சயீர் பொல்சனாரூ: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் 'வன்புணர்வு' கருத்து, பெண்கள் எதிர்ப்பு

ஜேர் போல்சானாரோ: பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் மீதான மோசமான கருத்துகளை தெரிவித்து பிரபலமடைந்தவர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஜேர் போல்சானாரோ

பிரேசிலில் அக்டோபர் 7-ம் தேதி அதிபர் பதவிக்கான முதல் சுற்றுத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் முன்னிலை போட்டியாளரான சயீர் பொல்சனாரூ-வுக்கு எதிராக பல லட்சம் பெண்கள் ஒரு பிரகடனமே செய்துள்ளனர்.

செப்டம்பர் 6-ம் தேதி ஓர் அரசியல் நிகழ்வின்போது கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சயீர், பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர் மீது மோசமான, தடாலடியான கருத்துகளைக் கூறி பிரபலமடைந்தவர்.

மன நிலை பாதிக்கப்பட்ட நபரால் குத்தப்பட்டதில் இருந்து கருத்துக் கணிப்புகளில் அவரது செல்வாக்கு 26 முதல் 28 சதவீதம் வரை உயர்ந்தது. ஒப்பீட்டளவில் சிறிய, பழமைவாதக் கட்சியான சோஷியல் லிபரல் கட்சியைச் சேர்ந்தவரான பொல்சனாரூ சமூக ஊடகங்களில் உள்ள பிரேசில் அரசியல் வாதிகளிலேயே மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் 1.05 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

#NotHim பிரசாரம்

ஆனால் பல பிரபல பெண்கள் ஒன்று சேர்ந்து பெருகிவரும் இவரது செல்வாக்கை மட்டுப்படுத்தும் வகையில் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் இவருக்கு எதிராக #EleNao (#NotHim) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பிரசாரம் தொடங்கியுள்ளனர்.

'அவர் வேண்டாம்' என்று பொருள்படும் #EleNao ஹேஷ்டேக் பிரசாரம்

பட மூலாதாரம், Fernanda Paes Leme/ Instagram

படக்குறிப்பு, 'அவர் வேண்டாம்' என்று பொருள்படும் #EleNao ஹேஷ்டேக் பிரசாரம்

கடந்த வாரத்தில் இந்த ஹேஷ்டேக் இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.65 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை #EleNao ஹேஷ்டேக் 1.93 லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என எஃப்.ஜி.வி. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர, 1.52 லட்சம் டிவீட்களில் #EleNunca (#NeverHim) என்ற மற்றொரு ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் எப்போதும் அவர் வேண்டாம் என்பதாகும்.

தீவிர வலதுசாரி வேட்பாளரான பொல்சனாரூ-வுக்கு எதிராக பதிவிட்டு வருகிற பெண்களில் பிரபல நடிகைகள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குவோர் ஆகியோரும் அடக்கம்.

"#EleNao என்பது அரசியல் தொடர்பானது மட்டுமல்ல அது அறநெறிகள் தொடர்பானது," என்று டிவீட் செய்துள்ளார் டெபோரா செக்கோ. அவரை டிவிட்டரில் 34 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

பல பெண் பிரபலங்கள் இந்த ஹேஷ்டேக்கின் கீழ் அணி திரண்டுள்ளனர். இந்த ஹேஷ்டேக்கின்கீழ் இடப்பட்ட ஒரு பதிவு.

பட மூலாதாரம், Camila Pitanga/ Instagram

படக்குறிப்பு, பல பெண் பிரபலங்கள் இந்த ஹேஷ்டேக்கின் கீழ் அணி திரண்டுள்ளனர். இந்த ஹேஷ்டேக்கின்கீழ் இடப்பட்ட ஒரு பதிவு.

இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களின் மனங்களை பொல்சனாரூ-வுக்கு எதிராக மாற்றுமாறு கேட்டு பிரேசிலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜுக்ஜா மெனகெலின் மகள் சாஷா மெனகல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இவரை 50 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

"பொல்சனாரூவை தேர்ந்தெடுப்பது அபாயமான பிற்போக்குவாதம்" என்கிறார் அவர். செப்டம்பர் 10ல் வெளியான டேட்டாஃபோல்ஹா என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் 49 சதவீத பெண் வாக்காளர்கள் அவரை நிராகரிக்கின்றனர் என்றும், 17 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 27 வயதான் பொல்சனாரூ-வின் கட்சியிடம் இந்தப் பிரசாரம் குறித்து 'பிபிசி நியூஸ் பிரேசில்' கருத்து கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.

மோசமான கருத்துகள்

இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா டோ ரொசாரியோ-வை பார்த்து "உன்னை வன்புணர்வு செய்யமாட்டேன். ஏனென்றால் நீ அதற்குத் தகுதியானவர் இல்லை" என்று கூறியுள்ளார் பொல்சனாரூ. இதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதையும், ஆணாதிக்கக் கருத்துகளையும் ஆதரிக்கும் விதத்தில் அவர் பல கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடைய கருத்துக்கு ஆவேசமான எதிர்ப்பும் ஆதரவும் உண்டு.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இவருடைய கருத்துக்கு ஆவேசமான எதிர்ப்பும் ஆதரவும் உண்டு.

"ஆணுக்குத் தரும் அதே சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வேலைக்கு எடுக்கமாட்டேன். ஏனெனில் பெண் கருத்தரிப்பாள்" என 2016ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானா ஜிம்மெனெஸ்-சுடன் பங்கேற்ற நேர்க்காணலில் தெரிவித்தார் பொல்சனாரூ.

ஆனால், பிறகு தாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், வேலை தருகிறவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதை தாம் வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

"(சட்டம்) ஏற்கெனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியத்தை உத்தரவாதம் செய்துள்ளது. சட்டம் சரிவர பின்பற்றப்படாவிட்டால், பிரச்சினையைத் தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை" என்று டிவி குளோபோவுக்கு கடந்த மாதம் தந்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு ஒரு பொது நிகழ்வில் பேசும்போது "எனக்கு ஐந்து குழந்தைகள். நான்கு பையன்கள். ஐந்தாவதாக நான் பலவீனமடைந்துவிட்டேன். அப்போது ஒரு பெண் பிறந்தாள்" என்று பேசி ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கினார் பொல்சனாரூ.

ஜேர் போல்சானாரோ: குற்றங்கள் மீது கடுமை, துப்பாக்கி உரிமை மற்றும் பொருளாதாரத்தில் தாராளவாதம்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சயீர் பொல்சனாரூ: குற்றங்கள் மீது கடுமை, துப்பாக்கி உரிமை மற்றும் பொருளாதாரத்தில் தாராளவாதம்.

ஆனால், அவரது பெண் ஆதரவாளர்கள் இந்த சர்ச்சைகளை புறக்கணித்து அவரது வேறு கருத்துகளை புகழ்கிறார்கள்.

குற்றங்கள் மீது கடுமை

முன்னாள் ராணுவ கேப்டனான போல்சானாரோ, துப்பாக்கி உரிமைகளை தாராளமாகத் தரவேண்டும், நகர்ப்புறக் குற்றங்கள் மீதும், கடத்தல்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தளம் நடத்தி வருகிறார்.

கருப்பின பிரேசில் மக்களுக்குத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றும், பெண்களை கொலை செய்கிறவர்களுக்கு கூடுதல் தண்டனை தர வழிசெய்யும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.

1964-1985 காலத்தில் நடந்த பிரேசிலின் ராணுவ சர்வாதிகாரம் செய்த தவறு, இடதுசாரி செயற்பாட்டாளர்களை கொல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறியுள்ள அவர் "மனித உரிமைகள் பிரேசிலுக்கு கேடு" என்று கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய சில கருத்துகள் அவர் மீது வழக்குத் தொடரப்பட காரணமாக இருந்தன. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அடிமைகளின் வழி வந்தவர்கள் குறித்து அவர் 2017ம் ஆண்டு கூறிய கருத்துகள் இனவெறிக் கருத்துகள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், கடந்தவாரம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது.

"என் குழந்தைகள் நன்கு படித்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு பால் ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று 2011ல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் தாம் ஓரின ஈர்ப்பு எதிர்ப்பாளர் இல்லை என்றும் தமக்கு ஓரின ஈர்ப்பாளர்கள் பலர் ஆதரவாளர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

17 சதவீதப் பெண்கள் இவரை ஆதரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 17 சதவீதப் பெண்கள் இவரை ஆதரிக்கின்றனர்.

ஆதரிக்கும் பெண்கள் கூறும் காரணம்

அவரது ஆதரவாளரான பெண்கள் பயன்படுத்தும் #mulherescombolsonaro (#womenwithbolsonaro) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தேடிப்பார்த்ததில் அவர்கள் பொல்சனாரூவை ஆதரிக்க ஐந்து காரணங்களைக் கூறுகின்றனர்.

ஒன்று அவர் ஊழல் கரைபடியாத சுத்தமான அரசியல்வாதி என்ற கூற்று. இரண்டாவது அவர் வரிக் குறைப்பை ஆதரிப்பவர் என்பது. மற்றொன்று குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவதற்கான வயதினை 18 என்பதில் இருந்து குறைக்கவேண்டும் என்ற அவருடைய கருத்து. பாலியல் சிறுபான்மையினர் குறித்து பள்ளி மாணவர்களுக்கு போதிப்பதை அவர் எதிர்ப்பதையும், பிரேசிலையும், கடவுளையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர் போற்றுவதையும் அவர்கள் ஆதரிக்கின்றனர்.

ஆதரவாளர்கள் தங்களை போல்சோமிட்டா என்று கூறிக்கொள்கின்றனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆதரவாளர்கள் போல்சோமினியன் என்று அழைக்கப்படுகின்றனர்

கடுமையாக பிளவுபட்டுள்ள பிரேசிலின் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் 'போல்சோமினியன்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவரது ஆதரவாளர்கள் போல்சானாரோ-வை 'போல்சோமிட்டோ' என்று அழைக்கின்றனர். இவருக்கு எதிரான 20 லட்சம் பெண் உறுப்பினர்களைக் கொண்டிருந்த மூடிய (குளோஸ்டு) ஃபேஸ்புக் பக்கம் கடந்த வாரம் ஹேக் செய்யப்பட்டது. 'போல்சானாரோவுக்கு எதிரான பெண்கள்' என்ற அதன் பெயர் 'பொல்சனாரூவுடன் உள்ள பெண்கள்' என்று மாற்றப்பட்டது. ஆனால், இது தெரியாமல் அந்த ஃபேஸ்புக் பக்கத்துக்கு நன்றி தெரிவித்தார் பொல்சனாரூ. அதன் பிறகு அந்தப் பக்கத்தை நடத்திவந்த பெண்கள் அதை மீட்டனர்.

ஹேக் செய்யப்பட்ட எதிர்ப்பு ஃபேஸ்புக் பக்கத்துக்கு விவரம் தெரியாமல் நன்றி கூறிய பொல்சனாரூ.

பட மூலாதாரம், Twitter/ Jair Bolsonaro

படக்குறிப்பு, ஹேக் செய்யப்பட்ட எதிர்ப்பு ஃபேஸ்புக் பக்கத்துக்கு விவரம் தெரியாமல் நன்றி கூறிய பொல்சனாரூ.

இதனிடையே அவரை ஆதரிக்கும்பெண்களின் மூடிய ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 8.25 லட்சம் எண்ணிக்கையை புதன்கிழமை எட்டியது. அதை பின்தொடரும் பெண்கள் 'குடியரசுத் தலைவர் பதவிக்கு கேப்டன் பொல்சனாரூவை ஆதரிக்கும், பெண்ணியம் தேவைப்படாத துணிச்சலான பெண்கள்' என்று தங்களை குறிப்பிடுகின்றனர்.

குத்தப்பட்ட பொல்சனாரூ இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். ஆனால் திருப்தி அளிக்கும் வகையில் அவர் தேறிவருகிறார் என மருத்துவர்கள் கூறுவதாக செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவ அறிக்கை ஒன்று கூறுகிறது. குத்துப்பட்டதால் அவரால் தேர்தல் பணிகளில் இருந்து விலகி இருந்தாலும், சமூக ஊடகங்களில் விவாதங்களை கிளப்பி வருவதாலும், பிரபலத்தன்மையும் அவர் வாக்காளர் மனங்களில் இருந்து நீண்டகாலம் விலகி இருக்கமாட்டார் என்று காட்டுகின்றன.

பிற செய்திகள்:

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :