தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Twitter

தமிழ்நாட்டில் பொருளாதார நிலையை மேம்படுத்த ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் த்ரே உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் முதல் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்ற பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கட்கிழமையன்று முதல் முறையாகக் கூடியது. பேரவைக் கூட்டத்தின் முதல் நாளான இன்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரையில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1.வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான மத்திய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும்.

2. மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.

3. இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி வந்துள்ளது. இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

4. கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும். 11 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

5. தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழ்நாட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழி இணை - அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 343ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

6. சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தை வேறு எந்தப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்காமல், அதன் தன்னாட்சி நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

7. ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட, இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு மத்திய அரசை வற்புறுத்தும்.

8. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்களில் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

9. மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவர் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும். அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்திட 'சேவைகள் உரிமைச் சட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

10. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கிறது. தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் த்ரே, முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

11. தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படும்.

12. வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

13. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும்.

14. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

15. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

16. கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரும்.

17. குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்ட்' வழங்கப்படும்.

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Facebook

18. சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களது தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெயரில், 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

20. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்.

21. சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் சென்னை-பெங்களூரு தொழில் பெருவழியிலும் தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

22. கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி, மின் சேமிப்பை உயர்த்துதல் மற்றும் விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், TN GOVERNMENT

23. 2016ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

24. தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை 'சிங்காரச் சென்னையாக' மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில், சென்னையில் மாநகரக் கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், 'சிங்காரச் சென்னை 2.0' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

25. வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும் வல்லுநர்களை உள்ளடக்கிய 'சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு' அமைக்கப்படும்.

26. கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

27. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே, 50:50 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில், ஒன்றிய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

28. தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும். பழங்காலக் கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

29. தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறக்கட்டளைச் சட்டம் இந்திய நாட்டிற்கே ஒரு முன்மாதிரி சட்டமாக விளங்குகிறது. கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.

30. வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.

31. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை தமிழ்நாடு அரசு வரவேற்கும். அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும். இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

32. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தும்.

33. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை நீக்கவும், அவை நீக்கப்படும் வரையில், தற்போதைய வருமான வரம்பினை 8 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தவும், தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தும். வெவ்வேறு சமூகங்களின் பின்தங்கிய நிலையை நிர்ணயிப்பதில், மாநில அரசின் அதிகாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

34. அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும். பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும்.

ஆளுநர் உரையுடன் துவங்கியுள்ள இந்தக் கூட்டத் தொடர் 24ஆம் தேதிவரை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :