நித்யானந்தா எங்கே? - இன்னும் 2 நாட்களில் தெரிய வாய்ப்பு - விரிவான தகவல்கள்

நித்யானந்தா எங்கே? - இன்னும் இரு தினங்களில் தெரிய வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: நித்யானந்தா எங்கே தங்கி இருக்கிறார்?

நித்யானந்தா தங்கி இருக்கும் இடம் குறித்த விவரங்களை 12 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரது ஆசிரமத்தில் சீடராக இருந்த ஆர்த்திராவ், நித்யானந்தா மீது கொடுத்த பாலியல் வழக்கு ராமநகர் மாவட்ட 3-வது குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இதைத்தொடர்ந்து நித்யானந்தாவிடம் கார் ஓட்டுநராக இருந்த லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'நித்யானந்தா மீது ஆர்த்திராவ் கொடுத்துள்ள பாலியல் வழக்கில் 44 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் நித்யானந்தா இருந்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். எனவே அவர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

நித்யானந்தா எங்கே? - இன்னும் இரு தினங்களில் தெரிய வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்த மனு நேற்று (திங்கள்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த விவரங்களை வருகிற 12-ந்தேதிக்குள் கர்நாடக அரசும், காவல்துறையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு நேற்று மீண்டும் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி இருப்பதால், நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆர்த்திராவ் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

ஆனால் இந்த வழக்கில் நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த ஆவணங்களை நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் நீதிபதியிடம் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் நித்யானந்தா இல்லாமலேயே சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என்று கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மகளை கருணைக் கொலை செய்ய வேண்டும்'

'மகளை கருணைக் கொலை செய்ய வேண்டும்'

பட மூலாதாரம், Express

நோயால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாததால் கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு திருநெல்வேலி ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்தார்.

தன்னுடைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதால், மகளின் மருத்துவத்துக்காக செலவிட முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கொட்டாகுளத்தை சேர்ந்தவர் முருகையா(64). இவர் தனது மகள் சுப்புலட்சுமியுடன்(32) நெல்லை ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு ஒன்றினை அளித்தார்.

அதில் அவர், "எனது மகள் மனவளர்ச்சி குன்றியவர். கடந்த ஒன்றரை வருடமாகத் தாடை விலகல் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். அவரை குணப்படுத்தத் தென்காசி அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியை அணுகியும் சிகிச்சைபெற முடியவில்லை. நான் ஏற்கனவே முதுமை மற்றும் மனைவியின் நோய் காரணமாக வருவாய் இன்றி அனைத்து சொத்துகளையும் இழந்து விட்டேன்.

எனது மகளின் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளில் 20 முறைக்குமேல் அழைத்துச் சென்று சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். இதற்கு மேலும் என்னால் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. நோய்வாய்ப்பட்ட எனது மகளின் நிலையை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, என் மகளைக் கருணை கொலைசெய்ய அனுமதிக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியர் மகளின் மருத்துவத்திற்கு உதவி செய்ய வாக்குறுதி அளித்ததாக முருகையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Presentational grey line

தினமணி: 'திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்'

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சேர்ந்துள்ளது.

வெங்காயம்'

பட மூலாதாரம், Getty Images

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீர்த்த பருவமழையால் வெங்காய பயிர்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்தது.

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எகிப்து நாட்டிலிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன் புறப்பட்ட கப்பலில் டன் கணக்கில் வெங்காயம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மும்பைக்கு வந்தது. அங்கிருந்து தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வெங்காய வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில், 30 டன் வெங்காயம் திருச்சி-பால்பண்ணை சாலையில் உள்ள புதிய வெங்காய மண்டியில் வியாபாரி வெள்ளையன் என்பவரது திங்கள்கிழமை லாரி மூலம் வந்தது. இதுதொடர்பாக, அந்த வியாபாரி கூறியது: வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மும்பைக்குக் கப்பல் மூலம் எகிப்திலிருந்து வெங்காயம் டன் கணக்கில் வந்து சேர்ந்துள்ளது. அங்குள்ள கமிஷன் ஏஜெண்ட் மூலம் 30 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தேன். அனைத்து செலவுகளும் உள்பட ஒரு கிலோவுக்கு ரூ.130 செலவிட நேரிட்டது. ஆனால், திருச்சியில் இந்த வெங்காயத்தைக் கிலோ ரூ.100-க்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலை உள்ளது. நமது நாட்டு வெங்காயம் ரோஸ் வண்ணத்தில் இருக்கும். எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ளது. இதனால், மக்களிடையே தயக்கம் உள்ளது. இருப்பினும், இந்த வெங்காயம் காரத்தன்மை அதிகம் கொண்டது. நமது வெங்காயத்தை 2 பயன்படுத்தும் இடத்தில் இந்த வெங்காயத்தில் ஒன்று பயன்படுத்தினால் போதும் என்றார்.

அனைத்து வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த தங்கராஜ் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பெரிய வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் 90 வரை விலைபோனது. எகிப்து நாட்டு வெங்காயமும், உள்ளூர் வரத்தும் வரத் தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. இப்போது, பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.140 வரை விலை உள்ளது. சின்ன வெங்காயம் ரூ.50 முதல் 90 வரை விலை உள்ளது. தரம் மற்றும் ரகத்துக்குத் தகுந்த விலை உள்ளது. எகிப்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசம், நாசிக் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50 டன் வெங்காயம் வந்துள்ளது. பெரம்பலூா், துறையூா், முசிறி, நாமக்கல் பகுதிகளிலிருந்தும் வெங்காயம் வரத்து உள்ளது. எனவே, இனி வரும் நாள்களில் விலை குறையும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

Presentational grey line

இந்து தமிழ்: பண்ருட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்?

உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற் கட்ட வேட்பு மனுத் தாக்கல் கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்தில் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது.

இந்த ஒன்றியத்துக்குட்பட்ட நடுக்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியிடுவோர் தொடர் பாக கிராமத்தில், கிராம முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அங்குள்ள அம்மன் கோயிலில் நடைபெற்றது.

அப்போது, கோயில் திருப்பணி நடைபெற உள்ளதால் அதற்காகக் கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும். நடைபெறவுள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவராக சக்திவேலுவும், துணைத் தலை வராக முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகத் தீர் மானம் நிறைவேற்றப்படுவதாக ஒருவர் வாசித்தார். இதையேற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே கிராம ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்ட நிலையில்தான் சக்திவேல் மற்றும் முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மேலும் கோயிலில் நடை பெற்ற தீர்மானம் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் குறித்து விசாரணை நடத்த பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரைப் பணித்துள்ளார்.

இதுதொடர்பாக புகாருக்கு உள்ளாகியிருக்கும் நடுக்குப்பம் சக்திவேலுவிடம் கேட்டபோது, "பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். ரூ.50 லட்சத்துக்கு வருவாய் ஈட்டக்கூடிய கிராமம் அல்ல நடுக்குப்பம். நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு எதிராகச் சிலர் ஆதாரமற்ற பொய்யான பிரச்சாரத்தை மேற் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: