உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
வெங்காயம்

பட மூலாதாரம், Getty Images

வெங்காய விலை அதிகரிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்து முருங்கைக்காய், உளுந்து பருப்பு என பல உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தவண்ணம் உள்ளது. விலைவாசி பிரச்சனையை பேசும் நேரத்தில், அடுத்துவரவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி இல்லாத பொருட்களுக்கு அரசு வரி விதிக்கப்போகிறது என தகவல்கள் பரவியுள்ளன.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன என்றும் எந்தெந்தப் பொருட்களுக்கு வரிவிதிக்க வாய்ப்புள்ளது எனவும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி

பட மூலாதாரம், FACEBOOK

கேள்வி: கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ள வெங்காய விலை குறைய வாய்ப்பு உள்ளதா? எப்போது வெங்காய விலை குறையும்?

பதில்: இது 25 ஆண்டுகளாக தொடரும் சிக்கல். வெங்காய விலையை எப்படி ஆளும் அரசு எதிர்கொள்கிறது என்பதுதான் முக்கியம். வெங்காய விளைச்சலில் பெரு முதலாளிகளை விட, சிறு,குறு விவசாயிகள்தான் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆண்டு, ரூ.5 வரை வெங்காய விலை குறைந்ததால், பல சிறு விவசாயிகள் வெங்காய விளைச்சலைத் தவிர்த்தார்கள். அதோடு வெங்காய பயிருக்கு மழை சரியான நேரத்தில் வரவில்லை.

தாமதம் ஏற்பட்டது. கடந்த முறை பல விவசாயிகள் தெருவில் வெங்காயத்தை வீசி சென்றபோது, மத்திய அரசாங்கம் அவற்றை வாங்கி குளிர்பதன கிடங்கில் வைத்திருந்தால், இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ.180 வரை அதிகரித்திருக்காது.

நிதியமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வெங்காயத்தைச் சாப்பிடாமல் இருக்கலாம். அவரை போன்றவர்கள் இந்தியாவின் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்கள். நம் நாட்டு சமையலில் வெங்காயம் இன்றியமையாதது.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

பட மூலாதாரம், Getty Images

குறைந்தபட்சம் விலை அதிகரிக்கத் தொடங்கிய நேரத்தில், வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்கலாம். அதனை செய்யாததால், விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பில் இருந்துதான் பணவீக்கம் ஏற்படத் தொடங்கும். தற்போது வெங்காயத்திற்கு அடுத்தபடியாக உளுத்தம் பருப்பின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெங்காயம், பருப்பு, பெட்ரோல் என விலைவாசி ஏறுவது பணவீக்கம் அதிகரித்துள்ளது என்பதற்கான சான்றுகள்.

விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டத்தில் வெங்காயத்தை விற்கிறார்கள் என்பதால், வெங்காய விலை குறைய, மத்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National sample survey office) எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி கிராமப்புற மக்கள் உணவுக்காகச் செலவு செய்வதை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இது எதனை உணர்த்துகிறது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து கட்டிடத் தொழிலில்தான் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

ராஜஸ்தானில் பூண்டி(Bundi) என்ற ஒரு ஊர் இருக்கிறது. இங்குள்ளவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள். தினக்கூலியாக மக்கள் எளிதில் கிடைப்பார்கள் என்பதால், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வேலைசெய்ய இந்த ஊர் தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல வண்டிகள் வரும். கடந்த நான்கு மாதங்களாக பூண்டிக்கு வண்டிகள் வருவதில்லை. இது ஒரு எடுத்துக்காட்டு. இதுபோல நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

படித்து, ஒரு நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்குபவர்களைவிட, தினக்கூலியாக உள்ள மக்கள் அதிகம் இருக்கும் நாடாக நம்நாடு உள்ளது. இவர்களுக்கு வேலை இல்லை என்றால், செலவு செய்வது குறையும்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National sample survey office) எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிராமத்தில் வாழும் மக்கள் பலர் உணவுக்காகச் செலவு செய்வதை குறைத்துவிட்டார்கள் என சொல்கிறது. இந்த புள்ளிவிவரங்களை மத்தியஅரசு ஏற்க மறுக்கிறது. ஆனால் வேலையில்லா திண்டாட்டத்தால், மக்கள் உணவுக்கு செலவிடுவதை குறைத்துவிட்டார்கள் என்றால் மற்ற எல்லா செலவுகளும் குறைந்துவிட்டது என்று அர்த்தம். நம் நாட்டின் பொருளாதாரம் எந்தளவு பாதிப்பை அடைந்துள்ளது என்பதை உணர்த்தும் புள்ளிவிவரமாக நான் பார்க்கிறேன்.

வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையோடு உணவுக்குச் செலவிடுவதை குறைத்த நபர்களை ஒப்பிட்டு பாருங்கள், அவர்கள் யார் என்று புரியும். அன்றாட கூலிக்கு செல்லும் ஏழை மக்களுக்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை, அவர்கள் உணவுக்குக்கூடச் செலவிடவில்லை.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பொருளாதார மந்தத்தில் இருந்து மீளவே இல்லையா?

பதில்: இந்தியாவில் கோலோச்சிய பல பெரிய கடன் கொடுக்கும் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. கடன் குறைந்துவிட்டதால், பைக்,கார் விற்பனை குறைந்துவிட்டது. அதோடு, எலக்ட்ரிக் வாகனங்கள் வரத்தொடங்கியுள்ளன. பைக்,கார் மார்க்கெட் சரிந்ததால், அந்த வண்டிகளுக்கு பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் வீழ்ச்சி அடைந்துவிட்டன. ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்த முக்கிய நபர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

கார்,பைக் மட்டுமல்லாது, முதல்முறையாக டிவி,வாஷிங் மெஷின் போன்ற உபகரணங்களின் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்பதுதான்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரம் என்ற என்ஜின் ஓட, கடன் என்ற எண்ணெய் தேவை. கடன் இல்லாததால், பொருளாதாரம் சரிந்த நிலையில் நீடிக்கிறது. நம் கண்களுக்கு தெரிந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம். பொருளாதார சரிவு பல துறைகளையும் பாதித்துள்ளது.

கேள்வி: அடுத்துவரவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் மேலும் வரிகளை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது. எந்தெந்த பொருட்களுக்கு வரிகளை உயர்த்த வாய்ப்புள்ளது?

பதில்: ஏப்ரல்-நவம்பர் 2019ல், 13 சதவீதமாக ஜிஎஸ்டி வரி வசூல் உயரும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் வெறும் மூன்றரை சதவீதம்தான் வரிவசூல் வளர்ந்துள்ளது. மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் சுருங்கியதால், வரி வசூலும் குறைந்துவிட்டது. தற்போது மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திருப்பித் தரவேண்டிய பணத்தை கொடுக்கமுடியாத அளவுக்கு பொருளாதாரம் சுருங்கிவிட்டது.

பணம் கொடுக்கவில்லை என்றால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என மாநில அரசுகள் தங்களது நிலையை சொல்லிவிட்டார்கள். இந்த நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லையோ, அதாவது உணவு பொருட்கள் பால், அரிசி,கோதுமை என எல்லா பொருட்களுக்கும் மத்திய அரசு வரிபோடலாமா என பார்க்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: