அமெரிக்கா நியூ ஜெர்ஸி மாகாணம்: கடும் துப்பாக்கி சூட்டில் அதிர்ந்த ஜெர்ஸி நகரம்: 6 பேர் பலி

துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் போலீஸ் அதிகாரிகள்

பட மூலாதாரம், AFP

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஜெர்ஸி நகரத்தில் நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் ஒரு போலீஸ்காரரும், பொதுமக்களில் குறைந்தது 5 நபர்களும் இறந்துள்ளனர்.

இந்த பகுதியில் இருந்த ஒரு கடை வளாகத்தில் சில போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கிதாரிகள் தடுத்துநிறுத்தியதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால், இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த பல பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவையும் மூடப்பட்டன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று தாங்கள் நம்பவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் போலீஸ் அதிகாரிகள்

பட மூலாதாரம், AFP

நியூ ஜெர்ஸியில் சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றி அதனை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிவந்த ஜோசப் சீல்ஸ் என்ற 39 வயது போலீஸ் அதிகாரி இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெர்ஸி நகர போலீஸ்துறை தலைவர் மைக் கெல்லி கூறுகையில், ''வீதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் பரவாமல் அதனை தடுக்கும் பணியில் இருந்த முன்னணி போலீஸ் அதிகாரி சீல்ஸ்'' என்று கூறினார்.

உள்ளூர் கல்லறை ஒன்றில், இரவு 12 மணிக்கு பிறகு (உள்ளூர் நேரப்படி) இந்த துப்பாக்கி சண்டை தொடங்கியதாக கெல்லி தெரிவித்தார்.

சந்தேக நபர்களை நோக்கி சண்டையிட முன்னேறியபோது ஜோசப் சீல்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.

இந்த துப்பாக்கி சண்டைக்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் சந்தேக நபர்கள் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: