புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றும் ஆணை ரத்து

புதிய தலைமைச் செயலகம்

பட மூலாதாரம், Facebook

தி.மு.க. ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு இருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக தி.மு.க.வின் அப்போதைய தலைவர் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கிவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் பெரிதும் வீணடிக்கப்படுகிறது என அதிருப்தி தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் பணம் பெரிதும் வீணடிக்கப்பட்டதோடு, அதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அதனை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டதில் 5 கோடி ரூபாய் மேலும் செலவழிக்கப்பட்டது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மு.கருணாநிதி

பட மூலாதாரம், FACEBOOK/PG/KALAIGNAR89

புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விசாரணை ஆணையத்திற்கு புதிய நீதிபதியை நியமித்து விசாரணையைத் தொடரும் திட்டமில்லையென்றும் தெரிவித்தார். அடுத்த கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புக் காவல்துறை மேற்கொள்ளுமெனத் தெரிவித்தார். இதற்கான அரசாணை கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தகுந்த ஆய்வுக்குப் பிறகே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் இதில் முறைகேடு ஏதும் இல்லையென்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

தி.மு.க. தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், "இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டாமல் அவசரகதியில் மாற்றப்பட்டுள்ளன. தவிர இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியதில் உள்நோக்கம் உள்ளது. ஆகவே இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் 629 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனால்தான், இது தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, விசாரணை ஆணையம் தனது விசாரணையை முழுமையாக முடிக்காத நிலையில், அதன் அடிப்படையில் அந்த வழக்கை லஞ்ச ஒழிப்புக் காவல்துறைக்கு மாற்றியது செல்லாது என்று கூறி இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: