Surat Fire: சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயால் குறைந்தது 20 பேர் பலி

சூரத் வணிக வளாகத்தில் தீ

பட மூலாதாரம், Gstv

சூரத்தில் வெள்ளிக்கிழமை மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயால், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் மாணவர்கள்.

இந்த கட்டடத்தில் இருந்து குதித்தபோது 15 மாணவர்கள் உயிரிழந்தனர் என்று குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

டேக்சிலா எனும் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ எரிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது.

இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர்களில் ஒருவரான இந்த ஆடை சந்தைக்கு அருகில் பணிபுரியும் வணிகராக விஜய் மான்குகியா பிபிசியிடம் பேசியபோது, இந்த தீ சம்பவம் மாலை சுமார் 4.30 மணிக்கு நடைபெற்றதாகவும், சூரத்தின் சார்தனா பகுதியில் இருக்கும் இந்த கட்டடத்தில் இருந்து புகை வெளிவருவதை தான் பார்த்த்தாகவும் கூறினார்.

இந்த தளத்தின் கூரை தெர்மாகோலால் உருவாக்கப்பட்டுள்ளதாக தோன்றும் நிலையில், அந்த தீ விரைவாக பரவியதாக அவர் தெரிவித்தார்.

Surat Fire

பட மூலாதாரம், Gstv

பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வந்தன. சில பெண்கள் மூன்றாவது தளத்தில் இருந்து இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழல் தரும் டின் அமைப்பின் மேல் குதித்ததாக அவர் கூறினார்.

தீ விரைவாக பரவிய நிலையில், முதலில் 4 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார். பின்னர், மேலதிக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த தீ விபத்து பற்றி மிகவும் கவலைப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 1

இந்த தீயில் 15 பேர் இறந்துள்ளதாக சூரத் போலீஸ் ஆணையாளர் சதீஸ் குமார் மிஷ்ராவை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம். மீட்புப்பணிகள் தொடர்வதாக போலீஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :