கம்யூனிஸ்ட் கட்சிகளின்பெருவீழ்ச்சி: ’இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ - இந்திய இடதுசாரி கட்சிகளின் சரிவுக்கு மேட்டிமைத்தனம்தான் காரணம்?

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
மக்களவைத் தேர்தல் 2019: இடதுசாரி கட்சிகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய தேர்தல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை இந்த மக்களவை தேர்தலில் சந்தித்து இருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

இழப்பதற்கு ஒன்றும் இல்லை, பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் காத்திருக்கிறது என்றார் கார்ல் மார்க்ஸ். தேர்தல் அரசியலில் இழப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.

2004 தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகளுக்கு 59 மக்களவை உறுப்பினர்கள் இருந்தார்கள், அது மெல்ல கரைந்து இப்போது வெறும் ஐந்தாக சுருங்கி இருக்கிறது. அவர்கள் முன்னர் ஆட்சி செய்த மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள் இடதுசாரிகள்.

மக்களவைத் தேர்தல் 2019: இடதுசாரி கட்சிகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச அளவில் ஆயுத புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற இடதுசாரிகள் முயன்று கொண்டிருந்த போது தேர்தல் அரசியலில் புகுந்து இடதுசாரிகள் முதல்முறையாக ஆட்சி அமைத்தது கேரளத்தில்தான். ஆனால், இப்போது அங்கு அவர்கள் வென்றது ஒரே ஒரு தொகுதியில்தான்.

இடதுசாரிகளின் எதிர்கால முகமாக பார்க்கப்பட்ட கன்னையா குமார் பெகுசாராய் தொகுதியில் மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கிறார்.

அகில இந்திய அளவில் தமிழகத்தில் நான்கு, கேரளாவில் ஒன்று என மொத்தம் ஐந்து தொகுதிகளிலேயே வென்று இருக்கிறார்கள்.

இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

வீழ்ந்த தொழிற்சங்கங்கள்

உலகமயமாக்கலை சரியாக உள்வாங்காததுதான் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் இடதுசாரி சிந்தனையாளரும் எழுத்தாளருமான இரா.முருகவேள்.

Confessions of an Economic Hit Man புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்த்தவர் இரா.முருகவேள்.

இடதுசாரி

பட மூலாதாரம், NurPhoto / getty

அவர், "இடதுசாரி கட்சிகள் அமைப்பை விரிவாக்க தவறிவிட்டன. சந்தை திறந்துவிட்டப் பின் பல மாற்றங்கள் சர்வதேச அளவில் நடந்தன. அதற்கேற்ப திட்டங்களை வகுக்க இடதுசாரி கட்சிகள் தவறிவிட்டன" என்கிறார்.

தொழிற்சங்கங்கள்தான் இடதுசாரிகளின் பலம். ஆனால், தொழில்துறை மாற தொடங்கியப் பின், சங்கங்கள் ஆட்டம்காண தொடங்கின. மாற்றங்களுக்கு ஏற்றவாறு இடதுசாரிகள் மாறவில்லை. இது தேர்தல் அரசியலில் உள்ள இடதுசாரிகள் கட்சிகளிலின் வெற்றி தோல்விகளிலும் தாக்கம் செலுத்த தொடங்கிவிட்டது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முருகவேள்.

அரசியலற்ற கல்வி

மாநிலவாரியாக இடதுசாரிகளின் தோல்வியை பட்டியலிட்ட அவர், அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

தெலங்கானாவை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் இடதுசாரி மாணவர் சங்கங்கள் வலுவாக இருந்தன. ஆனால், கல்வி நிறுவனங்களில் தனியாரின் முதலீடு அதிகரித்தப் பின், மாணவர் சங்கங்கள் ஏற்படுத்துவது தடுக்கப்பட்டது அல்லது முற்றாக ஒடுக்கப்பட்டது. இதன் விளைவுதான் அந்த பகுதிகளில் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் முருகவேள்.

இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

"மேற்கு வங்கத்தில் நில சீர்த்திருத்தம் செய்தது இடதுசாரி கட்சி. மக்களை அரசியல்மயப்படுத்தியதும் அவர்கள்தான். ஆனால், அவர்களே விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்ற நந்திகிராம், சிங்கூரில் வன்முறையை கையாண்ட போது மொத்த மக்களும், அபர்ணா சென், கெளதம் கோஷ் போன்ற அறிவு ஜீவிகளும் இடதுசாரிகளுக்கு எதிராக திரும்பினார்கள்.

இந்தியாவிடமிருந்து அந்நியப்பட்டு இருந்தபோது திரிபுராவில் இடதுசாரிகளால் வெல்ல முடிந்தது. ஆனால், இந்தியம் உள்வாங்க தொடங்கியப் பின், புதியவெளி அம்மக்களுக்கு திறந்தது. அம்மக்களின் எதிர்பார்ப்புகள் மாறியது. அதற்கேற்றவாரு செயலாற்றாமல் போனது அங்கு தோல்விக்கு காரணம்.கேரளாவை பொறுத்தவரை அங்கு காங்கிரஸும், இடதுசாரிகளும் மாறி மாறி வருகின்றன" என்று விவரிக்கிறார் இரா.முருகவேள்.

''நமக்குதான் இழப்பு''

''இடதுசாரிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறைந்ததால் நமக்குதான் இழப்பு'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

அவர், "சர்வதேச அளவிலான இடதுசாரிகளின் இருப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. உலக அளவில் இடதுசாரிச் சிந்தனைகளின் வீழ்ச்சியின் இன்னொரு பக்கமாக இனவாதம், மத வெறுப்பு பாசிசம், தீவிர தேசியவாதம், வலுவான தலைவர் எனும் கூப்பாடு ஆகியன இடம் பிடித்துக் கொண்டன. இதன் காரணமாக ஜனநாயக நிறுவனங்கள் சிதைகின்றன. அதுதான் இந்தியாவிலும் நடக்கிறது" என்கிறார்.

இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

பிற வெளிகாரணிகளை கடந்து இடதுசாரிகளின் இந்த தோல்விக்கு அவர்களே ஒரு முக்கிய காரணம் என்கிறார் மார்க்ஸ்.

"மார்க்சிஸ்ட் கட்சி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியவுடன் மேற்கொண்ட நிலச்சீர்திருத்தம் சிறப்புமிக்கது. ஆனால், தேர்தல் அரசியலுக்குப் அந்த கட்சியும் பலியானது, கட்சி அணிகள் காடையர்களாக மாறினார்கள் " என்கிறார் அவர்.

"புத்ததேவ் அரசு விவசாயிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றி கார்பொரேட்களுக்கு நிலத்தை கொடுத்தைக் கண்டித்து பேராசிரியர் சுமித் சர்கார் தனக்கு அளிக்கப்பட்ட ரவீந்திர புரஸ்கார் விருதை மார்க்சிஸ்ட் அரசிடம் திருப்பிக் கொடுத்தார். ஒரு உரையாடலின் போது அவர், மே.வங்க காவல் நிலையங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர்த் தலைவர்கள் உட்கார்ந்து கொண்டு நாட்டாமை செய்யும் நிலை இருந்தது என்பதை வேதனையோடு குறிப்பிட்டார். மாற்று சிந்தனையுடைய கட்சியாக இல்லாமல், மற்றொரு கட்சியாக மாறியதுதான் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு காரணம்" என்கிறார் மார்க்ஸ்.

மேலும் அவர், மாணர்களும், இளைஞர்களும் அரசியலற்றவர்கள் ஆனதையும் சுட்டிக்காட்டுகிறார் மார்க்ஸ்.

மார்க்சிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது என்கிறார் அவர்.

இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும்

இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதுதான் தோல்வியிலிருந்து மீள வழி என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி. மகேந்திரன், அதே நேரம் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளையும் சுட்டி காட்டுகிறார்.

அவர், "தமிழகத்தில் திமுக வருகிறது அல்லது அதிமுக வருகிறது. தீவிர வலதுசாரி கட்சியான பா.ஜ.கவால் வர முடியவில்லை. ஆனால், இடதுசாரிகள் ஆட்சி செய்த வங்கத்தில் எப்படி பா.ஜ.க வர முடிகிறது? இடதுசாரிகளிடமே ஏதோ சித்தாந்த சிக்கல் இருப்பதாக தானே அர்த்தம். இதனை சரி செய்யாமல், உள்ளூர் பிரச்சனைகளை கவனித்து அதற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளாமல் போனால் இடதுசாரிகளால் மீளவே முடியாது" என்கிறார் மகேந்திரன்.

உலகமயமாக்கலுக்கு பின் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்திய இடதுசாரி கட்சிகள் மாறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மகேந்திரன்.

மேட்டிமைத்தனம்

ஜவஹர்லல் நேரு பல்கலைக்கழகத்தின், அரசியல் கல்வி மையத்தின் பேராசிரியர் அஜய் குடவர்த்தி அண்மையில் எழுதிய கட்டுரையில் இடதுசாரிகளிடம் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி உள்ளார்.

"இந்திய இடதுசாரி மரபுல இருக்குற மார்க்சிசம் ஒரு மார்டனைசேஷன் தியரி மாதிரியே உள்ளது. விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஆதரிக்கிறார்கள் என்றாலும், அவர்கள் அதை செய்யும் விதத்துல ஒரு கலாசார மேட்டிமைத்தனத்துலதான் உள்ளார்கள். இந்த கல்ச்சுரல் மேட்டிமைத்தனமும் பொருளாதாரப் புரட்சி மனப்பான்மையும் சேர்ந்து இடது-பார்ப்பனீயம், வலது-பஹுஜன்னு நிறைய புது இருமைகளை உருவாக்குது." என்கிறார்.

மேலும் அவர், "ஒரு கலாசார புரட்சி கொண்டு வருவது மூலமாக இடதுசாரி சிந்தனை என்பது தன்னைப் புதுப்பித்துக் கொள்ளலாம். சித்தாந்தம் தொடர்பான தீவிர கணிப்புகள் எல்லாம் தாண்டி இடதுசாரி சிந்தனை என்பது கலாச்சாரம், ஜாதி இனம் பற்றிய சிக்கல்களை அணுக முன்வரணும். முதலாளித்துவத்தை விமர்சிப்பது போலவே நவீனத்துவத்தையும் தீவிரமா அலசணும்." எப்கிறார் அஜய்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :