தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் - தமிழிசையை விட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் - 5 முக்கிய தகவல்கள்

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்
தமிழிசை மற்றும் ஹெச் ராஜா

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியன எந்த அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கின்றன, நோட்டாவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை தற்போது பார்ப்போம் .

பாஜக

இம்முறை 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 3.66% வாக்குகள் கிடைத்துள்ளன.

பாஜக

பட மூலாதாரம், ARUN SANKAR

பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்குத் தான் குறைவான வாக்குகள் விழுந்திருக்கிறது. தூத்துக்குடியில் அவர் 2.15 லட்சம் வாக்குகள் பெற்றார்.

ஹெச். ராஜா சிவகங்கை தொகுதியில் 2.33 லட்சம் வாக்குகள் பெற்றார்.

போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் கன்னியாகுமரியில் பாஜக அதிக சதவீதம் (35.04) பெற்றுள்ளது. ஆனால் கோயம்புத்தூரில்தான் பாஜகவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. அங்கே 3.92 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளன.

பாமக

ஏழு தொகுதியில் போட்டியிட்ட பாமக மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது

பாமக

அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 41 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அன்புமணி தர்மபுரியில் 5.04 லட்சம் வாக்குகள் பெற்றார்.

ஸ்ரீ பெரும்பதூரில் 20.28 சத வாக்குகள் பாமக வேட்பாளருக்கு கிடைத்தது.

திண்டுக்கல்லில் தான் வெற்றி பெற்றவர் மற்றும் இரண்டாமிடம் பெற்றவரிடையேயேயான வாக்கு வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அங்கே திமுக சார்பில் போட்டியிட்ட வேலுசாமி பாமக வேட்பாளரை விட 5.3 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

நோட்டா

8 தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் தொகுதிகள் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிகபட்சமாக 23,343 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட சராசரியாக 3.90% வாக்குகளை பெற்றிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை சிவகங்கை தொகுதியில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறது. அங்கே பாஜக சார்பாக ஹெச். ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பாக கார்த்திக் சிதம்பரம் களத்தில் இருந்தனர். சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுமார் 72 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது.

நான்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 6% வாக்குகளை பெற்றுள்ளது. இதில் சிவகங்கை தவிர திருச்சி, ஸ்ரீ பெரும்புதூர், வட சென்னை ஆகிய தொகுதிகள் அடக்கம்.

நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரியில் தருமபுரியிலும் மிகக்குறைவான 1.5%-க்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

வாக்குகள் அடிப்படையில் பார்த்தால் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில்தான் கிட்டத்தட்ட 85 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் 17 ஆயிரம் வாக்குகள் பெற்றதே குறைந்தபட்சமாக இருக்கிறது.

பதினான்கு தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.

கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம்

பதினோரு தொகுதிகளில் ஐந்துக்கும் அதிகமான சதவீத வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பத்து சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

பனிரெண்டு தொகுதியில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. நான்கு தொகுதிகளில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1.44 லட்சம் வாக்குகளைப் பெற்றது கமல் கட்சி.

மக்கள் நீதி மய்யம்

பதிமூன்று தொகுதிகளில் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரியில் 8,590 வாக்குகள் மட்டுமே பெற்றது.

நீலகிரி, திருச்சி, ஈரோடு, விருதுநகர், தஞ்சாவூர், சேலம், பொள்ளாச்சி, திருப்பூர், திருவள்ளூர், மதுரை, மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோயம்புத்தூர் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம்.

இதன் மூலம் மேற்கு தமிழகம் மற்றும் சென்னை மண்டலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் கமல் குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றுளளது தெளிவு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :