கு.க. செல்வம் திமுக: பாஜக தலைவரை சந்தித்த எம்எல்ஏவின் பதவிகள் பறிப்பு

கு,க. செல்வம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் பாஜகவில் இணைந்தார்

பட மூலாதாரம், Facebook

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்தை தொடர்ந்து, கட்சிப்பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் கு.க. செல்வம் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை தில்லியில் சந்தித்த கு.க. செல்வம் தான் பா.ஜ.கவில் இணையவில்லையென கூறியிருக்கிறார்.

திமுக.வின் சட்டமன்ற உறுப்பினரான கு.க. செல்வம், பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக செவ்வாய்க்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாகிவந்த நிலையில், மாலையில் தில்லியில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார் கு.க. செல்வம். 

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கும் நிலையில் பாரதப் பிரதமருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறினார். 

தொகுதி பிரச்சனை

மேலும் தன்னுடைய தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு மின் தூக்கிகளை அமைத்துத் தரும்படி அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்பதற்காக வந்ததாகவும் அதேபோல, ராமேஸ்வரம் கோவில் பகுதியை அயோத்திக்கு ஒப்பாக மேம்படுத்தும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

"தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவர்களை மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். மேலும், உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் ராகுல் காந்தியின் உறவைத் துண்டிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன்" எனச் செய்தியாளர்களிடம் கூறினார் கு.க. செல்வம்.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவிட்டீர்களா எனக் கேட்டபோது, தான் பாரதிய ஜனதா கட்சியில் இணையவில்லை என்றும் அகில இந்திய அளவில் எல்லாக் கட்சித் தலைவர்களும் பிற கட்சித் தலைவர்களுடன் சகஜமாகப் பேசுவார்கள்; அதுபோலத்தான் தமிழ்நாட்டிலும் இருக்க வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தன் தொகுதி குறித்து பேசுவதற்காக தான் வந்திருப்பதாகவும் மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் கோரிக்கை வைப்பதற்காக வந்ததாகவும் கு.க. செல்வம் தெரிவித்தார்.

உட்கட்சித் தேர்தல்

தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ளீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.கவில் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மட்டும் பதிலளித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமெனக் கூறுகிறார்களா எனக் கேட்டபோது, தான் அதைச் சொல்ல முடியாது எனத் தெரிவித்த கு.க. செல்வம், கட்சி தன் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: