெளியே சென்றால், எதிரில் குடும்பத்தோடு வரும் பெண்கள்கூட, 'இந்த நேரத்தில் உனக்கு இங்கு என்னம்மா வேலை? ஒழுங்கா வீடு போய் சேரு' என்று கேட்பதை என்னவென்று சொல்வது?

ஒரு நாள் இரவு என் தோழி ஒருத்தியின் பர்த்டே பார்ட்டிக்கு சென்றுவிட்டு என் வீட்டருகே குடியிருக்கும் தோழன் ஒருவனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும்.

'யார் நீங்க? இந்த இடத்துல ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? உங்க அம்மா அப்பா ஃபோன் நம்பர் குடுங்க' என்றெல்லாம் கேட்டார் ஒரு போலீஸ்காரர்.

ஓர் ஆணும் பெண்ணும் இரவு நேரத்தில் ஒன்றாக வந்தாலே அது தவறான உறவா? இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் ஒன்றாக வந்தோம், அவ்வளவுதான். உண்மை தெரியாமல் கடினமான சொற்களை பயன்படுத்தி என் மனதை காயப்படுத்திய பலரில் இந்த போலீஸ்காரரும் ஒருவராகிவிட்டார்.

இலங்கை
இலங்கை

இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக சென்றால் அவள் குணமற்றவள்; பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை, கயிற்றை அவிழ்த்துவிட்ட குதிரைபோல் விட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். நண்பர்களுடன் குழுவாக சென்றால், கொஞ்சமும் பொறுப்பற்றவள்; நடத்தை சரியில்லை என்பார்கள்.

அதிலும் ஒர் ஆணோடு தனியாக சென்றுவிட்டால் அவ்வளவுதான், தவறான உறவு, கொஞ்சம்கூட பயமே இல்லை என்று இல்லாத பேச்சையெல்லாம் பேசுவார்கள்.

இரவில் சென்றால் பாதுகாப்பில்லை என்கிறார்களே, பகலில் சென்றால் மட்டும் ஒரு பெண் நூறு சதவிகிதம் பாதுகாப்போடு வீடு திரும்ப முடிகிறதா? எப்பொழுதுமே இரவில்தான் ஊர் சுற்ற வேண்டும் என்பது என் எண்ணமல்ல.

ஆனால் என் மன அமைதிக்காக, புத்துணர்ச்சிக்காக, இரவு நேர உலகை ரசிப்பதற்காக நான் நினைக்கும்போது செல்ல விரும்புகிறேன். என் சுதந்திரம் என்னிடம்தான் உள்ளது. எனக்கான எல்லை எது என்பதை வகுக்கவும், என்னை தற்காத்துக்கொள்ளவும் எனக்கு தெரியும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

பட மூலாதாரம், Getty Images

என்னைப் போன்ற எண்ணம் கொண்ட பெண்களின் சார்பில் நான் இந்த சமூகத்திடம் சில வேண்டுகோளை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

'ஒரு பெண் என்றைக்கு எந்த பிரச்சனையுமின்றி தனியாக இரவு நேரத்தில் சாலையில் செல்கிறாளோ அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்' என்று காந்தி சொன்னதாக படித்திருக்கிறேன்.

ஆனால், என்றைக்கு இந்த சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதோ, என்றைக்கு ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதமும், என்றைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களை பார்க்கும் பார்வையும் மாறுகின்றதோ, அன்றுதான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பெண்கள் தாங்கள் தாங்களாகவே வாழ்வதைக்காட்டிலும் சிறந்த வாழ்க்கை எதுவுமில்லை. அவரவர்களுக்கென ஆசைகள் இருக்கின்றன. நான் நானாகத்தான் வாழப்போகிறேன், நாளை இல்லாவிட்டாலும் ஒரு நாள் இந்த சமூகம் மாறும் என்ற நம்பிக்கையோடு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: