தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: முடிவுகளில் எதிரொலிக்குமா?

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

நடைபெற்று வரும் 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும். ஆனால் கடைசி கட்ட வாக்குப்பதிவு அன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவதும் வழக்கம். ஆனால் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்று பார்ப்போம்

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் - பாஜக தோல்வி

2004 ஆம் ஆண்டு இந்தியாவின் 14-ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசமைத்திருந்தது. வாஜ்பேயி பிரதமராக இருந்தார்.

வாஜ்பேயி

பட மூலாதாரம், PTI

அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகியவை 210க்கு மேற்பட்ட தொகுதிகளை வென்றது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 185 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 138 இடங்களையும் வென்றது.

2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றிப் பெற்றிருந்தது. அதே நிலைமை பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என அப்போதைய பிரதமர் வாஜ்பேயி நினைத்தார். இந்தியா ஒளிர்கிறது ('Shining india') என்ற வாசகத்தை முன்வைத்து பாஜக தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்து, பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டது.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாஜ்பேயி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைக்கும் என்று ஏறக்குறைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறியிருந்த நிலையில் அந்த கணிப்புகள் பொய்யாகி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஏறக்குறைய அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜக கூட்டணி 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெரும் என்று கணித்தது. என்டிடிவி -ஏசி நில்சன் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 230-250 இடங்களில் வெற்றிப் பெறும் என்று கூறப்பட்டது.

ஸ்டார் நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 250க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த ஒரு கருத்துக் கணிப்பும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெறும் என்று கூறவில்லை.

எனவே 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எதுவும் எந்த கட்சி அல்லது கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என சரியாக கணிக்கவில்லை என்று கூறலாம்.

2009 மக்களவைத் தேர்தல் - மீண்டும் காங்கிரஸ்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் பாஜக, அத்வானியை தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிப் பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 262 இடங்களையும், பாஜக கூட்டணி 159 இடங்களையும் வென்றது. 2004ஆம் ஆண்டு 145 இடங்களை வென்றிருந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 206 இடங்களை வென்றது. பாஜக 116 இடங்களை வென்றது.

இந்த மக்களவைத் தேர்தலை பொறுத்த வரையில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் என பல கருத்துக் கணிப்புகள் கணித்தன. எந்த ஒரு தனி கட்சியோ அல்லது கூட்டணியோ பெரும்பான்மையை பெறும் என எந்த கருத்துக் கணிப்பும் கூறவில்லை.

பெரும்பாலும் இரண்டு கூட்டணிகளும் 200க்கு உட்பட்ட இடங்களையே கைப்பற்றும் என்றே கூறப்பட்டது.

2014 தேர்தல் - 'வென்றது மோதி அலை'

இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு கணிக்கும்படியாகதான் அமைந்தது அதேயே கருத்துக் கணிப்பு முடிவுகளும் சொல்லியது. மேலும் மோதியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது. மோதி அலை வெற்றியை பெற்றும் தரும் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது. மோதியை மையமாக வைத்தே பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனவும் சில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டன.

2014 பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களை பிடித்தது அதில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மக்களவையில் பெரும்பான்மையை பெற 272 இடங்கள் தேவை. பாஜக இந்த தேர்தலில் தனி பெரும் கட்சியாக பெரும்பான்மை இடங்களில் வென்றது. 1984ஆம் அண்டு காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்றிருந்தது 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்தான்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 60 இடங்களை பெற்றது அதில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை வென்றிருந்தது.

பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு 250க்கும் மேற்பட்ட இடங்களை கணித்திருந்தது.

2019 - வெற்றி பெற போவது யார்?

2019ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றே 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியாகும். ஆனால் அவை சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா என்பது வாக்குப்பதிவு அன்று தெரிந்துவிடும்.

அதேபோல் தேர்தலில் வெற்றியடைந்த கட்சி எது, பெரும்பான்மை கிடைத்தது யாருக்கு, அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :