சென்னை தினம் கொண்டாட ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தோம் தெரியுமா?

சென்னை தினம் கொண்டாட ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தோம் தெரியுமா?
சென்னை

ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை சென்னை தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை வாங்கப்பட்ட தினம் இது. சென்னையின் பார்வையிலிருந்து சொல்ல வேண்டுமானால் சென்னை விற்கப்பட்ட தினம். இதைதான் சென்னை தினமென நாம் கொண்டாடுகிறோம்.

கோரமண்டல கடல் பகுதியில் காலூன்ற நினைத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், விஜயநகர ஆட்சியிலிருந்த இந்த நிலப்பரப்பில் தங்களுடைய வணிக செயல்பாடுகளை தொடங்க எண்ணியது.

அந்த சமயத்தில்  பழவேற்காடு முதல் சாந்தோம் வரையிலான நிலப்பரப்பு வெங்கடப்ப நாயக்கர் கட்டுபாட்டில் இருந்தது.

பிரிட்டிஷ்  கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளாரான  ஆண்ட்ரூ கோகன்,  வெங்கடப்ப நாயக்கருடன்  ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு  வங்க கடல் ஓரம் ஒரு பொட்டல் நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறார். அங்கு வணிக தளம் அமைக்க முடிவு செய்கிறார். 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த உடன்படிக்கை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

ஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை சென்னை தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

வெங்கடப்ப நாயக்கரின் தம்பியான அய்யப்ப நாயக்கர்தான் இந்த நிலத்தை வாங்க உதவி இருக்கிறார்

1639ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடம் அந்த நிலப்பரப்பை கொடுத்த பின்னர் தாமல் வெங்கடப்ப நாயக்கரும், ஐயப்ப நாயக்கரும் ஆங்கிலேயர் தங்கள் வியாபார அலுவலங்களை அமைக்க ஆள் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அந்த நிலப்பரப்பில்  வணிகத்திற்காகவும், குடியிருப்புக்காவும் ஜார்ஜ் கோட்டையை 1640-ல் கட்டுகிறார்கள். இந்த புள்ளியிலிருந்து சென்னை உருமாற தொடங்குகிறது.

மதராஸ் நகரத்தின் தொடக்க வரலாறு ரத்தம் தோய்ந்தது.

1646 ஆம் ஆண்டு கோல்கொண்டா படைகள் சென்னையை கைப்பற்றின. பல படுகொலைகள் அப்போது நிகழ்ந்தன.

1687ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசு வீழ்ந்து முகலாயர்கள் கைகள் ஓங்கின.  முகலாயர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டது. கிழக்கிந்திய கம்பெனி வலுவாக கால் ஊன்றியது.

அதே சமயம் இந்த நிலப்பரப்பின் மீது பலரின் கண்கள் இருந்தன.

1746ஆம் ஆண்டு பிரெஞ்ச் படைகள் சென்னையை கைப்பற்றினர். 1749 ஜார்ஜ்  கோட்டை பிரெஞ்ச் படைகளிலிருந்து மீட்கப்பட்டது.

மீண்டும் 1758ம் ஆண்டு பிரெஞ்சுப் படையால் சென்னை முற்றுகையிடப்பட்டது.

1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. செயின்ட் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டன. சுமார் மூன்று மாத காலம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படைகளின் முற்றுகையில் இருந்தது. இறுதியில் அவர்கள் தோற்று பின் வாங்கினர்.

இப்படியாக  இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்த நிலப்பரப்பு பிரிட்டனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

முதலில் இந்த நிலபரப்பு மதராஸப்பட்டணம் என்றே அழைக்கப்பட்டது.

ஏன் மதராஸப்பட்டணம் என அழைக்கப்பட்டது என்பது குறித்து பல புதிர்கள் உள்ளன.

பிரான்ஸிஸ் நிலத்தை வாங்கிய இடத்தில் ஒரு மீனவர் கிராமம் இருந்ததாகவும், அங்கு வசித்த மதரேசன் ஆங்கிலேயர்களை எதிர்த்ததாகவும், அவர் ஃபிரான்சிஸை வற்புறுத்தி தன் பெயரை வைக்க செய்ததாகவும் ஒரு கதை உள்ளது.

அது போல சென்னப்பட்டணம் என பெயர் வந்ததற்கும் இருவேறு காரணங்கள் சொல்கிறார்கள்.

சென்ன கேசவர், சென்ன மல்லீஸ்வர் ஆகிய கோயில்கள அங்கு இருந்ததாகவும்,  அதன் காரணமாகவே சென்னப்பட்டணம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

 மற்றொரு காரணமாக கூறப்படுவது ஆங்கிலேயர்களுக்கு இந்த நிலப்பரப்பை வழங்கிய வெங்கடப்ப நாயக்கரின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயர் இந்த நகரத்திற்கு சூட்டப்பட்டது

எப்படியாயினும் சென்னை தினம் என்பது  என ஆங்கிலேயர்கள் இங்கு கால் பதித்த நாள்.

இத்தனை ஆண்டுகாலங்களில் சென்னை பல விதங்களில் மாறி இருக்கிறது. வானுயிர் கட்டடங்கள் எழுந்துள்ளன. கூவம் நதி தன் ஜீவனை இழந்திருக்கிறது. ஆனாலும், இத்தனை அண்டு காலங்களில் மாறாமல் இருப்பது சென்னை நகரின் பன்முகத்தன்மைதான்.

காணொளி தயாரிப்பு : மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: