Parle பிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: “ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை சரியும் இந்தியப் பொருளாதாரம்”

Parle பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி: சரியும் இந்திய பொருளாதாரம் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்து தமிழ்: "பார்லே பிஸ்கட் நிறுவனத்தின் விற்பனையில் சரிவு "

பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, விற்பனை சரிவின் காரணமாக 10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பின்னர் 18 சதவீதமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா சமீப காலமாக ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை பல துறைகளில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இதனால் நிறைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. புதிதாக வேலை வாய்ப்புகளும் வழங்கபடுவதில்லை. ஆட்டோமொபைல் துறையோ சரிவிலிருந்து மீள மத்திய அரசு சிறப்பு நிதியை அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

பார்லே மட்டுமல்ல இந்த மாத தொடக்கத்தில் ப்ரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கவும் இருமுறை யோசிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

தினமணி: "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: விசாரணை நிறைவு"

தினமணி: "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரம்: விசாரணை நிறைவு"

பட மூலாதாரம், Getty Images

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையிலான ஒருநபர் குழு நடத்திய விசாரணை நிறைவடைந்து விட்டது. அந்தக் குழு தமது அறிக்கையை அடுத்த மாதம் மத்தியில் தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறது தினமணி நாளிதழ்.

"இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு கடந்த மே மாதம் 6-ஆம் தேதி விசாரணை நடத்தியது.

அப்போது தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரமில்லை என்று தெரிவித்து, குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது.

முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சிக்க வைக்க மிகப்பெரிய சதித்திட்டம் நடப்பதாக வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் என்பவர் குற்றம்சாட்டினார்.

உச்சநீதிமன்ற அமர்வுகளை ஏற்படுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக் தலைமையில் ஒரு நபர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ஏற்படுத்தியது.

அத்துடன், நீதிபதி பட்நாயக்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குநர், உளவுத்துறை இயக்குநர், தில்லி காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி பட்நாயக் தலைமையிலான ஒரு நபர் குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தாது; அவரை சிக்க வைக்க சதி நடப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பட்நாயக் தலைமையிலான ஒரு நபர் குழு, வழக்குரைஞர் பைன்ஸ், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தது.

வழக்குரைஞர் பைன்ஸிடமும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் விசாரணை நடத்தியது. நீதிபதி பட்நாயக் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் பைன்ஸ் நேரில் ஆஜரானார்.

தற்போது விசாரணைக் குழு தனது அறிக்கையை தயாரித்து விட்டது. அக்குழு தனது அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய இருக்கிறது" என்று அந்நாளிதழ் விவரிக்கிறது.

Presentational grey line

தினத்தந்தி: "கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை"

Parle பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி: சரியும் இந்திய பொருளாதாரம் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலை அமைப்பதற்கான தளவாடங்கள் வந்தடைந்துள்ளன என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட உள்ள 3-வது அணு உலைக்கான, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய சாதனங்கள் வழங்கும் பணியை ரஷிய அரசின் அணுமின் உற்பத்தி கழகமான 'ரொசாட்டம்' நிறுவனத்தின் கிளை அமைப்பான ஏ.எஸ்.இ. ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 3-வது அணு உலைக்கான முக்கிய எந்திர தளவாடங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.

அதில், 'மோல்டன் கோர் கேட்சர்' எனப்படும் அணு உலை மையப்பகுதியின் தரையில் பொருத்தப்படும் பாதுகாப்பு கவசம், அணு உலை குழிக்குள் வைக்கப்படும் உதிரி பாகங்கள், உலர் பாதுகாப்பு கவசம், உருளை வடிவ அணு உலை, அரணில் வெப்பத்தை தாங்கும் அமைப்பு, கூரையை ஒட்டி அமைக்கப்படும் சாதனங்கள், அணு உலை போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அணு உலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உதவும் சாதனங்கள் ஆகும்.

'மோல்டன் கோர் கேட்சர்' என்ற பாதுகாப்பு கவசம் ரஷிய அதிநவீன ரக அணு உலைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்தினால், அணு உலையின் மைய கருவாக உள்ள பகுதி வெப்பத்தில் உருகி திரவமாக நேர்ந்தாலும், அது வெளியேறி அணு மின் நிலையம் உள்ள பகுதியில் அணுக்கதிர் வீச்சு எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்கு இந்த 'மோல்டன் கோர் கேட்சர்' உதவிகரமாக இருக்கும்.

3-வது அணு உலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உபகரணங்கள் மின்சாரம் தடைபட்டாலும் சிக்கல் இல்லாமல் தொடர்ந்து தானாக செயல்படும். அதாவது மின்சாரம் இல்லாத நேரத்திலும் இவற்றை இயக்குவதற்கு யாரும் தேவையில்லை. அதேபோல எச்சரிக்கும் கட்டமைப்பு இன்றியும் கூட, இந்த புதிய வகை சாதனங்கள் செயல்படக்கூடியவை. இதனைத்தொடர்ந்து உந்து சக்தியை தாங்கி கொள்ளும் திறன் கொண்ட ஒரு கூரை அமைப்பு, நியூட்ரான் நகர்வை கண்காணிக்கும் அரங்குகளுடைய எந்திரங்கள் விரைவில் கூடங்குளத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

இதுகுறித்து ஏ.எஸ்.இ. நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நடைபெறும் அனைத்து பணிகளுக்கான துணைத்தலைவர் ஆன்ட்ரி லெப்தேவ் கூறுகையில், கூடங்குளம் 3-வது அணு உலை அமைய உள்ள இடத்தில் நிறுவப்பட வேண்டிய முக்கிய எந்திர தளவாடங்கள் சப்ளை செய்யப்பட்டு விட்டன. இதனால் பணிகள் தாமதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும். தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி விரைவாக நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

தி இந்து - சமூகவலை கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான வழக்கு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

சமூகவலைதள பயனாளர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க அவர்களின் சமூகவலைதள கணக்குடன் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அரசு அங்கீகரித்த ஆவணத்தை இணைக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு பொதுநல வழக்குகளை விசாரித்துவரும் சென்னை உயர்நீதிமன்றம் இதில் தங்களுக்கு ஆர்வமும், உடன்பாடும் இல்லை என்று கூறியுள்ளது என தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ். மணிக்குமார் மற்றும் சுப்பிரமணீயம் பிரசாத் ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு இது குறித்து மேலும் தெரிவிக்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடுயுப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் உத்தரவில் , சைபர் குற்றம் தொடர்பாக போலீஸ் கூறும்போது பயனாளர்களின் தகவல்களை அளிக்குமாறு கூறியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதள பயனாளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்காக, ஆதார் தரவுகளை ஃபேஸ்புக்கின் சுயவிவரங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அந்நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

பிற நீதிமன்றங்களில் தற்போது நடைபெற்று வரும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பேஸ்புக் நிறுவனம் தரப்பில் முகுல் ரோத்தகியும், வாட்ஸ் அப் சார்பில் கபில்சிபலும், மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞரும் ம் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: