தெரீசா மே விலகல்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது

தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஜெரிமி ஹண்ட், போரிஸ் ஜான்சன், ரோரி ஸ்டூவார்ட், எஸ்தர் மேக்வே
படக்குறிப்பு, தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ஜெரிமி ஹண்ட், போரிஸ் ஜான்சன், ரோரி ஸ்டூவார்ட், எஸ்தர் மேக்வே

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரீசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்கள்.

ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் ஏழாம் தேதி தாம் பதவி விலகப் போவதாக அறிவித்த தெரீசா மே, கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதுவரை நான்கு வேட்பாளர்கள் இப்பதவிக்காக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

  • வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட்
  • சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட்
  • முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன்
  • முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே

எனினும், இப்பதவிக்காக மேலும் பலர் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

Presentational grey line
Presentational grey line

ஜூன் இரண்டாம் வாரம் வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பித்தவர்கள் கடைசி இரண்டு நபர்களாக குறைக்கப்படுவார்கள். இறுதியில் ஜூலை மாதம், அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தெரீசா மே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தெரீசா மே

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, கன்சர்வேட்டிவ் கட்சியில் 1,24,000 உறுப்பினர்கள் இருந்தார்கள். 2005ஆம் ஆண்டு உறுப்பினர்களால் டேவிட் கேமரூனை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016ஆம் ஆண்டு தெரீசா மே போட்டியின்று தேர்வானார்.

முன்னதாக 10 டவுணிங் ஸ்ட்ரீட்டில் தாம் பதவி விலக போவதாக அறிவித்த தெரீசா மே, "பிரெஸிட்டை கொண்டுவர தனக்கு அடுத்து பிரதமராக வருபவர், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

"எல்லா தரப்பு வாதங்களும் சமரசம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே இத்தகைய ஒருமித்த கருத்து உருவாகும்" என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :