இலங்கை: போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம்

பட மூலாதாரம், SENA VIDANAGAMA

படக்குறிப்பு, கோப்புப்படம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

சமூ நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியுள்ளனர். அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர் ச.தனுஜன் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தனுஜன், ''ஒரு மிகப்பெரிய சமூக அநீதிக்கு உட்பட்டவர்களாக அரசியல் சிறைக்கைதிகள் இருக்கிறார்கள். அவர்களை வாழவிட வேண்டும். 50 பேருக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஏனையவர்களுக்கு முறையான விசாரணைகளோ, முறையான குற்றச் சான்றதழ்களோ இன்றி அவர்களின் சிறை வாழ்க்கை நீடிக்கிறது. நிபந்தனையற்ற வகையில் அவர்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நல்ல உதாரணம் இருக்கிறது. இதனைப்பின்பற்றி தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்ப வழங்க வேண்டும்.'' என்றார்.

அருட்தந்தை சக்திவேல்
படக்குறிப்பு, அருட்தந்தை மா.சக்திவேல்

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டு போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பி.பி.சி. தமிழுக்குப் பேசிய அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அருட்தந்தை சக்திவேல், ''அடுத்த கட்ட நகர்வை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். போராட்டத்திற்கு மக்களைத் தள்ளுவதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். மக்கள் போராட்டம் நடத்தித்தான் தமது தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதை அரசாங்கமே தீர்மானிக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில அவர்களின் அரசியல் தீர்வாக இருக்கலாம், அன்றாட தேவைக்காக இருக்கலாம், எல்லாமே போராட்டத்தில்தான் தங்கியுள்ளது. இந்த அரசாங்கம், நல்லாட்சி முகத்துடன் செயற்படவில்லை என்பதை இது காட்டுகிறது. தமிழ் மக்களைப் போராட்டத்திற்குள் தள்ளும் அரசாங்கமே இருக்கிறது. இதில் ஒன்றுதான் அரசியல் கைதிகளின் போராட்டம்.'' என்றார்.

''அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இது தமிழர்களின் மன எழுச்சியைக் காட்டுகிறது. உள்ளக்குமுறுலைக் காட்டுகிறது. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கையும் இந்த நிலைக்குத் தள்ளக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.'' என்றார் அருட்தந்தை சக்திவேல்.

கடந்த 14ஆம் திகதி உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்த சிறைக்கைதிகளின் போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :