ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழக கூட்டணி கணக்குகளை மாற்றுமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழக கூட்டணி கணக்குகளை மாற்றுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக கூட்டணிக் கணக்குகளில் இந்தத் தேர்தல் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஐந்து மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சுயேச்சைகள், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் இந்தத் தேர்தலில் வெகுவாக அதிகரித்திருப்பது அக்கட்சிக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களையும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களையும் சட்டீஸ்கரில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களையும் பாரதீய ஜனதாக் கட்சி கைப்பற்றியது. இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தமுள்ள 65 இடங்களில் 62 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை அப்படியிருக்காது என்பதையே இந்த முடிவுகள் காட்டியிருக்கின்றன.

2014 நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால் இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. 61 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் கட்சி 1.24 கோடி வாக்குகளை கூடுதலாகப் பெற்றிருக்கிறது.

இந்த வெற்றிகளில் மிக முக்கியமான விஷயம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, வெற்றிவாய்ப்புள்ள கட்சி என்ற பார்வையை உருவாக்கியிருப்பதுதான். இதனால், கூட்டணி தொடர்பான பேரங்களில் அந்தக் கட்சி கூடுதல் கறார் தன்மையுடன் நடந்துகொள்ளுமா?

"நிச்சயமாக அப்படியிருக்காது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கும். இது போன்ற இழுபறி நிலை ஏற்பட்டிருக்காது என்பதை அக்கட்சி இப்போது உணர்ந்திருக்கும். ஆகவே நாடு முழுவதும் சரியான கூட்டணியை அமைப்பதில் அக்கட்சி கவனம் செலுத்தும். முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

து. ரவிக்குமார்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, து. ரவிக்குமார்

தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டிலிருந்து எல்லாத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் கூட்டணி அமைத்தே போட்டியிடுகின்றன. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் ஈழப் பிரச்சனை, 2 ஜி போன்ற விவகாரங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகளால் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.

ஆனால், இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி எப்போதுமே சுமுகமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 48 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஆனால், 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்தது. இதனால், மத்திய அரசில் இருந்தே தி.மு.க. விலகிக்கொள்ளும் என்ற அறிவிப்பை கட்சித் தலைவர் மு. கருணாநிதி வெளியிடும் அளவுக்கு நிலைமை சென்றது. முடிவில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் போட்டியிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் வெறும் 119 இடங்களில் மட்டுமே தி.மு.க. போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனால், ஏற்பட்ட கசப்பு காங்கிரஸ் - தி.மு.க. இடையே நீண்ட நாட்கள் நீடித்தது.

"இந்த முறை மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியடைய முக்கியமான காரணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் மோடி மீது ஏற்பட்டிருந்த அதிருப்திதான். இதனை மனதில் வைத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் தங்களுடையிலான இடங்களைப் பகிர்ந்துகொள்ளும். இந்தத் தருணத்தில் இதைத் தாண்டி கூடுதலாக எதையும் சொல்வது சரியாக இருக்காது" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கே.எஸ். ராதாகிருஷ்ணன்

இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, தி.மு.க. இடம்பெற்றிருந்த 2004-2014 வரையிலான ஆட்சிக் காலமே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிக நிலையான ஆட்சியாக இருந்தது என்பதை அக்கட்சியினர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று மட்டும் சொன்னார்.

இந்தத் தேர்தல் முடிவுகளில் இரண்டு விஷயங்களை காங்கிரஸ் நிரூபித்திருக்கிறது என்கிறார் ரவிக்குமார். முதலாவதாக ராகுல் காந்தி தன்னை ஒரு வெற்றிகரமான, தேர்தலில் வெற்றியைத் தேடித்தரக்கூடிய தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இரண்டாவதாக காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் வெற்றிபெறக்கூடிய கட்சி என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டும் முக்கியமானவை என்றாலும், பேச்சு வார்த்தைகளின்போது விட்டுக்கொடுத்துச் செல்வதே அக்கட்சியை தேசிய அளவில் ஆட்சியில் அமர்த்தும் என்கிறார் ரவிக்குமார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றும்கூட, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது. "இதற்காக சோனியா காந்தியே நேரடியாக முயற்சிகளை மேற்கொண்டார். இது கூட்டணிகள் குறித்த காங்கிரஸின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே காங்கிரஸ் முன்பைப்போல நடந்துகொள்ளாது" என்கிறார் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜய ஷங்கர்.

விஜய ஷங்கர்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, விஜய ஷங்கர்

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியமான தலைவராக முன்னிறுத்தப்பட்டு, பிரசாரங்களில் ஈடுபட்டார். சுமார் 45 கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். தீவிர இந்துத்துவத்தை முன்வைத்தார். ஆனால், அதற்குப் பலன் கிடைக்கவில்லை. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்த பா.ஜ.க. இந்த முறை அதே முழக்கத்தை முன்வைக்க முடியாத நிலையில் இருக்கிறது. தீவிர இந்துத்துவம், வளர்ச்சி ஆகிய இரு அம்சங்களுமே வட மாநிலங்களில் கைகொடுக்காத நிலையில், அந்த இழப்பை தென் மாநிலங்களில் ஈடுசெய்ய பா.ஜ.க. முயற்சிக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க. எப்போதுமே ஒரு பலவீனமான கட்சிதான். 2014ஆம் ஆண்டு தேர்தலில் அந்தக் கட்சி தேசிய அளவில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தோற்றம் இருந்தபோது, தே.மு.தி.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தன.

"மோடியா.. இந்த லேடியா" என்ற முழக்கத்தை ஜெயலலிதா முன்வைத்த அந்தத் தேர்தலில், எல்லா இடங்களையும் அ.தி.மு.க. அள்ளிவிட்டபோதிலும், பா.ஜ.கவுக்கு இரண்டு இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்க விஷயமாகவே இருந்தது.

ஆனால், தேசிய அளவில் பா.ஜ.க. குறித்த பார்வை மாறியிருக்கும் நிலையில், அ.தி.மு.கவுடனான கூட்டணியையே அக்கட்சி நம்பியிருக்கிறது. அ.தி.மு.க. தலைவர்களும் பா.ஜ.க. குறித்து எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்க தயங்குகின்றனர்.

ஐந்து மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. 109 இடத்திற்கும், 114 இடத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றார். பாஜக தலைவர்களே தங்கள் கட்சியின் தோல்வியை ஏற்றுக்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தமிழக கூட்டணி கணக்குகளை மாற்றுமா?

பட மூலாதாரம், Getty Images

டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ளவிருப்பது காங்கிரஸ் - தி.மு.க. இடையிலான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது.

ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் அவ்வளவு சுலபமாக இருக்காது. தி.மு.க., காங்கிரஸ் தவிர விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகியவையும் தற்போது இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஆகவே 2009ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டதைப்போல காங்கிரசிற்கு 15 இடங்கள் கிடைப்பது கடினமாகவே இருக்கும்.

இருந்தபோதும் மத்தியில் ஆட்சி அமைத்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ள காங்கிரசும் 2011, 2014, 2016 என அடுத்தடுத்து தோல்விகளை எதிர்கொண்ட தி.மு.கவும் வெற்றியை ருசிக்க கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: