டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை வெளியிட்டது அவை நீதிக்குழு

டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை தயாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது.

டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மான நடைமுறையில் இது முக்கியத்துவமான நடவடிக்கை.

ஜெர்ரி நாட்லர் தலைமையிலான அவை நீதிக்குழு வெளியிட்ட குற்றச்சாட்டின் முதல் பிரிவு டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகிறது. அடுத்த பிரிவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை தடுத்ததாக கூறுகிறது.

அத்துடன் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக யுக்ரைனுக்கான உதவியை நிறுத்திவைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுக்கும் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையே ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு இந்தக் குற்றச்சாட்டுகளை அங்கீகரித்துவிட்டால், இந்தவாரக் கடைசியில் இது பிரதிநிதிகள் சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். இந்த அவையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் அதிகம். அங்கே இந்த குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால், பிறகு அவை ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி ஆதிக்கம் மிகுந்த செனட் சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். செனட் வரையில் இந்த தீர்மானம் சென்றால், அனேகமாக அது ஜனவரி தொடக்கத்தில் நடக்கும்.

கடந்த ஜூலை மாதம் அதிபர் டிரம்ப் யுக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்த சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு குறித்து பெயர் வெளியிடவிரும்பாத நபர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த பதவி நீக்க விவகாரம் உருவெடுத்தது.

அந்த சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பின்போது, உள்நாட்டு அரசியலில் தமக்கு உதவும் வகையில் முன்னாள் துணை அதிபரும், அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் வாய்ப்புள்ளவருமான ஜோ பிடன் மகனுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தால் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி தருவதாக யுக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது அவரது மகன் உக்ரைன் மின்சார நிறுவனம் ஒன்றின் இயக்குநர் குழுவில் இணைந்தார்.

இரண்டாவதாக, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கீடு செய்தது ரஷ்யா அல்ல, யுக்ரைன்தான் என்று சொல்லப்படும் ஒரு வாதத்துக்கு யுக்ரைன் வலு சேர்க்கவேண்டும் என்று டிரம்ப் யுக்ரைன் அதிபரிடம் கோரியதாகத் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: