உலகில் எளிமையாக வாழத்தகுந்த 5 நகரங்கள் இவைதான்

5 நகரங்கள்

பட மூலாதாரம், Getty Images

நம் சொந்த ஊரை விட்டு உலகில் வேறு எந்த நகரத்திற்கு சென்று வாழ வேண்டும் என்றாலும் அது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால், இந்த 5 நகரங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையை எளிமையானதாக்கும்.

எளிமையாக வாழத்தகுந்த நகரங்களை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு பொருளாதார நிபுணர் பிரிவு பட்டியலாக வெளியிடும். பாதுகாப்பு, சுகாதாரம், உணவு மற்றும் குடிநீரின் தரம், கல்வி மற்றும் சாலை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஹோனலூலு, அமெரிக்கா

ஹவாயின் தலைநகரமான ஹோனலூலு மிக எளிமையாக மக்கள் வாழக்கூடிய நகரம் என்று இதில் முதலிடம் பிடித்துள்ளது. காரணம் தரமான கல்வி மற்றும் கலாசாரம்.

ஹோனலூலு, அமெரிக்கா

பட மூலாதாரம், Regula Heeb-Zweifel/Alamy

படக்குறிப்பு, ஹோனலூலு, அமெரிக்கா

"நகர்ப்புறங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை அரசாங்கம், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்" என்கிறார் ஹவாயில் வாழும் ஹாவர்ட் ஹூக்ஸ் கார்பரேஷனின் துணைத் தலைவரான டாட் அபோ. "இந்த தனித்தீவில் அனைத்து விஷயங்களும் சரியான இடங்களில் உள்ளன. இந்த நிலைமைக்கு கொண்டுவர மக்கள் நீண்ட காலம் கடுமையாக உழைத்துள்ளனர்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து குடியேறிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். அனைத்து மக்களையும், அனைத்து கலாசாரங்களையும் வரவேற்கும் இடம்தான் ஹோனலூலு.

புடாபெஸ்ட், ஹங்கேரி

கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் அண்டை நாடுகள் அபிவிருத்தி என புடாபெஸ்ட் பெரிதும் வளர்ந்துள்ளது.

புடாபெஸ்ட், ஹங்கேரி

பட மூலாதாரம், Gareth Dewar/Alamy

படக்குறிப்பு, புடாபெஸ்ட், ஹங்கேரி

"நான் எட்டு ஆண்டுகளாக புடாபெஸ்டில் இருந்து வருகிறேன். இந்த நகரம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது" என்கிறார் 'தி ஸ்பாயில்டு குயின்' பத்திரிகையின் விக்டோரியா ஸ்கிபா. "நிறைய சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் 24 மணி நேர பேருந்து மற்றும் ட்ராம் வசதி என நகரின் பல்வேறு பகுதிகள் புற்றுணர்ச்சி பெற்ற மாதிரி உள்ளன".

5-ம் நூற்றாண்டில் இருந்து வைன் தயாரிக்கும் இடமாக இருந்த ஹங்கேரியில், தற்போது பீர் தயாரிப்பு, தெருவோர உணவகங்கள், காபி கடைகள் என பல்வேறு காட்சிகளை காண முடிகிறது. பல சர்வதேச நிறுவனங்கள் இங்கு கால் பதிக்க நினைக்கும் நிலையில், அந்நாட்டு மொழி பேசத் தெரியாதவர்களுக்கு கூட வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

"அதிகளவிலான பீர் கடைகள் இருப்பதினால், குறைந்த விலையில் பீர் கிடைக்கிறது. நகரம் முழுவதும் சுற்றுலாவாசிகள் நிறைந்துள்ளனர்" என்று கூறும் ஸ்கிபா இதனால் வாடகை உள்ளிட்ட பிற செலவினங்கள் உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.

குவைத் நகரம், குவைத்

சௌதி அரேபியா, இரான் மற்றும் பாரசீகத்துக்கு இடையே இருக்கும் குவைத் நகரம் சர்வதேச வணிகத்தின் முக்கிய இடமாக திகழ்கிறது. தினசரி வாழ்க்கையில் சர்வதேச நிலவரத்தின் தாக்கம் தெரியும்.

குவைத் நகரம், குவைத்

பட மூலாதாரம், Iain Masterton/Alamy

படக்குறிப்பு, குவைத் நகரம், குவைத்

எளிமையாக வாழ வழி என்ற வகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குவைத் நகரம், கலாசாரத்தை தாராளமாக்கவும் மேலும் பல வழிகளில் முன்னேறவும் முயற்சித்து வருகிறது.

"இங்கு வளர்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பொதுவெளியில் இசை கூடாது, திரையரங்கம், சினிமா போன்றவற்றில் பல்வேறு இறுக்கமான விதிகளை கொண்டிருந்த நகரம், தற்போது மாறி வருகிறது" என்கிறார் அங்கு வளர்ந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மல்டிமீடியா நிறுவனத்தின் நிறுவனரான ஆகிப் உஸ்மான்.

"நான் குவைத்தில் வளரும்போது இசை விழாக்கள் எல்லாம் கேள்விகூட பட்டதில்லை. என் வாழ்வில் இசை விழாக்களுக்கு சென்றதில்லை. நான் இந்தியாவில்தான் முதலில் அதை பார்த்தேன். ஆனால் இப்போது குவைத்தில் இசைத் திருவிழாக்கள் நடப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது."

ஆனாலும், குவைத் மக்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வெளிநாட்டினர் அங்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவருடன்தான் செய்ய வேண்டும். அதுவும் குவைத் நபருக்கு 51 சதவீதம் பங்குகள் சொந்தமாக அத்தொழிலில் இருக்க வேண்டும். விற்பனை வரி, வருமான வரி என எதுவும் இல்லாமல் பணி செய்ய இது நல்ல இடமாக இருப்பதோடு சேமிப்பும் சாத்தியம் என்கிறார் உஸ்மான்.

ஆக்லான்ட், நியூசிலாந்து

எளிமையாக வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் நியூசிலாந்தின் அக்லான்ட், கலாசாரப்பிரிவில் நல்ல முன்னேற்றம் அடைந்து நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

"கலாசார செழிமையுடைய ஆக்லான்ட், இதில் மேலும் வளர்ந்து வருகிறது" என்கிறார் அங்கு பிறந்த கிறிஸ்டோஃபர் ஹில். இவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் ஆலோசகராக உள்ளார்.

ஆக்லான்ட், நியூசிலாந்து

பட மூலாதாரம், AsiaDreamPhoto/Alamy

படக்குறிப்பு, ஆக்லான்ட், நியூசிலாந்து

பசிஃபிக், ஆசிய மற்றும் மேற்கத்திய கலாசாரங்கள் மட்டும் அல்லாது சமீபத்தில் தென் அமெரிக்க கலாசாரங்களின் தாக்கத்தால் பலதரப்பட்ட உணவகங்கள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சீன புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளும் அங்கு கொண்டாடப்படுகின்றன.

சுகாதாரம் மற்றும் கல்வியிலும் ஆக்லான்ட், முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் அரசு சேவைகளை விட தனியார் பள்ளிகள் மற்றும் சுகாதார சேவை நல்ல முடிவுகளை தருகின்றன என ஹில் தெரிவிக்கிறார்.

ஆனால், உள்கட்டமைப்பு விஷயத்தில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய நிலை உள்ளது. "சரியான திட்டமிடுதல் இல்லாமல் அமைக்கப்பட்ட ஆக்லான்டில், பொது போக்குவரத்து சேவை வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது"

எங்கு வாழ வேண்டும் என்ற முடிவை மக்கள் கவனமாக எடுக்க வேண்டும். கடற்கரைகளுக்கு அருகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

எனினும், ஆக்லாந்தில் குறைவான பணத்தில் வாழ முடியாது. வீட்டு வாடகை அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் இது நான்காவது இடத்தை பிடித்திருந்தது. வெளிநாட்டினர் இங்கு சொத்துகள் வாங்குவதை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

தாய்பெய், தைவான்

எளிமையாக வாழத்தகுந்த இடங்களின் பட்டியலில் ஐந்தாவதாக தாய்பெய் உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் நகராட்சிகள் முதலீடு செய்து வருவதால் நல்ல வளர்ச்சியை இந்நகரம் பெற்றுள்ளது. நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் மெட்ரோ ரயில் சேவை இணைக்கிறது.

தாய்பெய், தாய்வான்

பட மூலாதாரம், Sean Pavone/Alamy

படக்குறிப்பு, தாய்பெய், தாய்வான்

குடியேறியவர்களுக்கும் நல்ல சுகாதார சேவை மற்றும் கல்வி கிடைக்கப் பெறுகிறது.

"சுகாதார சேவை மிகவும் நன்றாக உள்ளது. அதுவும் நான் கனடா நாட்டில் இருந்து வந்துள்ளேன்" என்று கூறுகிறார் கார்பரேட் ஆலோசகரான வாட்சன். "குடியேறியான எனக்கு இந்நாட்டு மக்கள் போலவே மருத்துவ அட்டை வழங்கப்படுகிறது. மேற்கத்திய மற்றும் சீன மருத்துவர்களைக் கூட அணுகலாம்" என்கிறார் அவர்.

இங்குள்ள கல்வி வாய்ப்புகளும் அதிகமே. அமெரிக்காவை சேர்ந்த ஜூடி கூறுகையில், தாம் மகளை ஒரு நல்ல மாண்டிசோரி பள்ளியில் சேர்த்துள்ளதாகவும், அங்கு குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுவதோடு, மேன்டிரின் மொழியும் கற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

"அதிக அளவிலான கூட்டம் உள்ள ஒரு ரயிலில் சென்றாலும், நீங்கள் ஒரு குழந்தை வைத்துள்ளதை பார்த்தால் அவர்கள் இருக்கையை உங்களுக்கு அளிப்பார்கள்" என்று ஜூட் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :