டொனால்ட் டிரம்ப்: “டிக் டாக் செயலியை வாங்குகிறீர்களா? எங்களுக்கு பணம் செலுத்துங்கள்” - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பேச்சு

"டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் வாங்குகிறதா?"அரசுக்கு பணம் செலுத்த சொன்ன டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்திய பிறகு டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விற்கும் நிர்பந்தத்திற்கு அந்நிறுவனம் வந்துள்ளது.

டிக் டாக் செயலி சீனாவின் கம்யூனிச கட்சிக்கு தகவல்களை அளிக்கிறது என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் ஆனால் இதை சீனாவும் டிக் டாக் நிறுவனமும் மறுக்கிறது.

வார இறுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, டிக் டாக்கை வாங்கினால் அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும் என கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் செப்டம்பர் 15ஆம் தேதியன்று, சீனாவின் பைட்டான்ஸ் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

"அவர்கள் விற்கும்போது எங்களுக்கு ஒரு தொகை கிடைக்க வேண்டும் ஏனென்றால் இது எங்களால்தான் நடக்கிறது. யாரும் இப்படி யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அப்படிதான் யோசிப்பேன். அதுதான் நியாயம்," என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"பொதுவாக தனியார் நிறுவனங்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒப்பந்தங்களில், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு முதலீட்டு கமிட்டியின் வழியாக, அரசு தனக்கான தொகையைக் கோர முடியாது," என அமெரிக்காவின் டிஎல்ஏ பைப்பர்ஸ் என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிக்கோலஸ் க்லைன் தெரிவிக்கிறார்.

சீன தினசரியான `சீனா டெய்லி`, சீன தொழில்நுட்ப நிறுவனத்திடம் நடத்தப்படும் இந்த "திருட்டை" சீனா ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்துள்ளது. மேலும் இதற்குப் பதிலடி கொடுக்க சீனாவுக்கு நிறைய வழிகள் உள்ளன என அதன் தலையங்கத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த கருத்து ஆச்சரியமளிப்பதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்க நிறுவனம் ஒன்று டிக் டாக்கை வாங்கினால், வாங்கும் விலையில் அரசிற்கு ஒரு பங்கு தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிக் டாக்

பட மூலாதாரம், Getty Images

ஞாயிறன்று வலைப்பூ பதிவு ஒன்றில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் நிர்வாக தலைவர் சத்ய நாடெல்லா மற்றும் டிரம்பிற்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிக் டாக்குடன் ஒப்பந்தம் ஏற்படுவது குறித்துத் தொடர்ந்து பேசிவருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

டிரம்ப் மற்றும் நாடெல்லாவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து வலைப்பூ பதிவைத் தவிர்த்து வேறெந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

முன்னதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் மென்பொருட்கள் என டிரம்ப் கருதும் சீன மென்பொருட்கள் மீது `வரும் நாட்களில்` நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்து இருந்தார்.

அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் `எண்ணற்ற` நிறுவனங்கள் சீன அரசுக்குத் தகவல்களைக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். முகவரிகள், அலைப்பேசி எண்கள், முக வடிவ அடையாளங்கள் ஆகியவற்றை நிறுவனங்கள் தருவதாகவும் பாம்பேயோ தெரிவித்தார்.

இருப்பினும் பாம்பேயோ எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: