News Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: கே.ஏ. செங்கோட்டையன்

பட மூலாதாரம், Getty Images

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்கு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும் குழுவின் பரிந்துரைகளின் பேரில் முடிவுகள் எடுக்கப்படுமென்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், புதிய கல்விக் கொள்கை குறித்து குறிப்பிடும்போது, "முதலமைச்சர் நேற்று தெளிவான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்திருக்கிற சிலவற்றைப் பொறுத்தவரையிலும் வல்லுநர் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் வல்லுநர்களைத் தேர்வுசெய்வோம். விரைவில் இந்த வல்லுநர் குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டபோது, "மதிப்பீட்டற்காக ஐந்தாம் வகுப்பு, வகுப்பு எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டுவந்து, பிறகு நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது புதிய கல்விக் கொள்கையில் மீண்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது. அரசின் நிலைப்பாடு தெளிவானது. மதிப்பீட்டிற்காக பொதுத் தேர்வு என்று சொன்னோம். அதை வாபஸ் பெற்றிருக்கிறோம். அதுதான் நிலைப்பாடு" என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: கே.ஏ. செங்கோட்டையன்

பட மூலாதாரம், Facebook

புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடு எதையும் அறிவிக்கவில்லையென்றும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து திங்கட்கிழமை முதலமைச்சர் அறிவிக்கவிருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: