புதுச்சேரி கைத்தறி நெசவாளர்கள்: ’இது எங்கள் பாரம்பரிய தொழில்; இதை விட்டு எங்கே செல்வோம்?’

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
கைத்தறி நெசவாளர்கள்

புதுச்சேரியில் கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காக, நிறுவப்பட்ட பாண்டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நெசவாளர்கள் ஆர்டர்களுக்காக காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியின் பாரம்பரிய தொழில்களுள் ஒன்றாக கைத்தறி நெசவு உள்ளது. இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காக, 1976ம் ஆண்டு பாண்டெக்ஸ் கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இதன் கீழ் 14 முதன்மை கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வந்தன. ஒவ்வொரு சங்கத்திலும் 100 முதல் 200 வரை மொத்தம் 2000 தறிகள் புதுச்சேரியில் இருந்தன.

இதனால் 10,000க்கும் அதிகமான நெசவாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த உப தொழிலாளர்கள் உட்பட 30000க்கும் அதிகமானோர் நெசவுத்தொழில் மூலமாக பயன் பெற்று வந்தனர். இவர்கள் உற்பத்தி செய்த கைத்தறி ஆடைகள் தனியார் நிறுவனங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

கைத்தறி நெசவாளர்கள்

மேலும் புதுச்சேரி அரசு பண்டிகை நாட்களில் சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறைகளின் மூலமாக மக்களுக்கு இலவசமாக சேலை மற்றும் வேட்டிகள் கொடுப்பதற்காக கைத்தறி உற்பத்தியில் 3 லட்சம் துணிகளை நெசவாளர்களிடம் ஆண்டுதோறும் வாங்கி வந்தது. கடந்த 2005 ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைத்தறி துணிகளுக்கு பதிலாக வெளி மாநிலங்களில் துணிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

இதனால் நெசவாளர்கள் உற்பத்தி செய்த கைத்தறி துணிகளை அரசாங்கம் வாங்குவது படி படியாக குறைந்து வந்தது. தற்சமயம் பொதுமக்களுக்கு இலவச துணி வழங்குவதுக்கு பதிலாக நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.

இதனால் புதுச்சேரி கைத்தறி நெசவாளர்கள்களிடமிருந்து துணி கொள்முதல் செய்வதை முழுவதுமாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக நெசவாளர்களின் குடும்பங்கள் வேலையின்றி வறுமையில் தள்ளாடி வருகின்றன.

கைத்தறி நெசவாளர்கள்

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சார்த்த ஆரம்ப நெசவாளர் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர் கிருபானந்தம் கூறுகையில், "இந்த சங்கம் ஆரம்பித்த காலங்களில் 10,000 நெசவாளர்கள் இருந்தனர். இதன் மூலம் எல்லாருமே நல்ல வேலை பார்த்து வந்தனர் இங்கே உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை தனியார் நிறுவனங்களே வந்து கொள்முதல் செய்தன. இதனால் நெசவாளர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு இந்த வாய்ப்பு நெசவாளர்களுக்கு குறைந்தபோது, அரசு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது. அதன் மூலம் எங்களது தொழில் நன்றாக நடைபெற்று வந்தது.

தற்சமயம் இலவச வேட்டி சேலை திட்டத்தில் எங்களிடம் இருந்து அரசு துணி கொள்முதல் செய்யாததால் உற்பத்தி ஏதும் இல்லாமல் நெசவாளர்கள் அனைவரும் வேறு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்", என்றார்.

கைத்தறி நெசவாளர்கள்
படக்குறிப்பு, கிருபானந்தம்

மேலும் அவர் கூறுகையில், "உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள் அரசு இலவச திட்டங்களுக்கு வாங்காமல் குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதால் தான் புதுச்சேரி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அழிந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது இலவச துணிக்கு பதில் பணம் வழங்கப்படுகிறது. இதனால் கைத்தறி தொழில் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது", என்றார்.

"மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தில் ஆண்டு தோறும் 1 லட்சம் சேலைகள் தேவைப்படுகிறது. அந்த சேலைகளை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கொடுத்தாலே அதன் மூலமாக எல்லாருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படும், இப்போ இந்த தொழிலை ஊக்குவித்தால் வேறு வேலைகளுக்கு சென்றவர்கள் அனைவரும் தறி தொழிலுக்கு மீண்டும் வருவார்கள்.

வறுமையில் தவிக்கும் பல நெசவாளர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்," என்கிறார் கிருபானந்தம்.

இதுகுறித்து கைத்தறி நெசவாளர் சாந்தி கூறுகையில்," இந்த கைத்தறியால் எங்களை போன்ற பல குடும்பங்கள் வளமாக வாழ்ந்து வந்தன. தொடர்ந்து வேலை கிடைத்து கொண்டிருந்தது, ஆனால் தற்சமயம் கைத்தறி உற்பத்தி இல்லாததால் நெசவாளர்கள் கட்டட வேலை, வீட்டு வேலை, உணவகம் என வேறு வேலைகளுக்கு சென்று கஷ்டப்படும் கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கைத்தறி நெசவாளர்கள்

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, சாந்தி

இப்போது இருக்கின்ற கொஞ்ச நெசவாளர்களும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக பகுதிகளில் பாவுநூல் வாங்கி வந்து இங்கே கூலிக்கு நெசவு செய்கின்றனர். நாங்கள் எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்கவில்லை, எங்களுக்கு பழையபடி பாவுநூல் கிடைத்தாலே போதும், அதை வைத்து நாங்களே உற்பத்தி செய்து வருமானம் ஈட்டி கொள்வோம்", என்றார்.

நெசவு தொழிலை விட்டு வேறு தொழில் செய்துவரும் நெசவாளர் குணசேகரன்,"நாங்கள் பாரம்பரியமாக இந்த தொழிலை செய்து வந்தோம், ஆனால் கைத்தறி உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் தற்சமயம் வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து அதை கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறேன், இந்த தொழிலின் அழிவால் பலர் இந்த ஊரை விட்டு சென்றுள்ளனர்.

மேலும் தங்களுக்கு கிடைக்கும் எதாவது ஒரு வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் சிலர் வேறு தொழில் ஏதும் தெரியாத காரணத்தால் மனம் குன்றி சமூக அந்தஸ்தை இழந்து இருக்கின்றனர்", என்கிறார்.

கைத்தறி நெசவாளர்கள்

இதுகுறித்து பல்வேறு கோரிகளைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரி அரசு கடந்த 10 ஆண்டுகளில் நெசவாளர் சங்கங்களிடம் கொள்முதல் செய்து கொடுக்க வேண்டிய நிலுவை தொகையான 7 கோடி ரூபாயை அவர்களுக்கு வழங்கினால் அதை வைத்து உற்பத்தியை உருவாக்கி கொள்வார்கள்.

மேலும் தற்சமயம் இருக்கும் தறிகளுக்கு பாவுநூல்கள் கொடுத்தாலே 2000 குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக புதியதாக நிறுவனங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களை பராமரித்து கைத்தறி உற்பத்திக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலே போதும் பல குடும்பங்கள் இதனால் பயன்பெரும்", என்றார்.

இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமியிடம் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக கலந்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: