காங்கிரஸை காப்பாற்றிய தென்னிந்தியா: வேறொரு தலைமை தேவையா?

  • சஜ்சய் மஜூம்தார்
  • துணை நிர்வாக ஆசிரியர், பிபிசி
சோனியா

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எந்த வகையில் பார்த்தாலும், அபாரமானது என்பதைவிடக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக, தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் இரண்டாவது பிரதமராக நரேந்திர மோதி இருக்கிறார். இந்திரா காந்தி 1971ல் இதுபோல வெற்றி பெற்றார்.

இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வலுவான பகுதிகளை பாஜக தக்க வைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, கிழக்கிலும், தெற்கிலும்கூட புதிதாக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே அதிகரித்திருக்கிறது.

ராகுல் காந்தி தமது குடும்பத்தினரின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் தோல்வி அடைந்திருக்கிறார். 1999க்குப் பிறகு முதல் முறையாக அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு மூன்றாவது முறையாக அங்கு அந்தக் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது.

மோதியின் மந்திரம்

வெற்றி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு முழு காரணம் நரேந்திர மோதிதான். இந்திரா காந்திக்குப் பிறகு அதிக வலுவான பிரதமராக அவர் எளிதில் உருவெடுத்திருக்கிறார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சரியாக செயல்படாதது போன்ற காரணங்கள் உள்பட, கட்சிக்குள் நிறைய பலவீனங்கள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் சமாளித்துள்ள மோதி, நேரடியாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து வகுப்பு மக்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், பிரிவினைகள், சாதி அடிப்படை என - பல வகைகளில் வெவ்வேறான கட்சிகளை ஒருங்கிணைத்து கவனமாக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி - பிரதமரின் சவாலை சந்திக்க முடியாமல் பின்தங்கிவிட்டது.

வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, விவசாயிகள் துன்பம் போன்ற சமூகப் பொருளாதார விஷயங்களைக் காட்டிலும், இந்துத்வா மற்றும் தேசப் பாதுகாப்பு என்ற அம்சங்கள் அதிக சக்திமிக்க விஷயங்களாக இருக்கும் என்பதை நரேந்திர மோதி நிரூபித்துள்ளார்.

தவிடுபொடியான எதிரணி

எதிரணியினரின் தோல்விக்கு ராகுல் காந்தியை மட்டுமே குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு ராகுல் நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், PRAKASH SINGH

நரேந்திர மோதியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது - ”காவலாளியே திருடராக உள்ளார்” என்று பேசியது - தரம் தாழ்ந்ததாகிவிட்டது, அதுவே எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிட்டது.

கூட்டணிக் கட்சிகளை சேர்க்க முடியாமல் போனது, வேட்பாளர்களை தாமதமாகத் தேர்வு செய்தது, கடைசி நேரத்தில் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்க முடிவு செய்தது ஆகியவை தோல்விக்கான காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், உண்மை என்னவென்றால், ராகுல் காந்தியை மட்டுமின்றி அனைத்து பெரிய அரசியல் கட்சித் தலைவர்களையும் பாஜக நசுக்கிவிட்டது.

உத்தரப்பிரதேசத்தில் சிறிது எதிர்ப்பைக்காட்டுவதற்காக மகா கூட்டணி அமைத்து தோல்வி கண்ட அகிலேஷ் யாதவ், மாயவதி, நரேந்திர மோதியுடன் நேரடியாக மோதிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவருடைய சொந்த மாநிலத்திலேயே தோற்கடிக்கப்பட்டது போன்றவை நடந்துள்ளன.

முன்னர் தோழமைக் கட்சிகளாக இருந்து, இப்போது எதிரணியில் இருந்த கட்சிகளுக்கும் பதிலடி தரப்பட்டுள்ளது - ஒடிசாவில் நவீன் பட்நாயக், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் எதிரணி கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ள வேட்பாளராக சந்திரசேகர ராவ் தம்மை முன்னிறுத்தினார். அவர்களுக்கும் பலத்த அடி கிடைத்துள்ளது.

விரிவாகும் பாஜக

இந்தியாவின் இன்றைய வரைபடம் பாஜகவின் பிரமிக்கத்தக்க வெற்றியைக் காட்டும் கண்ணாடியைப் போல உள்ளது.

2014ல் முழு வெற்றி பெற்றதைப்போல குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்களில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்திருக்கிறது என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் சில இடங்களை இழந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இழக்கவில்லை. பிகார், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அசாமில் முந்தைய வலுவான ஆதரவை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் கட்சி புதிய பகுதிகளிலும் பரவி இருக்கிறது என்று பாஜகவினர் மற்றும் அதன் இரட்டைத் தலைமைகள் - மோதி மற்றும் அமித் ஷா - மகிழ்ச்சி அடைந்திட முடியுமா?

மேற்குவங்கம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பு எதிர்க்கட்சிகள் வைத்திருந்த இடங்களை இப்போது பாஜக பிடித்திருக்கிறது.

அந்த வகையில் மாநிலக் கட்சிகளுக்கு சரியான அச்சுறுத்தலைத் தரும் கட்சியாக உருவாகியுள்ளது. குறைந்தபட்சம் மேற்கு வங்கம், ஒடிசாவில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை அந்தக் கட்சியே எதிர்பார்திருக்காது. இடதுசாரிகளை தோற்கடித்து இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்பது - அந்தக் கட்சிக்கும் மற்றும் சங் பரிவார், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அதிக அளவில் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்த மேற்குவங்கத்தில் இப்போது இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் என ஒருவர் கூட இல்லாத நிலை உருவாகி இருக்கிறது.

வாரிசு முறைக்கு பாதிப்பு

அமேதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள தோல்வியும், இந்தியாவின் பல பகுதிகளில் கிடைத்துள்ள முடிவுகளும், வாரிசு அரசியலுக்கு எப்படி முடிவு கட்டப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.

பாஜகவிலும் கூட வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் அனுராக் தாக்கூர், ராஜஸ்தானில் துஷ்யந்த் சிங், மகாராஷ்டிராவில் பூனம் மகாஜன் என சில பெயர்களை குறிப்பிடலாம்.

ஆனால், வாரிசு அரசியல் என குறிப்பிடும்போது பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் மீது, காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் மீது அதிகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

அவர்களில் பெரும்பாலானோர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ராகுலை தவிர, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா, ஜிதேன் பிரசாத், அசோக் சவான் போன்றவர்கள் தோல்வி அடைந்த காங்கிரஸ் வாரிசு அரசியல்வாதிகள் சிலர்.

முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள், உறவினர் தர்மேந்திர யாதவ், லாலு யாதவின் மகள் மிசா பாரதி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோரும் கூட இந்தப் பட்டியலில் சேர்வார்கள்.

சிலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திமுக தலைவராக இருந்த கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி, உறவினர் தயாநிதி மாறன் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால், வாக்குகளைப் பெறுவதற்கு, குடும்பத்தின் பெயர் மட்டுமே போதுமானதல்ல என்பது தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தோல்வி, இதை மிக உறுதியாக வெளிக்காட்டுகிறது.

காங்கிரஸை காப்பாற்றிய தென்னிந்தியா

திமுக வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR

எனவே, இந்தியாவின் மிகவும் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு எந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது?

தென்னிந்தியா கை கொடுக்காமல் போயிருந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை அந்தக் கட்சி சந்திக்க நேரிட்டிருக்கும்.

அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள 50க்கும் சற்றும் அதிகமான இடங்களில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்கள் மட்டும் ஏறத்தாழ 30 இடங்களைக் கொடுத்திருக்கின்றன. மீதி இடங்களில் பெரும்பாலானவை பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்துள்ளன.

ஆனால் உத்தர பிரதேசம், பிகாரில் ஏறத்தாழ அந்தக் கட்சி துடைத்தெறியப் பட்டுள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், இப்போது தோல்வியை சந்தித்துள்ளது.

வாக்களார் அடையாள அட்டையோடு மக்கள்

பட மூலாதாரம், Getty Images

ராகுல் காந்தியின் தலைமை தற்போது தீவிரமாக கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் அவருடைய சகோதரி பிரியங்காவாலும் வெற்றியை தேடித்தர முடியாமல் போய்விட்டது. எனவே - காங்கிரஸ் வேறொரு தலைமையைத் தேடுமா?

அதிக முக்கியத்துவமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் மிகப் பெரிய பெரும்பான்மை இருக்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால் - அப்படித்தான் நடக்கும் என தெரிகிறது - மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும்.

அப்படி நடந்தால் எதிர்க்கட்சிகள் பெயரளவில் மட்டுமே மக்களவையில் இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :