ப.சிதம்பரத்தை காவலில் எடுத்த சிபிஐ - இரண்டு நாட்களாக நடந்தது என்ன?

சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்படும் ப. சிதம்பரம்

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

படக்குறிப்பு,

சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்படும் ப. சிதம்பரம்

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று, புதன்கிழமை இரவு, சிபிஐ அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார்; இந்த விவகாரத்தில் இதுவரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு இது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி, சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 20 அன்று செவ்வாயன்று தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்கறிஞர் மொஹித் மாத்தூர் 3 நாள் அவகாசம் கேட்டார். அது பற்றி பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி சுனில் கௌர், வழக்கறிஞர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே சென்ற பின்னர் அவகாச கோரிக்கையை மறுத்தார்.

சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் கோரினார். அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுத்துவிட்ட ரஞ்சன் கோகோய் புதன்கிழமை முறையிடுமாறு கூறினார்.

சிதம்பரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

படக்குறிப்பு,

சிதம்பரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்

ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை விசாரிக்கக் கோரி, நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு முறையிட்டார்.

ஆனால், அந்த அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றது.

ப.சிதம்பரத்திற்கு கைதாவதில் இருந்து இடைக்கால விலக்கு வழங்க வேண்டும் என்று கபில் சிபல் முறையிட்டிருந்த நிலையில், அதனையும் தலைமை நீதிபதி அமர்வே முடிவு செய்யும் என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அமலாக்கத்துறை 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது முறையாக இன்று காலை முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்றது.

தரையில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள்

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

படக்குறிப்பு,

தரையில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள்

ஆனால் அங்கே சிதம்பரம் இல்லை என தகவல் வந்ததையடுத்து ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க, புதன்கிழமை, ஆகஸ்ட் 21 அன்று அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

புதன்கிழமை மதியம் 2.30 மணி அளவில் நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய மனுக்களின் பட்டியலில் சிதம்பரத்தின் மனு இடம்பெறும் வரை உடனடியாக விசாரிக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்தது.

தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் சிதம்பரத்தின் வழக்குரைஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் & விவேக் தன்ஹா காத்திருந்தார்கள். அயோத்யா குறித்த விசாரணை முடிந்தவுடன் சிதம்பரம் மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அயோத்யா வழக்கு விசாரணை முடிந்தும் சிதம்பரத்தின் மனு நீதிமன்ற விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை.

புதன்கிழமை மாலையிலும் அவரது மனு விசாரணை பட்டியலில் இடம்பெறவே இல்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

காரில் அழைத்து செல்லப்படும் சிதம்பரம்

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

படக்குறிப்பு,

காரில் அழைத்து செல்லப்படும் சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் தமது வழக்கறிஞர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம்.

சிபிஐ அல்லது அமலாக்கத் துறை தமக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அப்போது தெரிவித்தார்.

அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்ததாக செய்திகள் வெளியாகின.

பின்னர் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன், சிதம்பரத்தின் வீடு அமைந்துள்ள ஜோர் பாக் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த டெல்லி காவல் துறையினரும் வந்திருந்தனர்.

புதன் இரவு 10 மணியளவில் சிதம்பரம், அவரது வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: