தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் கு.க.செல்வம்: "திமுக குடும்பக் கட்சியாக மாறிவிட்டது" - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

கு.க.செல்வம்

பட மூலாதாரம், Facebook

திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று புதன்கிழமை மதியம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தன்னை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ள திமுகவின் தலைமைக்குத் தைரியம் இருந்தால் தன்னை கட்சியிலிருந்து முழுமையாக நீக்கட்டும், அது நடந்தாலும் தனக்குக் கவலையில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பொது மக்களுக்கு உழைப்பதற்காகத் தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன் என்றும், மற்றவர்கள் பேச்சைக் கேட்பதற்காக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்கிற தன் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறிய அவர், தான் கட்சி பொறுப்புகளை ஸ்டாலின் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்காகத் தொடர்ந்து விட்டுக்கொடுக்கும் நிலை நீடிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் திமுகவிலிருந்த வாரிசு அரசியல் தற்போது குடும்ப அரசியலாக உருமாறியுள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்தை தொடர்ந்து, கட்சிப்பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் கு.க. செல்வம் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு

நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை தில்லியில் சந்தித்த கு.க. செல்வம் தான் பா.ஜ.கவில் இணையவில்லையென தெரிவித்திருந்தார்.

தில்லியில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார் கு.க. செல்வம்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கும் நிலையில் பாரதப் பிரதமருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் தெரிவித்திருந்தார்.

மேலும் தன் தொகுதி குறித்து பேசுவதற்காக தான் வந்திருப்பதாகவும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் கோரிக்கை வைப்பதற்காக வந்ததாகவும் கு.க. செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் கு.க.செல்வம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: