குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியது.

இது தொடர்பாக நடந்த நீண்ட விவாதத்துக்கு பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு வாக்கெடுப்பு நடந்தது.

மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதா நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாராட்டிய நரேந்திர மோதி, இந்த மசோதா இந்தியாவின் பழமையான பண்பாடு மற்றும் மனித உரிமைகளின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனவும் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 1

இந்த மசோதா நிறைவேற்றம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''நள்ளிரவில் உலகமே உறங்கி கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தொடர்பான கொள்கைகளுக்கு துரோகம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நான் கடுமையாக போராடினேன். இனியும் இந்த போராட்டம் ஓயாது என ஒவ்வொரு இந்தியனுக்கும் நான் உறுதியளிக்கிறேன். அதனால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 2

இந்த மசோதா பிரிவினையை வெளிப்படுத்துவதாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் தெரிவித்தார்.

''நமது அரசியல் அமைப்புக்கு இந்த நாள் ஒரு கருப்பு நாளாக அமைந்தது. ஏனெனில் நடந்தது அரசியல் அமைப்புக்கு மிகவும் எதிரானது. இந்த மசோதாவின் குறி முஸ்லிம் சமூகம்தான் என்பது தெளிவாகிறது. இது மிகவும் அவமானம் தரும் செயல்'' என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தலாமா, வேண்டாமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவையில் மொத்தம் உள்ள 375 உறுப்பினர்களில், 293 பேர் ஆதரவாகவும், 82 பேர் எதிர்த்தும் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில் மக்களவையில் காரசார விவாதம் வெடித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தி கூச்சல் எழுப்பியபடியே இருந்தனர்.

மசோதாவை தாக்கல் செய்யும்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை" என்று கூறினார்.

"ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிகள் இந்தியாவின் சட்டத்தின்படி, குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், நாங்கள் அதை கருத்தில் கொள்வோம். ஆனால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் மதரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளாததால், இந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக எந்த பலனையும் பெற முடியாது" என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இருப்பினும், அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் மீது அமித் ஷா கடும் தாக்கு

இந்த மசோதாவானது, மதத்தின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்துகிறது. குடியுரிமை பெற்றவர் அல்லது பெறாதவர் என எவ்வித வேறுபாடும் இல்லாமல், இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்தொடரும் உரிமை உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும், உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகளுக்கும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆக்ரோஷமான வாதத்தை முன்வைத்தார். அப்போது, மதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றஞ்சாட்டினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணம் என்ன? என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, "இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சி நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிக்காமல் இருந்திருந்தால், இன்று நமக்கு இந்த மசோதா தேவைப்பட்டிருக்காது" என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, "நான் உங்களிடம் (சபாநாயகர்) வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிலிருந்து நாட்டையும், உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள். இல்லையெனில், இனத்தை அடிப்படையாக கொண்ட குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய ஹிட்லர், டேவிட் பென்-குரியன் ஆகியோரின் வரிசையில் அமித் ஷாவின் பெயரும் இடம்பெற கூடும்" என்று கூறினார்.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: