UNSC on Kashmir காஷ்மீர் வரலாறு: 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
370 act on Kashmir revocation

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு & காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது.

இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றியமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி மேம்படுத்தி மறுபிரசுரம் செய்கிறோம்.

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு டொமினியன்களாகவும், 565 தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களாகவும் சுதந்திரம் பெற்றன.

தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களுக்கு மூன்றுவிதமான தேர்வுகள் இருந்தன. ஒன்று அவை இந்தியாவோடு செல்வது என்று முடிவெடுக்கலாம். அல்லது பாகிஸ்தானோடு செல்வதாக முடிவெடுக்கலாம். அல்லது தனித்திருக்கவும் முடிவெடுக்கலாம்.

அத்தகைய தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களில் ஒன்றுதான் காஷ்மீர்.

1846-ல் அமிர்தசரஸ் உடன்படிக்கை மூலம் பிரிட்டனிடம் இருந்து 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீரை விலை கொடுத்து வாங்கிய டோக்ரா வம்சத்தினர் அதனை பிரிட்டீஷ் இந்தியாவுக்கு உட்பட்ட ராஜ்ஜியமாக ஆட்சி செய்து வந்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்தியா விடுதலை பெற்றபோது டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரி சிங் காஷ்மீரை ஆண்டு வந்தார்.

ஹரி சிங்குக்கு எதிரான போராட்டம்

ஆனால், அவரது ராஜ்ஜியத்தின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர். டோக்ரா வம்ச ஆட்சியில் இந்த பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு பங்கோ, மதிப்போ இருக்கவில்லை; மாறாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாயினர் என்ற அதிருப்தி இருந்தது. எனவே டோக்ரா வம்ச ஆட்சிக்கு எதிராக ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி போராடி வந்தது. அப்போது காஷ்மீரை டோக்ரா வம்சத்துக்கு விற்ற அமிர்தசரஸ் உடன்படிக்கை கையெழுத்தாகி 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. காஷ்மீரை டோக்ரா வம்சத்தினருக்கு பிரிட்டாஷார் விற்ற அந்த உடன்படிக்கை செல்லாது என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி போராடிவந்தது.

370 act on Kashmir revocation anniversary

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

Hari Singh

அத்துடன் பிரதிநிதித்துவ ஆட்சி ஒன்று அமைந்து அந்த ஆட்சிதான் காஷ்மீரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவேண்டும் என்று ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்தப் பின்னணியிலும், மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது, தனித்திருப்பதா என்பது பற்றி தடுமாற்றத்திலேயே இருந்தார் என்று பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

370 act on Kashmir

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஷேக் அப்துல்லா

சூஃபி மரபின் செல்வாக்கு நிலவிய காஷ்மீர் முஸ்லிம்கள் தங்கள் ராஜ்ஜியம் பாகிஸ்தானுடன் செல்வதை விரும்பவில்லை, ஷேக் அப்துல்லாவுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கவில்லை.

இந்து ராஜ்ஜியமான காஷ்மீர், மதச்சார்பற்ற இந்தியாவில் சேர்வதை ஜம்முவில் இருந்த இந்துக்களே விரும்பவில்லை என்பதோடு, அப்படி சேரவேண்டும் என்று கோரியவர்களை இந்து விரோதிகள் என்றும் அவர்கள் வருணித்தனர் என பிரபல காஷ்மீர் விவகார வல்லுநரும், 'காஷ்மீர் டுவார்ட்ஸ் இன்சர்ஜன்சி' என்ற நூலின் ஆசிரியருமான பால்ராஜ் புரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

370 act on Kashmir revocation

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் பழங்குடிகளின் ஊடுருவல்

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை (North West Frontier Province) சேர்ந்த பழங்குடிகள் 1947 அக்டோபரில் நவீன ஆயுதங்களோடு காஷ்மீருக்குள் புகுந்தனர். பூஞ்சில் இருந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது அவர்களது நோக்கம்.

அவர்களை எதிர்கொள்ள மன்னர் ஹரிசிங் படைகளால் முடியவில்லை. இந்நிலையில், தமது அரசாட்சியைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுடன் இணைந்துகொள்ள சம்மதிக்கும் ஆவணத்தில் அவர், பல நிபந்தனைகளோடு 1947 அக்டோபர் 26-ம் தேதி கையெழுத்திட்டார். பாதுகாப்பு, வெளிவிவகாரம், தொலைத் தொடர்பு ஆகியவை மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்த ராஜ்ஜியத்தின் மீதான தமது இறையான்மையை இந்த உடன்படிக்கையின் எந்த ஷரத்தும் பாதிக்காது என்றும் அவர் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பழங்குடி ஊடுருவல்காரர்களை விரட்டிக்கொண்டு பாகிஸ்தான் எல்லைவரை சென்றன. அது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் போருக்கு வழி வகுத்தது.

370 act on Kashmir revocation

பட மூலாதாரம், SOPA Images/Getty Images

இந்நிலையில், 1947 நவம்பர் 2-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் பேசிய ஜவஹர்லால் நேரு, அமைதி திரும்பியவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் கருத்தை அறிய சர்வதேச மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அந்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதி

இதையடுத்து, 1947 டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானைப் பற்றி ஐ.நா.வுக்கு ஒரு புகார் அனுப்பியது இந்தியா. அந்தப் புகாரில், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது இந்தியா.

அந்த வாக்குறுதி வாசகம்:

"ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்திய அரசு ஆதாயம் அடைய முயல்கிறது என்ற தவறான எண்ணத்தை நீக்கும் வகையில், ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு, சகஜ நிலை திரும்பியவுடன், இந்த மாநிலத்தின் மக்கள் தங்கள் தலை விதியை சுதந்திரமாக முடிவு செய்வார்கள் என்பதை இந்திய அரசு தெளிவாக்க விரும்புகிறது. உலக அளவில் ஏற்கப்பட்ட முறையில் கருத்தறியும் வாக்கெடுப்பு ( 'ரெஃபரண்டம்' அல்லது 'பிளபிசைட்' ) நடத்தப்பட்டு அதன் மூலம் அந்த முடிவு எட்டப்படும். சுதந்திரமான, நியாயமான கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம்".

விஷயம் ஐ.நா.வுக்கு சென்றவுடன் அது இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதற்கே முதலில் முயன்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவின்படி இந்தியா -பாகிஸ்தான் பற்றிய ஐ.நா. ஆணையம் அமைக்கப்பட்டது.

370 act on Kashmir revocation

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜவஹர்லால் நேரு

ஐ.நா. தீர்மானம்

1948 ஏப்ரல் 21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானம் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்தும் பேசியது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டுமா, பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா என்பதை அந்த மாநில மக்கள் ஜனநாயக முறையில் சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யவேண்டும் என்பதை இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே விரும்புவதாக அந்த தீர்மானம் குறிப்பிடுகிறது. அத்துடன் அந்த மாநிலத்தில் இருந்து பழங்குடி ஊடுருவல்காரர்களும், அந்தப் பகுதியின் குடிமக்கள் அல்லாத பாகிஸ்தானியர்களும் அங்கிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதி செய்யவேண்டும், அங்குள்ள வெகுஜன அரசு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்குத் தேவையான அளவு குறைவான படைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற படைகளை இந்தியா விலக்கிக் கொள்ளவேண்டும் என்பவற்றை முன் நிபந்தனைகளாக ஐ.நா. தீர்மானம் குறிப்பிட்டது.

மாநிலத்தின் குடிமக்கள் யாருடன் இணைவது என்பது பற்றி முடிவெடுக்க முழு வாய்ப்பையும், சுதந்திரத்தையும் இரண்டு நாடுகளும் அளிக்கவேண்டும். ஐ.நா. நியமிக்கும் கருத்து வாக்கெடுக்கும் நிர்வாகிக்கு சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கான எல்லா அதிகாரங்களையும் இந்தியா அளிக்கவேண்டும். அதுவரை முக்கிய அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்றும் அந்த நிபந்தனை குறிப்பிட்டது.

ஆனால், பாகிஸ்தான் முழுவதும் வெளியேறவேண்டும். இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதால், இந்தியப் படைகளையும் வெளியேறச் சொல்வது ஆக்கிரமிப்பாளரையும், ஆக்கிரமிக்கப்பட்டவர்களையும் சமமமாக நடத்துவது போலாகும் என்று இந்தியா கருதியது. பாகிஸ்தானும் இந்த நிபந்தனையை எதிர்த்தது. அதன் பிறகும் ஐ.நா.வில் பல முறை இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

370 act on Kashmir revocation - UNSC on Kashmir

பட மூலாதாரம், Anadolu Agency/Getty Images

படக்குறிப்பு,

ஐநா பாதுகாப்பு அவை (கோப்புப்படம்)

ஆனால், 1957க்குப் பிறகு இந்தியாவுக்குப் பாதகமான எந்த தீர்மானமும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிறைவேறாதபடி அப்போதைய சோவியத் ஒன்றியம் பார்த்துக்கொண்டது.

பிறகு, தாங்கள் நாடு ஜம்மு காஷ்மீரில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக்கொள்ளாது என்று 1964ல் ஐ.நா.விடம் தெரிவித்தது இந்தியா.

அதன் பிறகும் காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதுண்டு. ஆனால், குறைந்தது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதில்லை.

1980களின் பிற்பகுதியில் காஷ்மீரில் தீவிரவாதம் பெரிதாகத் தலையெடுக்கத் தொடங்கியது. நீண்ட காலப் பகுதிகள் கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்தன.

எனினும் காஷ்மீர் தொடர்பாக வெகு காலத்துக்குப் பிறகு இந்தியா எடுத்த மிகப்பெரிய கொள்கை முடிவு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் அரசியல் நிலையை பெரிய அளவில் மாற்றியமைத்தது. அந்த நாளில்தான் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை அகற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமையை நீக்க இந்தியா முடிவெடுத்த நிலையில், அதை எதிர்த்து பாகிஸ்தான் எழுதிய புகார் பற்றி மூடிய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 2019 ஆகஸ்ட் 16 அன்று விவாதித்து. எனவே என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பின் பேசிய இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் "இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டமியற்றும் அமைப்புகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவுமே" என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: