தேர்தல் முடிவுகள் 2019: 181 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி பதவியை இழந்த வேட்பாளர்

தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள மக்களைவை தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரத் தொடங்கியவுடன், முன்னிலை நிலவரங்கள் குறித்து பல விவாதங்களை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் காண முடிந்தது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் குல்தீப் ராய் ஷர்மா, பாஜகவின் விஷால் ஜோலியைவிட 1407 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜெயதேவ் காலா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால் ரெட்டியைவிட 4205 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

விசாகப்பட்டினத்தில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சத்யநாராயணா 4414 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 4.3 லட்சம் ஆகும். தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பாரத் மதுகுமிலி இவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பிகார் மாநிலத்தின் ஜஹானாபாத் தொகுதில், ஐக்கிய ஜனதாதள வேட்பாளரான சந்திராஸ்வர் பிரசாத், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ராஷ்ரிய ஜனதாதள வேட்பாளர் சுரேந்திர பிரசாத் யாதவைவிட 1751 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார்.

குறிப்பாக, சிதம்பரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் அதிகம் பேசப்பட்டன. பல மணிநேர வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போல, 12 வெவ்வேறு தொகுதிகளிலும், வேட்பாளர்கள் 5000க்கும் குறைவாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளனர். அதன் பட்டியலைப் பார்ப்போம்.

ஜார்கண்ட்டின் குண்ட்டி தொகுதியில் பாஜகவின் அர்ஜுன் முண்டா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் கலி சரண் முண்டாவைவிட 1445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கர்நாடகாவின் சாம்ராஜாநகர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் த்ரூவ்நாராயணாவைவிட பாஜகவின் ஸ்ரீனிவாஸ் பிரசாத் 1817 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வென்றார்.

லட்சத்தீவு தொகுதியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது ஃபைசல் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, 22,796 ஆகும். இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் ஹம்துல்லா சயைத்தைவிட 823 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றார். 2014இல் இவர் வெற்றி பெற்றபோது இருந்த வாக்கு வித்தியாசம் வெறும் 1535 மட்டுமே.

தேர்தல் 2019: 181 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி பதவியை இழந்த வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்ர மாநிலத்தின் ஔரங்காபாத் மக்களவை தொகுதியில் எம்.ஐ.எம் கட்சியை சேந்த இம்தியாஸ் ஜலீல் சயத் எனும் வேட்பாளர் சிவசேனா கட்சியை சேர்ந்த சந்திரகாந்த் கைராவைவிட 4492 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஒடிஷாவின், கோரபுட் தொகுதியில் பிஜூ ஜனதாதள கட்சியின் கௌசல்யா ஹிகாகாவைவிட, காங்கிரஸ் கமிட்டியின் சப்தகிரி சங்கர் உலாகா 3613 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் மச்லிசாகர் தொகுதியில் பாஜக வெறும் 181 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளரான போல்நாத், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரான த்ரிபுவன் ராம் என்ற வேட்பாளரை வென்றுள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அஃப்ரின் அலி என அழைக்கப்படும் அப்பூரா போட்டார் என்ற வேட்பாளர், பாஜகவின் தபன் குமார் ரேவை வெறும் 1142 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார்.

அதே மாநிலத்தின் பர்த்வன் - துர்காபூர் தொகுதியில் பாஜகவின் அலுவாலியா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தாஸ் சங்கமிதாவை தோற்கடித்துள்ளார். இவர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2439 மட்டுமே.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :