இலங்கை மன்னார் மனித புதைகுழி: "எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது"

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற முடியாது என தோண்டும் பணிகளை முன்னெடுத்து செல்லும் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74ஆவது முறையாக இன்று (19) புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மனித எலும்பு கூடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவாவுடன் அவரின் குழுவினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அகழ்வுப் பணிகளைத் துரிதப்படுத்த மேலதிகமாக உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமிந்த ராஜபக்ச
படக்குறிப்பு,

சமிந்த ராஜபக்ச

மன்னார் மனித புதைகள் குழி குறித்து சமிந்த ராஜபக்சவுடன் பிபிசி தமிழ் பேசியது.

கை,கால்கள் கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா?

''கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக யார் சொன்னது, அல்லது எதனடிப்படையில் ஊடகங்களில் இந்தத் தகவல்கள் வெளியாகின என்பது எனக்குத் தெரியாது.

இதற்கு எவ்வித சான்றும் இல்லை. ஊடகங்கள் தமக்குத் தேவையானதை பிரசுரிக்கின்றன. எனினும், உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். இதன் உண்மைத் தன்மையை நான் ஊடகங்களுக்குக் கூறத் தயாராக இருக்கிறேன். இதில் எதனையும் மறைக்கும் தேவை இல்லை. புதன்கிழமைகளில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வந்து பார்வையிட முடியும். மீட்கப்படும் எலும்பு கூடுகளின் புகைப்படங்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூற முடியும். அதனை நிறுத்த முடியாது. எனினும், இதன் தலைமை விசாரணையாளராக, நானே இறுதி அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கையில் முழுமையான விவரங்களை துல்லியமான தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, கைகள், கட்டப்பட்டிருந்ததாகவோ, ஊடகங்களில் வெளியிடப்படும் சந்தேகங்களுக்கோ இந்த சந்தர்ப்பத்தில் என்னால் பதிலளிக்க முடியாது.''

இலங்கை

இந்தப் பணி எந்த நிலையில் இருக்கிறது? விசாரணைக்கு வெளிநாட்டு உதவி பெறப்பட்டுள்ளதா?

''எலும்புக் கூடுகளை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இதில் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தி சேகரித்து வருகிறோம். இவற்றை மிகவும் வெளிப்படையாக செய்து வருகிறோம். நீதிமன்ற நீதவான் முன்னிலையில்தான் இந்தப் பணி நடக்கிறது. நீதிபதியும் குறிப்பெடுத்து வருகிறார். மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகவே, ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தோண்டும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன''.

''இவற்றை சோதனை செய்ய நீண்ட நாட்கள் தேவைப்படும். அதில் ஒருசில சோதனைகளை இப்போதே ஆரம்பிக்க யோசித்துள்ளோம். இதில் ஒரு பரிசோதனையை வெளிநாட்டில் செய்ய உத்தேசித்துள்ளோம். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட, நிபுணத்துவம்வாய்ந்த நிறுவனமொன்றில் இதனை நடத்த யோசித்தோம். இந்த யோசனையை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மாதிரிகளை புளோரிடாவிற்கு அனுப்பிவைப்போம்.''

மனித எலும்புகள் தோண்டப்படும் இடம் எவ்வாறு தோற்றமளிக்கிறது?

மனிதப் புதைகுழியைப் போல் இருக்கிறதா? மயான பூமியைப் போல இருக்கிறதா?

''மக்களின் சம்பிரதாயபூர்வ, மத அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யும்போது அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக ஒருபோதும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களில் இவற்றை உங்களால் அவதானிக்க முடியும்.''

இலங்கை

''மயான பூமியில் உடல்கள் புதைக்கப்படுவதைப் போன்ற அமைப்பிலும் ஒரு இடம் இருக்கிறது. ஒழுங்கற்ற முறையில், ஒன்றன் மேல் ஒன்றாக புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் இருப்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதி குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம்.''

ஒழுங்கற்ற விதத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கிறதா?

''இந்த புதைகுழி மன்னாரில் இருக்கிறது. இலங்கையில் மன்னார் என்பது அதிக பிரச்சினைகள் இருந்த இடம். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. இதனைப் பார்க்கும் ஒருவருக்கு அவரது கருத்தைக் கூற முடியும். எனினும், தலைமை விசாரணையாளராக ஆய்வுகள் முடிந்த பின்னரே எனது இறுதி முடிவைக் கூற முடியும். இவற்றை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லை. வேறு எந்த சான்றுகளும் இல்லை''.

''எனவே இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது என்பது குறித்து? தேடியறிய வேண்டும். இவற்றுக்கு விடை காண்பதே எனக்குள்ள பொறுப்பு. இதற்குத் தேவையான அனைத்து விசாரணைகளையும் நான் முன்னெடுப்பேன். முழுமையான விசாரணையின் பின்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.'' என்றார்.

இலங்கை

இந்த விசாரணைகளை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

''அதனைக் கூற முடியாது. இந்த புதைகுழியின் ஒரு எல்லையை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். இது எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதை எம்மால் இன்னும் கண்டறிய முடியவில்லை. தோண்டும் பணிகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்படுகிறன. மிகவும் கவனமாக இந்தப் பணியை செய்கிறோம். சில நேரம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலும்புக்கூடுகளை மட்டுமே எடுக்கக் கூடியதாக இருக்கிறது.''

''காரணம், இவற்றை சிறுசிறு துண்டுகளாக சேகரிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை விஞ்ஞானபூர்வமாகவே செய்துவருகிறோம். இன்னும் நிறைய எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு தூரம் இது நீண்டு செல்கிறது என்பது எனக்கே தெரியாது. எனவே, தோண்டும் பணிகள் எப்போது நிறைவுக்கு வரும் என்பதைக் கூற முடியாது. முதலில் தோண்டும் பணிகள் நிறைவடைய வேண்டும். அதன்பின்னரே ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி இறுதி முடிவுக்கு வர முடியும்'' என்றார்.

இலங்கை

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் நடக்கும் தினங்களில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் செய்தியாளர்கள் அகழ்வு பணி நடக்கும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் தகவல்களும், வாராந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தலைமை விசாரணையாளரான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :