"சென்னை அருகே பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை"

சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை"

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் இயல்பை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங் களை வறட்சி மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து 1987-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது.

இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை ஒட்டிய காவேரிப்பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கை யான நீண்ட கால்வாய் வடிவில் அணை அமைந்திருப்பது (Buried Channel) கண்டறியப்பட்டது." இந்த இயற்கையான அணையை வளப்படுத்தினால் வட தமிழகத்தின் தண்ணீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யலாம் என்று அந்த செய்தியில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தினத்தந்தி: 'இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது'

கமல்

பட மூலாதாரம், Getty Images

'இந்து' என்ற சொல் மாற்றான் கொடுத்தது என கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

"இந்நிலையில் 'பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண...' என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் பதிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.

சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, 'இந்து' என்ற வார்த்தையை சொல்லவில்லை.

முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் 'பெயராக', 'மதமாக' கொள்வது எத்தகைய அறியாமை" உள்ளிட்ட கருத்துகளை கமல் தனது காணொளியில் தெரிவித்துள்ளதாக தினத்தந்தியின் செய்தி விவரிக்கிறது.

இலங்கை

தினமணி: சூரியனின் வெளிப்பரப்பை ஆராய "மிஷன் ஆதித்யா' திட்டம்

சூரியனின் வெளிப்பரப்பை ஆராய "மிஷன் ஆதித்யா' திட்டம்

பட மூலாதாரம், ISRO

சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு "மிஷன் ஆதித்யா' திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"யுவிகா 2019' திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ள 108 மாணவ, மாணவிகளுடன் இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

அப்போது, 2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய்வதற்கான "மிஷன் ஆதித்யா' திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ உத்தேசித்திருப்பதாக சிவன் குறிப்பிட்டார்.

"யுவிகா' திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், ஆமதாபாதில் உள்ள விண்வெளி செயலாக்க மையம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி செயலாக்க மையம் ஆகிய நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "கைமாறும் உரிமங்கள்"

ஜெட் ஏர்வேஸ்

பட மூலாதாரம், Getty Images

நிதி நெருக்கடியால் நிறுத்தப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான சர்வதேச விமான இயக்கு உரிமங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கு தற்காலிகமாக பிரித்துக்கொடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"விமானங்களை இயக்குவதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் இயலாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாடு கடந்த மாதம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

அதையடுத்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான உள்நாட்டு விமான சேவை உரிமங்களை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது போன்று, நேற்று நடந்த கூட்டத்தில் ஜெட் ஏர்வேஸின் சர்வதேச விமான இயக்கு உரிமங்களையும் தற்காலிகமாக மற்ற நிறுவனங்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :