அதிமுக வெற்றி தினகரனால் பாதிக்கப்பட்டதா? - விரிவான தகவல்கள்

அதிமுகவின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா?

பட மூலாதாரம், Facebook

தினத்தந்தி: அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. ஓட்டுகள் பாதித்ததா?

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா?

"அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.

தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.

வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: 'மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு'

ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த மாதம் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பின்வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:

பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணித் தலைமையிடம் ஏற்கெனவே தலா ஒரு மாநிலங்களவை இடங்களை தேர்தல் கூட்டணி ஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஜூலையில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி, 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இந்த அடிப்படையில், தமிழகத்திலுள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல் ஆகிய அதிமுக உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவின் கனிமொழி ஆகியோருக்கான பதவிக் காலம் ஜூலையில் முடிவடைகிறது.

தேர்தல் ஏற்பாடுகள்: உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கும்.

அதன்படி, தமிழகத்தில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நிரப்புவதற்கான பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளன.

சட்டப் பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தீர்மானிக்கப்படுகின்றன.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற அடிப்படையில், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் 123 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், அந்தக் கட்சிக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாகவே இருப்பர்.

திமுகவைப் பொருத்தவரை இடைத்தேர்தலில் 13 இடங்கள் கூடுதலாகப் பெற்றதால் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளது. எனவே, காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் திமுகவுக்கும் மூன்று இடங்கள் கிடைப்பது எளிதாகும்.

பேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரிபாதியாக பிரித்துக் கொள்ளும் நிலையே உள்ளது எனவும், இதனால் ஆறு இடங்களும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், வாக்குப் பதிவினை நடத்துவதற்கான தேவை மிகமிகக் குறைவாகவே இருக்கும் என்று செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Presentational grey line

இந்து தமிழ்: 'மே 30-ல் பிரதமராக பதவியேற்கிறார் மோதி'

மோதி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். வரும் 30-ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளி யாகின. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களைப் பிடித்தது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இதில் 16-வது மக்களவையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோதி, அமைச்சரவையின் பரிந்துரையை அளித்தார். மேலும் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை ஆட்சியில் நீடிக்க பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய மக்களவையின் பதவிக் காலம் வரும் 3-ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உட்பட 3 ஆணையர்களும் குடியரசுத் தலைவரை சந்தித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை அளிப்பார்கள். அதன்பிறகு புதிய மக்களவையை அமைப்பதற்கான நடவடிக்கையை குடியரசுத் தலைவர் மேற்கொள்வார்.

தேசிய ஜனநாயக கூட்டணி யின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் மக்களவைத் தலைவராக நரேந்திர மோதி தேர்வு செய்யப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 30-ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Presentational grey line
Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா ராகுல் காந்தி?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயலாக்கம் மற்றும் வெளிப்பாடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடவுள்ள நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியல் இருந்த விலக ராஜிநாமா கடிதம் வழங்க வாய்ப்பிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சி கவிழும் வாய்ப்பிருக்க, அதனை எப்படி தக்க வைப்பது என்பது குறித்து காரிய கமிட்டியில் விவாதிப்படலாம். மேலும், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதுகுறித்தும் விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக, கடந்த வியாழக்கிழமையே ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை சோனியா காந்தி தடுத்ததாக கூறப்பட்டது. எனினும், இது உண்மையல்ல என்று அக்கட்சி மறுத்துவிட்டது.

"இது நானும் காங்கிரஸ் காரிய கமிட்டியும் சம்பந்தப்பட்ட விஷயம்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

Presentational grey line

'டைம்ஸ் ஆஃப் இந்தியா': 'உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில்  பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி'

'உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில்  பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி'

பட மூலாதாரம், Getty Images

2019 கிரிக்கெட் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளித்துள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) துவங்கியது.

பிரிஸ்டலில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாக்கிஸ்தான் 47.5 ஓவர்களில் 262 ரன்கள் எடுத்தது அடுத்து  பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதேபோல்  இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கார்டிப்பில் நடந்த பயிற்சி போட்டியில் இலங்கை அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் 'டாஸ்' வென்ற இலங்கை அணி முதலில் 'ஃபில்டிங்' தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி 42.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது என்று அந்த நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது.

45 லீக் போட்டிகள் மற்றும் 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதியாட்டம் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :